“யார் இந்து, யார் முஸ்லிம் என கண்டுபிடிப்பது கஷ்டம்.”

68 வயது முகமது ஷபிர் குரேஷி தன்னையும் பக்கத்து வீட்டை சேர்ந்த 52 வயது அஜய் சைனியையும் பற்றி பேசுகிறார். அயோத்தியிலுள்ள ராம்கோட்டின் துராகி குவான் பகுதியில் நண்பர்களாக கடந்த 40 வருடங்கள் வசித்து வருகின்றனர்.

குடும்பங்கள் நெருக்கமாக இருக்கின்றன. தினசரி விஷயங்களை பகிர்ந்து கொண்டு,  ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குகின்றன. அஜய் சைனி நினைவுகூருகையில், “ஒருமுறை நான் வேலைக்கு சென்றிருந்தபோது, என் மகளுக்கு ஆரோக்கியம் சரியில்லை என எனக்கு அழைப்பு வந்தது. வீட்டுக்கு நான் விரைந்து சென்றபோது, குரேஷியின் குடும்பம் என் மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருந்துகள் வாங்கிக் கொடுத்ததாக என் மனைவி தெரிவித்தார்.”

இருவரும் அமர்ந்திருக்கும் கொல்லைப்புறத்தில் எருமை மாடுகளும் ஆடுகளும் அரை டஜன் கோழிகளும் நிறைந்திருக்கின்றன. இரு குடும்பத்தின் குழந்தைகளும் ஓடியாடி பேசி விளையாடிக் கொண்டிருக்கின்றன.

அது ஜனவரி 2024. அயோத்தியின் ராமர் கோவிலுக்கு பிரம்மாண்டமாக திறப்பு விழா நடைபெற தயாராகிக் கொண்டிருந்தது. அவர்களின் வீடுகளுக்கும் கோவில் வளாகத்துக்கும் இடையில் புதிய, கனமான இரட்டை தடுப்பு முள்வேலி போடப்பட்டிருந்தது.

எண்பதுகளில் குரேஷி வீட்டருகே சைனியின் குடும்பம் குடியமர வந்தபோது அவர் பதின்வயதில் இருந்தார். அப்போதிருந்த பாபர் மசூதியின் வளாக ராமர் சிலைக்கு சென்றவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு அவர் மாலை விற்கும் வேலை செய்தார்.

குரேஷிகளின் பூர்விகத் தொழில் இறைச்சி வெட்டுவது. அயோத்திக்கு வெளியே குடும்பத்துக்கு ஒரு கறிக்கடை சொந்தமாக இருந்தது. 1992ம் ஆண்டில் அவர்களின் வீடு தீவைத்து எரிக்கப்பட்டபின், வெல்டிங் வேலையை குடும்பம் செய்யத் தொடங்கியது.

PHOTO • Shweta Desai
PHOTO • Shweta Desai

இடது: அஜய் சைனி (பச்சை மேற்சட்டை போட்டு நாற்காலியில் அமர்ந்திருப்பவர்) மற்றும் அவரின் மனைவி குடியா சைனி டிசம்பர் மாதத்தில். பொது முற்றத்தை அவர்கள் குரேஷி குடும்பத்துடன் பகிர்ந்து கொள்கின்றனர். படத்தில் ஜமால், அப்துல் வாஹிது மற்றும் ஷப்பிர் குரேஷி ஆகியோரும் சைனியின் இளைய மகள், சோனாலியும் (சிவப்பு ஸ்வெட்டர்) உடனிருக்கின்றனர். வலது: குரேஷி மற்றும் அவரின் மனைவி ஆகியோர் சைனி குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன்

“இந்தக் குழந்தைகளைப் பாருங்கள்… இவர்கள் இந்துக்கள்… நாங்கள் முஸ்லிம்கள். இவர்கள் சகோதர சகோதரிகளாக பழகுகின்றனர்,” என்கிறார் குரேஷி சுற்றி விளையாடும் வட்டாரக் குழந்தைகளை சுட்டிக் காட்டி. “எங்களின் அன்றாட வாழ்க்கைகளை வைத்து, யாரென்ன மதம் என நீங்கள் சொல்ல முடியாது. எங்களுக்குள் நாங்கள் பேதம் பாராட்டுவதில்லை,” என்கிறார் அவர். அஜய் சைனியின் மனைவியான குடியா சைனி தலையசைத்து, “என்ன மதம் அவர்கள் என்பது எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை,” என்கிறார்.

குரேஷியின் ஒரே மகள் நூர்ஜகானுக்கு பத்தாண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்தபோது, “விழாக்களில் நாங்களும் கலந்து கொண்டு, விருந்தாளிகளை வரவேற்று கவனித்துக் கொண்டோம். குடும்பத்தில் இருப்பவரை போலத்தான் எங்களையும் பாவித்தார்கள். ஒருவருக்கு ஆதரவாக ஒருவரென இருந்தோம்,” என்கிறார் அஜ்ய் சைனி.

பேச்சு, ராமர் கோவிலுக்கு சென்றது. அவர்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து ராமர் கோவிலை பார்க்க முடிந்தது. ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் அக்கட்டடம் இன்னும் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. வானுக்கு உயர்ந்து, ஒரு பக்கம் க்ரேன் இயந்திரங்கள் நின்றிருந்த அந்தக் கட்டுமானம் குளிர்காலப் பனியில் மங்கலாக திறந்தது.

எளிய சிறு வீட்டிலிருந்து சில அடிகள் தொலைவில் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் அந்தக் கட்டுமானத்தை சுட்டிக் காட்டுகிறார் குரேஷி. “அங்கு ஒரு மசூதி இருந்தது. தொழுகை அழைப்பு ஒலிக்கும்போது, வீட்டில் நாங்கள் மாலை விளக்கு ஏற்றுவோம்,” என மசூதி இருந்த காலத்தை நினைவுகூருகிறார் அவர்.

ஆனால் ஜனவரி 2024-ல் குரேஷியை கவலைக்குள் ஆழ்த்தியது தொழுகை சத்தம் கேட்காதது மட்டுமல்ல.

”ராமர் கோவில் வளாகத்தருகே இருக்கும் இந்த வீடுகள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தும் திட்டங்கள் இருப்பதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல்-மே 2023-ல், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் இப்பகுதிக்கு வந்து, வீடுகளில் அளவுகளை எடுத்துக் கொண்டனர்,” என்கிறார் சைனி. குரேஷி மற்றும் சைனியின் வீடு, வளாகத்துக்கு அருகேயே இருக்கிறது.

குடியா சொல்கையில், “பெரிய கோவில் அருகே வந்ததும் இந்த வளர்ச்சி திட்டங்கள் சுற்றி நடப்பதும் எங்களுக்கு சந்தோஷம்தான். ஆனால், இந்த வெளியேற்றம் எங்களை பாதிக்கும்,” என்கிறார் அவர். “எங்களை வெளியேற்றிதான் அவர்கள் அயோத்தியை மாற்றுகிறார்கள்.”

கொஞ்ச தூரத்தில் இருக்கும் ஞானமதி யாதவ், ஏற்கனவே வீட்டை இழந்திருந்தார். அவரின் குடும்பம் தற்போது வைக்கோலும் மாட்டுச்சாணமும் வேயப்பட்ட ஒரு குடிசையில் வசிக்கிறது. “ராமருக்கு கோவில் கிடைப்பதற்காக, எங்களின் வீடு பறிபோகுமென நாங்கள் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை,” என்கிறார், குடும்பத்தை புதிய சூழலுடன் பொருத்த இன்னும் முயன்று கொண்டிருக்கும் அந்த விதவை. யாதவ்களான அவர்கள், பால் விற்று பிழைக்கின்றனர்.

PHOTO • Shweta Desai
PHOTO • Shweta Desai

ராமர் கோவிலுக்கு அருகே இருக்கும் வீட்டின் முற்றத்தில் ஞானமதி (இடது) தன் குடும்பத்துடன் (வலது). மகன் ராஜன் (நீலச்சட்டை) நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்

ஆறு அறைகள் கொண்ட அவரின் வீடு, கோவிலின் முகப்பு வாசலருகே அகிரனா பகுதியில் இருந்ததால், டிசம்பர் 2023-ல் இடிக்கப்பட்டது. “அவர்கள் புல்டோசரை கொண்டு வந்து என் வீட்டை இடித்தார்கள். வீட்டு வரி, மின்சார ரசீது போன்ற ஆவணங்களை நாங்கள் காட்ட முற்பட்டபோது, எந்த பயனுமில்லை என அதிகாரிகள் கூறினர்,” என்கிறார் மூத்த மகனான ராஜன். நான்கு குழந்தைகளும் முதிய மாமனாரும்  கொண்ட குடும்பம், அந்த இரவில் கூரையின்றி குளிரில் கிடந்தனர். “எதையும் எடுத்துக் கொள்ள எங்களுக்கு அனுமதி தரப்படவில்லை,” என்கிறார் அவர். தார்ப்பாய் கூடாரத்துக்குள் தஞ்சம் புகுவதற்கு முன், அக்குடும்பம் இரண்டு முறை வேறு இடங்களுக்கு நகர்ந்து விட்டது.

“இது என் கணவரின் பூர்விக வீடு. அவரும் அவரது சகோதரர்களும் ஐம்பது வருடங்களுக்கு முன் இங்கே பிறந்தார்கள். ஆனால் அதிகாரிகள் இதை புறம்போக்கு நிலம் என சொன்னதால், ஆவணங்கள் இருந்தும் எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை,” என்கிறார் ஞானமதி

போதுமான நிவாரணம் வழங்கப்பட்டால், அயோத்திக்குள்ளேயே வேறு நிலத்துக்கு இடம்பெயர முடியும் என்கின்றனர் குரேஷியும் அவரது மகன்களும். ஆனாலும் அந்த இடப்பெயர்வு சந்தோஷத்தை அளிக்காது. “இங்குள்ள அனைவருக்கும் எங்களைத் தெரியும். நல்ல உறவு இவர்களுடன் இருக்கிறது. இங்கு இருந்து நாங்கள், (முஸ்லிம்கள் அதிகமிருக்கும்) ஃபைசாபாத்துக்கு அனுப்பப்பட்டால், நாங்களும் பிற மக்களை போலாவோம்,” என்கிறார் ஷப்பிரின் இளைய மகன்களில் ஒருவரான ஜமால் குரேஷி. “அயோத்திவாசிகளாக நாங்கள் அப்போது இருக்க மட்டோம்.”

இதே உணர்வைக் கொண்டிருக்கும் அஜய் சைனி சொல்கையில், “எங்களின் நம்பிக்கை இந்த நிலத்தை சார்ந்தது. 15 கிலோமீட்டர் தள்ளி, தூரமான பகுதிக்கு நாங்கள் அனுப்பப்பட்டால், எங்களின் வணிகமும் நம்பிக்கையும் போய்விடும்.”

தூரப்பகுதிக்கு இடம்பெயருவதில் சைனி கொண்டுள்ள தயக்கமும் அவரின் பணி சார்ந்ததாகதான் இருக்கிறது. “இங்கிருந்து தினமும் 20 நிமிடங்கள் சைக்கிளில் பயணித்து, நயா காட்டின் நாகேஸ்வர்நாத் கோவிலில் பூ விற்க செல்வேன்.சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பொறுத்து 50-லிருந்து 500 ரூபாய் வரை வருமானம் கிட்டும். குடும்பத்துக்கென இருக்கும் ஒரே வருமானம் அதுதான். எந்த வித மாற்றமும் அதிக தூரப் பயணத்தையும் கூடுதல் செலவையும்தான் தரும்,” என்கிறார் அவர்.

ஜமால் சொல்கையில், “எங்கள் வீட்டுக்கு பின்னால் அற்புதமான கோவில் நிற்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். நம்பிக்கை சார்ந்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இது. அதை எதிர்க்க காரணமேதுமில்லை,” என்கிறார்.

“ஆனால், இங்கு வாழ எங்களுக்கு அனுமதி இல்லை. எங்களை வெளியேற்றுகிறார்கள்.”

PHOTO • Shweta Desai
PHOTO • Shweta Desai

இடது: இரட்டை தடுப்புக்கு முன்னிருக்கும் துராகி குவான் பகுதியின் வழியாக கோவிலுக்கு செல்லும் பணியாளர்கள். வலது: ராமர் கோவில் தளத்தின் முகப்பு வாசலில் வரிசையில் நிற்கும் பக்தர்கள்

வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோவில் வளாகத்தருகே இருக்கும் கண்காணிப்பு கோபுரம் மற்றும் ஆயுதம் தாங்கிய மத்திய ரிசர்வ் படையின் நடமாட்டத்தால் குடும்பங்கள் ஏற்கனவே அழுத்தத்தில் இருக்கின்றன. ”ஒவ்வொரு மாதமும் இங்கு வசிப்பவர்களை பரிசோதிப்பதற்காக பல்வேறு அமைப்புகளிலிருந்து நான்கு முறையேனும் ஆட்கள் இங்கு வருகிறார்கள். விருந்தாளிகளோ உறவினர்களோ இங்கு தங்குவதாக இருந்தால், அவர்களின் விவரங்களை நாங்கள் காவல்துறைக்கு கொடுக்க வேண்டும்,” என்கிறார் குடியா.

அகிரனா பகுதி மற்றும் கோவிலுக்கு அருகே இருக்கும் சாலைகளில் உள்ளூர்வாசிகள் பயணிக்க தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, அனுமன் கார்ஹி பகுதியை அடைய நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டும்.

ஜனவரி 22, 2024 அன்று நடக்கவிருந்த ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக, துராகி குவான் பகுதியிலிருக்கும் அவர்களது வீடுகளுக்கு முன் செல்லும் சாலைதான் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் கார்களில் செல்லும் சாலையானது.

*****

பிப்ரவரி 5, 2024 திங்கட்கிழமை அன்று, மாநில அரசு 2024-25 ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்து ராமருக்கு சமர்ப்பித்தது. “பட்ஜெட்டின் ஒவ்வொரு வார்த்தை, உறுதி மற்றும் சிந்தனையிலும் கடவுள் ராமர் நிறைந்திருக்கிறார்,” என்றார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். அயோத்தியில் உள்துறை கட்டமைப்புக்காக 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 150 கோடி ரூபாய் சுற்றுலா வளர்ச்சிக்கும் 10 கோடி ரூபாய், ராமாயணம் மற்றும் வேத ஆய்வு நிறுவனத்துக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கோவில் வளாகத்தின் பரப்பளவு 70 ஏக்கர் என சொல்லப்படுகிறது. பிரதான ராமர் கோவில் 2.7 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. மொத்த திட்டத்துக்கான நிதி ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளையிலிருந்து (SRJTKT) வழங்கப்படுகிறது. வெளிநாட்டு நிதியை அனுமதிக்க வகை செய்யும் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தின் (FCRA) கீழ் பதிவு செய்யப்பட அனுமதிக்கப்பட்ட மிக சில அமைப்புகளில் இந்த அறக்கட்டளையும் ஒன்று. இந்த அறக்கட்டளைக்கு இந்திய குடிமக்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வரி குறைப்பு உண்டு.

அயோத்தி மீது ஒன்றிய அரசு கொண்டிருக்கும் தனிப்பாசம், அயோத்தி மேம்பாட்டுக்கு அள்ளி அள்ளி வழங்கப்படும் நிதியில் தெரிந்து கொள்ள முடியும். 11,100 கோடி ரூபாய் ‘வளர்ச்சி’ திட்டங்களுக்கும் 240 கோடி ரூபாய் ரயில் நிலையத்தை புதுப்பிக்கவும், 1,450 கோடி ரூபாய் புது விமான தளத்துக்குமென ஒன்றிய அரசு ஒதுக்கியிருக்கிறது.

ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு, இன்னும் அதிக வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. “கோவில் திறக்கப்பட்டால் அன்றாடம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் சுற்றுலாவாசிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்கிறார் முகேஷ் மேஷ்ராம். உத்தரப்பிரதேச அரசாங்க சுற்றுலாத்துறையின் தலைமைச் செயலாளர் அவர்.

கூடுதல் சுற்றுலாவாசிகள் வருவதற்கான தயாரிப்புப் பணிகள், பழைய வீடுகள் மற்றும் நட்புகளை உடைக்கும் நகரவிரிவாக்க உள்கட்டமைப்பு பணிகளை கொண்டிருக்கும்.

PHOTO • Shweta Desai
PHOTO • Shweta Desai

இடது: குரேஷி மற்றும் சைனி குடும்பங்கள் ஒன்றாக கூடியிருக்கின்றனர். அன்மோல் (வலது ஓரம்), சோனாலி (சிவப்பு உடை), அப்துல் (வெள்ளை உடையில்), குடியா (புள்ளி வைத்த புடவை) மற்றும் பிறர். வலது: ஞானமதியின் மைத்துனி சந்தா. அவருக்கு பின்னால், அவரது வீட்டுக்கு முன் தொங்கவிடப்பட்டிருக்கும் ராமர் படம்

PHOTO • Shweta Desai
PHOTO • Shweta Desai

இடது: ‘ராமர் பாதை’ சாலையை விரிவுபடுத்துவதற்காக இடிக்கப்பட்ட கட்டுமானங்கள். வலது: புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையம். இந்த வாரத்தில் மாநில பட்ஜெட் 1,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை அயோத்தியின் உள்கட்டமைப்பு பணிகளுக்கும் 150 கோடி ரூபாயை சுற்றுலா வளர்ச்சிக்கும் 10 கோடி ரூபாயை சர்வதேச ராமாயண வேத ஆய்வு நிறுவனத்துக்கும் ஒதுக்கியிருக்கிறது

“தெருவோரத்தில் வசிக்கும் இஸ்லாமிய உறவினர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களது வீட்டின் ஒரு பகுதி, கோவில் வேலியை தொட்டிருந்ததால் இடிக்கப்பட்டது,” என்கிறார் குரேஷியின் மகனான ஜமால். கோவில் வளாகத்துக்கருகே உள்ள 70 ஏக்கர் நிலத்தில் வசிக்கும் 50 இஸ்லாமிய குடும்பங்களை உள்ளிட்ட 200 குடும்பங்களை அவர் சுட்டிக் காட்டுகிறார். கோவில் அறக்கட்டளை அந்த இடங்களை கையகப்படுத்தவிருப்பதால், அவர்கள் வெளியேற்றப்படும் நிலையில் இருக்கின்றனர்.

“கோவில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வீடுகளை அறக்கட்டளை விலைக்கு வாங்கி விட்டது. அந்த மக்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக நிலத்தை கையகப்படுத்த வேண்டியதில்லை,” என்கிறார் விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவரான ஷரத் ஷர்மா. ஆனால் கோவிலருகே உள்ள நிலத்தையும் வீடுகளையும் ஃபகிர் ராம் கோவிலையும் பத்ர மசூதியையும் கட்டாயப்படுத்தி அறக்கட்டளை விலைக்கு வாங்குவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இவற்றுக்கிடையில், ஏற்கனவே வெளியேற்றப்பட்ட யாதவர்கள், முகப்பில் ராமர் படத்தை தொங்கவிட்டிருக்கின்றனர். “போஸ்டரை தொங்கவிடவில்லை எனில், எங்களை இங்கு அவர்கள் வாழ விட மாட்டார்கள்,” என்கிறார் ராஜன். 21 வயதாகும் அவர், வீடு பறிக்கப்பட்ட பிறகு, அச்சுறுத்தலுக்கு ஆளான குடும்பத்தை காப்பாற்றவென தன் மல்யுத்த பயிற்சியை பாதியில் விட்டவர். “ஒவ்வொரு வாரமும், அதிகாரிகளும் அடையாளம் தெரியாத பலரும் இங்கு வந்து மிரட்டி நாங்கள் குடிசை கட்டியிருக்கும் இந்த மனையை விட்டு எங்களை வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். எங்களுக்கு சொந்தமான நிலத்தில் எந்தக் கட்டுமானமும் கட்ட எங்களை விட மறுக்கிறார்கள்,” என்கிறார் அவர்.

*****

“என் வீடு எரிந்து கொண்டிருந்தது. அதை சூறையாடிக் கொண்டிருந்தனர். எங்களை சுற்றி ஆவேசமாக கும்பல் இருந்தது,” என்கிறார் குரேஷி, இந்துத்துவ கும்பலால் பாபர் மசுதி தகர்க்கப்பட்ட டிசம்பர் 6, 1992 அன்று நடந்த அயோத்தியின் இஸ்லாமியர்கள் இலக்காக்கப்பட்ட சம்பவங்களை நினைவுகூர்ந்து.

முப்பது வருடங்களுக்கு பிறகு அவர் சொல்கையில், “அத்தகைய சூழலில் என் பகுதி மக்கள் என்னை மறைத்து பாதுகாப்பாக வைத்திருந்தனர். என் வாழ்நாள் முழுவதும் அதை நான் மறக்க மட்டேன், உண்மையாக.”

இந்துக்கள் அதிகம் வாழும் துராகி கான் பகுதியில் வாழும் இஸ்லாமியர்களில் குரேஷியின் குடும்பமும் ஒன்று. “வெளியேறுவதை பற்றி நாங்கள் நினைத்ததே இல்லை. இது என் பூர்விக வீடு. எங்களின் முன்னோர்கள் எத்தனை தலைமுறைகளாக இங்கு வாழ்ந்தனர் எனக் கூட தெரியாது. இங்கிருக்கும் இந்துக்களை போல நானும் இந்த இடத்தின் பூர்வகுடிதான்,” என்கிறார் கொல்லைப்புறத்தில் இரும்புக் கட்டிலில் குரேஷி அமர்ந்தபடி. இரு சகோதரர்கள் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் எட்டு மகன்கள், அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் கொண்ட பெரும் குடும்பத்தின் தலைவராக அவர் இருக்கிறார். அங்கேயே தங்க முடிவெடுத்த 18 குடும்ப உறுப்பினர்களையும் பக்கத்து வீட்டார்கள் மறைத்து வைத்து காத்தனர் என்கிறார் அவர்.

குடியா சைனி சொல்கையில், “அவர்கள் எங்களின் குடும்பத்தினரை போல. எங்களின் சந்தோஷத்திலும் துன்பத்திலும் உடன் நின்றவர்கள் அவர்கள். இந்துவாக இருப்பதால் அவர்களுக்கு நெருக்கடி நேரும்போது உதவக் கூடாது என்றால், அத்தகைய இந்துத்தன்மையை வைத்துக் கொண்டு ஒருவர் என்ன செய்வது?” எனக் கேட்கிறார்.

மேலும் குரேஷி, “இது அயோத்தி. இங்குள்ள இந்துக்களையும் இஸ்லாமியரையும் உங்களால் புரிந்து கொள்ள முடியாது. இந்த மக்கள் எவ்வளவு அந்நியோன்னியமாக இருக்கிறார்களென உங்களால் புரிந்து கொள்ள முடியாது,” என்கிறார்.

PHOTO • Shweta Desai
PHOTO • Shweta Desai

இடது: ‘அவர்கள் எங்களின் குடும்பத்தை போன்றவர்கள். எங்களின் துன்பத்திலும் சந்தோஷத்திலும் உடன் நின்றவர்கள்,’ என்கிறார் குடியா சைனி. வலது: ஷப்பிரின் பேரக்குழந்தைகள் சைனியின் குழந்தை அன்மோலுடன். ‘எங்களின் அன்றாட வாழ்க்கை வைத்து யாரென்ன மதம் என உங்களால் சொல்ல முடியாது. எங்களுக்குள் நாங்கள் பேதம் பாராட்டுவதில்லை,’ என்கிறார் ஷப்பிர்

PHOTO • Shweta Desai
PHOTO • Shweta Desai

இடது: ஷப்பிர் குரேஷி மகன்கள் அப்துல் வஹீது மற்றும் ஜமால் ஆகியோருடன் குடும்பத்தின் நியூ ஸ்டைல் எஞ்சினியரிங் ஒர்க்ஸ் கடையில். இரும்புக் கட்டில்களை செய்யும் பணியிலிருந்து கடையை குடும்பம் தொடங்கி, தற்போது கண்காணிப்பு கோபுரம், உலோக தடுப்புகள் போன்றவற்றை ராம ஜென்மபூமி கோவிலுக்குள் அமைக்குமளவுக்கு வளர்ந்திருக்கிறது. வலது: இடது பக்கத்தில் சைனியின் கடை. வலது ஓரத்தில் குரேஷியின் கடை

அவர்களின் வீடு எரிக்கப்பட்ட பிறகு, குடும்பம் ஒரு சிறு துண்டு நிலத்தில் வீட்டின் பகுதிகளை மீட்டுருவாக்கியது. வீட்டின் கொல்லைப்புறத்தை சுற்றியிருக்கும், மூன்று வித்தியாசமான அமைப்புகளில் மொத்தம் 60 குடும்ப உறுப்பினர்கள் வசிக்கின்றனர்.

குரேஷியின் இரண்டாவது மகனான 45 வயது அப்துல் வகிதும் நான்காவது மகனான 35 வயது ஜமாலும் வெல்டிங் கடை நடத்துகின்றனர். கோவில் கட்டுமானத்தை பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. “15 வருடங்களாக நாங்கள் உள்ளே பணிபுரிந்தோம். 13 கண்காட்சி கோபுரங்கள் மற்றும் 23 சுற்றுப்புற தடுப்புகள் போன்றவற்றுக்கான வெல்டிங் பணிகள் ஆகியவற்றை அங்கு செய்திருக்கிறோம்,” என்கிறார் ஜமால். ஆர்எஸ்எஸ் , விஹெச்பி மற்றும் எல்லா இந்து கோவில்கள் சம்பந்தப்பட்டோருடன் சேர்ந்து பணிபுரிவதாக அவர்கள் சொல்கின்றனர். “இதுதான் அயோத்தி. இந்துக்களும் இஸ்லாமியர்களும் இங்கு சமாதானமாக வாழ்கின்றனர்,” என்கிறார் ஜமால்.

அவர்களின் நியூ ஸ்டைல் எஞ்சினியரிங் கடை, வீட்டின் முன்பக்கத்தில் செயல்படுகிறது. முரண்நகை என்னவென்றால் இந்த வலதுசாரி அமைப்புகளை பின்பற்றுவர்கள்தான், அவர்களை போன்ற இஸ்லாமியர்களை தாக்கியவர்கள். “வெளியாட்கள் வந்ததிலிருந்து பிரச்சினை தொடங்கியது,” என்கிறார் ஜமால்.

மதரீதியிலான பிரச்சினைகள் கொடுக்கும் ஆபத்துகளை குடும்பங்கள் புரிந்து வைத்திருக்கின்றன. குறிப்பாக தேர்தல் நடக்கவிருக்கும் இந்த வருடத்தில். “இத்தகைய ஆபத்தான சூழல்களை நாங்கள் பலமுறை பார்த்திருக்கிறோம். அரசியல் ஆதாயங்களுக்காக அது செய்யப்படுகிறதென எங்களுக்கு தெரியும். டெல்லியிலும் லக்நவிலும் ஒரு சீட்டு பெறுவதற்காக இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. இது எங்களின் உறவை பாதிக்காது,” என்கிறார் குரேஷி உறுதியாக.

வன்முறைக் கும்பல் 1992 டிசம்பரில், சைனியின் வீட்டை விட்டுவிட்டு குரேஷியின் வீட்டை தாக்கியதை போல, தற்காலிகமாக சைனி காக்கப்பட இந்து மத அடையாளம் உதவுமென்பது அவருக்கு தெரியும். “அவர்களது வீட்டில் தீ பற்றினால், அது என் வீட்டையும் தொற்றும்,” என சுட்டிக் காட்டுகிறார் சைனி. அது போன்ற நிலையில், “நான்கு பக்கெட் தண்ணீரை கூடுதலாக ஊற்றி நெருப்பை அணைப்போம். ஒருவருக்கு ஆதரவாக ஒருவரென நாங்கள் இருக்கிறோம்,” என்கிறார் அவர், குரேஷி குடும்பத்துடனான தன் உறவை மீண்டும் வலியுறுத்தி.

”நிறைய அன்போடு நாங்கள் வாழ்கிறோம்,” என்கிறார் குடியா.

தமிழில்: ராஜசங்கீதன்

Shweta Desai

Shweta Desai is an independent journalist and researcher based in Mumbai.

Other stories by Shweta Desai
Editor : Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan