தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பு தான் முகமதுபூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு முகேஷ் ராம் வந்திருந்தார். அவர் இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

தீபாவளிக்கு பிறகு ஆறாவது நாள் நடைபெறும் சாட் பூஜையில் பங்கேற்பதற்காக அந்த 40 வயதுக்காரர் பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். அவரது வருகையால் மனைவி பிரபாபதி தேவி மற்றும் நான்கு பிள்ளைகளும் மகிழ்ந்தனர்

அவரது வீட்டிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்கல்பூர் புரானா பசாரின், கட்டுமான தளத்தில் தினக்கூலி வேலைக்கு சேர்ந்தார். காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து புறப்படும் அவர் மாலை 6 மணிக்கு வீடு திரும்புவார்.

2021 நவம்பர் 2ஆம் தேதி தாமதமாக வீடு திரும்பிய அவர் தலைவலி மண்டையை உடைப்பதாக தெரிவித்தார்.

வலி கடுமையானதால் அடுத்தநாள் காலையில் அவரால் கண்களைக் கூட திறக்க முடியவில்லை. ஓரளவு சமாளித்து வேலைக்கு தயாரானாலும் முகேஷின் உடல்நிலை மோசமானது.

அவரது உடல்நிலையை கண்ட பிரபாபதி 35 கிலோமீட்டர் தொலைவில் கோபால்கஞ்சில் உள்ள மருத்துவமனைக்கு வாடகை காரில் அழைத்துச் சென்றார். “சுபேரே லே ஜாத், லே ஜாத், 11 பஜே மவுகத் ஹோ கைல் [காலையில் மருத்துவமனையை அடைந்தபோது அவர் இறந்துவிட்டார். அப்போது 11 மணி இருக்கும்].”

35 வயது கைம்பெண் பிரபாபதி, இறந்த கணவரின் உடலோடு வீடு திரும்பிய போது, வீடு சீல் வைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். முஹம்மதுபூர் காவல்நிலைய அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

PHOTO • Umesh Kumar Ray
PHOTO • Umesh Kumar Ray

இடது: கள்ளச்சாராயம் விற்றதாக குற்றஞ்சாட்டி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த காவல்துறையினர் முகேஷ், பிரபாபதியின் வீட்டை சீல் வைத்தனர். வலது: கள்ளச்சாராயத்தால் கைம்பெண் ஆன பிரபாபதி, தடைச் சட்டங்களால் வீட்டையும் இழந்தார்

“நான் வீடு திரும்பியபோது சீல் வைக்கப்பட்டு இருந்தது. என் கணவரின் உடலை வெளியே வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். நானும் பிள்ளைகளும் கொஞ்சம் புவாரா [வைக்கோல்] கொளுத்தி இரவு முழுவதும் திறந்தவெளியில் கழித்தோம்,” என அவர் நினைவுகூருகிறார்.

“கர்போ சே கைனி, ஆ மார்டோ சே கைனி? தா கோனோ பாத் நைகி பைல் நா. கோனோ தா ஆதார் கரே கி சாஹி [என் வீட்டையும், கணவரையும் இழந்தேன். இப்படி நடந்திருக்கக் கூடாது. இதற்கெல்லாம் ஏதாவது அடிப்படை இருந்திருக்க வேண்டும்],” என்றார்.

*****

இக்கட்டுரை வெளிவந்த நாளில் இருந்து 2023 ஏப்ரல் 14ஆம் தேதி வரை கள்ளச்சாராயம் குடித்து 26 பேர் இறந்துவிட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு சம்பரான் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக பீகார் காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

2016, பீகார் தடை மற்றும் கலால் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு மற்றும் நாட்டு சாராயங்கள், கள் ஆகியவற்றை உற்பத்தி செய்தல், வாங்குதல், விற்றல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.

கள்ளச் சாராயத்தால் பிரபாபதி கணவர் இழந்ததோடு, தடைச் சட்டங்களால் வீட்டையும் இழந்தார்.

உள்ளூர்வாசிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் முகம்மதுபூர் காவல்நிலைய காவலர்கள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். அதில் முகேஷ் சாராயம் விற்பவர் என்றும், அவரது வீட்டிலிருந்து 1.2 லிட்டர் நாட்டுச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பு கிடைத்ததால் முகேஷ் ராமின் வீட்டிற்கு காவல்துறையினர் சென்று 200 மில்லிலிட்டர் சாராயம் கொண்ட தலா ஆறு பாலித்தீன் பைகளும், மூன்று காலி பைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PHOTO • Umesh Kumar Ray
PHOTO • Umesh Kumar Ray

இடது: தானும், கணவரும் இருக்கும் புகைப்படத்தை காட்டும் பிரபாபதி. வலது: அவரது இறப்பிற்கு பிறகு, பிரபாபதியும், நான்கு பிள்ளைகளும் முகம்மதுபூர் கிராமத்தில் உள்ள தங்களது பழைய வீட்டின் அருகே தற்காலிக குடில் அமைத்து இப்போது வசித்து வருகின்றனர்

பாரியிடம் இக்குற்றச்சாட்டுகளை மறுத்து பேசிய பிரபாபதி, அஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட குடிசை வீடு சீல் வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறார். “சாராய வியாபாரியின் வீட்டைச் சென்று பாருங்கள், இத்தொழிலை நாங்கள் செய்தால், எங்கள் வீடு இப்படி இருக்குமா?”

முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கிறார். அவரது வீட்டில் சாராய வியாபாரம் நடந்ததாக கூறப்படுவதை  ஏற்கவில்லை. “ஹம்ரி மாலிக் சாஹிப் கே தாரு பேச்தே தேக்தி தா ஹம் குத் கஹ்தி கி ஹம்ரா கே லே ச்சலி [என் கணவர் சாராய வியாபாரியாக இருந்தால் நானே காவல்துறையிடம் சென்று என்னையும் குற்றவாளியாக சேர்க்க சொல்லியிருப்பேன்],” என்றார்.

“நீங்களே கிராம மக்களிடம் சென்று கேளுங்கள். மாலிக் சாஹிப் [அவரது கணவர்] கொத்தனார் வேலை செய்ததாக தான் சொல்வார்கள்,” என்ற அவர், முகேஷ் அவ்வப்போது சாராயம் குடித்து வந்ததையும் மறுக்கவில்லை. “நண்பர்கள் வற்புறுத்தினால்தான் அவர் குடிப்பார். அன்று தலைவலியுடன் அவர் வீட்டிற்கு வந்தபோது, குடித்திருப்பதை என்னிடம் கூறவில்லை.”

முகேஷின் உடல் கூராய்வுக்கு செல்லவில்லை என்பதால் அவரது மரணத்திற்கான காரணமும் தெரியப் போவதில்லை.

*****

உ.பி-பீகார் எல்லையில் சித்பாலியா வட்டாரத்தில் அமைந்துள்ள முகம்மதுபூர் கிராமத்தில் 7,273 பேர் (மக்கள் கணக்கெடுப்பு 2011) வசிக்கின்றனர். தோராயமாக பத்தில் ஒருவர் பட்டியில் சாதியை சேர்ந்தவர்கள். பெரும்பாலானோர் வேலை தேடி பிற மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். செல்ல விரும்பாதவர்கள் அங்கு தினக்கூலி வேலை செய்கின்றனர்.

கோபால்கஞ்ச் மாவட்ட கள்ளச்சாராய சம்பவத்தில், முகேஷ் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். அவர்களில் முகேஷ் உள்ளிட்ட 10 பேர் பீகாரில் மஹாதலித் எனப்படும் சமார் சாதியைச் சேர்ந்தவர்கள். இறந்த கால்நடைகளின் தோலை அகற்றி விற்பனை செய்வது அவர்களின் பாரம்பரிய தொழில்.

PHOTO • Umesh Kumar Ray
PHOTO • Umesh Kumar Ray

முகேஷின் மரணத்திற்கு பிறகு அவரது குடும்பம் செலவை சமாளிக்க முடியாமல் போராடி வருகிறது. பிரபாபதி அவரது பிள்ளைகள் ப்ரீத்தி, சஞ்ஜூ, அன்ஷூவுடன் (இடமிருந்து வலம்)

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 72 பேர் உயிரிழந்தனர். 2016ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை.

கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை காவல்துறையினரும், பிற அதிகாரிகளும் பதிவு செய்வதில்லை என்பதால் இந்த எண்ணிக்கை தவறாகவும் இருக்கலாம். பல சம்பவங்களில், கள்ளச் சாராயத்தால் மரணம் என்பதை காவல்துறையினர் ஏற்பதில்லை.

*****

பிரபாபதியின் வீடு திடீரென சீல் வைக்கப்பட்டது. துணிகள், சவுக்கி (மரக் கட்டில்), உணவு போன்ற அடிப்படையான பொருட்களை வெளியே எடுக்கக் கூட அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அச்சமயத்தில் கணவரது சகோதரியும், அக்கம்பக்கத்தினரும்தான் அவருக்கு உதவினர்.

சிம்லாவில் முகேஷ் வேலை செய்தபோது மாதம் ரூ.5000-10,000 வரை பணம் அனுப்பி வந்தார். அவர் இறந்த பிறகு பிரபாபதி விவசாய கூலி வேலை செய்து தனது மகள்களான 15 வயது சஞ்ஜூ, 11 வயது ப்ரீத்தி, இரண்டு மகன்களான 7 வயது தீபக், 5 வயது அன்ஷூவிற்கு உணவளித்து வருகிறார். ஆனால் ஆண்டிற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே வேலை இருக்கும். மாதந்தோறும் கிடைக்கும் கைம்பெண் உதவித் தொகை ரூ.400 வைத்துக் கொண்டு அவர் சமாளிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு, அவர் 10 கத்தா (தோராயமாக 0.1 ஏக்கர்) நிலத்தில் குத்தகைக்கு  எடுத்து நெல் பயிரிட்டார். அதில் சுமார் 250 கிலோ அரிசியை அவர் அறுவடை செய்தார். அவருக்கு நில உரிமையாளர் விதைகள் கொடுத்தார், உரங்கள், உரம், நீர்ப்பாசனம் போன்ற பல உள்ளீடுகளுக்குச் செலவிட பிரபாபதியின் சகோதரி ரூ.3,000 கொடுத்தார்.

மூத்த மகன் தீபக்கை பிரபாபதி தனது சகோதரியின் பொறுப்பில் விட்டுள்ளார். அவர் அவனது கல்விச் செலவை ஏற்கிறார். அங்கு, இங்கு ரூ.500, ரூ.1000 என கடன் வாங்கியதில் பிரபாபதிக்கு ரூ.10,000 கடன் சேர்ந்துள்ளது. அவர் அது கடனில்லை 'ஹாத் உதை' [வட்டியில்லா சிறிய கடன்] என்கிறார். “நான் ஒருவரிடம் 500 [ரூபாய்]கேட்பேன், மற்றொருவரிடம் 1000[ரூபாய்] கேட்பேன். விரைவில் திருப்பி கொடுத்துவிடுவேன். அவர்கள் [கடன் கொடுத்தவர்கள்] எந்த வட்டியும் விதிப்பதில்லை,” என்கிறார்.

PHOTO • Umesh Kumar Ray
PHOTO • Umesh Kumar Ray

நெல் பயிரிடுவதற்காக 10 கத்தா நிலத்தை பிரபாபதி குத்தகைக்கு எடுத்துள்ளார். சிறிய கடை அருகே நிற்கும் பிரபாபதி(வலது) வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பீகார் அரசால் அவருக்கு அக்கடை கொடுக்கப்பட்டது

முகேஷ் இறந்த மூன்று மாதங்களில் பிரபாபதிக்கு சிறு கூம்தி (மரத்தில் செய்யப்பட்ட பெட்டிக் கடை) கிடைத்தது. வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் அவருக்கு ரூ.20,000 மதிப்பிலான சரக்குகளும் அளிக்கப்பட்டன.

“சர்ஃப் [துணி துவைக்கும் பொடி], குர்குரே [நொறுக்குத்தீனி], பிஸ்கட்டுகள் போன்ற பொருட்கள் விற்பனைக்கு என்னிடம் கொடுக்கப்பட்டன. ஆனால் சொற்ப லாபமே அதில் கிடைக்கிறது. ஒரு நாளின் முடிவில் என்னால் 10 ரூபாய் மட்டுமே சேமிக்க முடிந்தது. என் குழந்தைகள் அதை தின்பண்டம் வாங்க செலவிடுவார்கள். அதில் எப்படி லாபம் பார்ப்பது? அனைத்திற்கும் மேலாக எனக்கு உடல்நிலை சரியில்லை. கடையில் சம்பாதிக்கும் பணத்தை மருத்துவ சிகிச்சைக்கு செலவிட்டு வருகிறேன்,” என்றார்.

பிரபாபதியை எதிர்காலம் கவலைப்பட வைக்கிறது. “எப்படி என் குழந்தைகளை வளர்ப்பது? என் இரண்டு மகள்களுக்கு எப்படி திருமணம் முடிப்பது? இச்சிந்தனைகளால் எனக்கு தலைவலி வந்துவிடுகிறது. உடல்நலம் பாதிக்கும் வரை நான் அழுகிறேன். எங்கு செல்வது, என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன். நான் சம்பாதிக்கும் சிறிதளவு பணத்தில் பிள்ளைகளுக்கு உணவளித்து வருகிறேன்,” என்றார். அவர் மேலும் ”ஹம்ரா கானி துக் ஆ ஹம்ரா கானி பிபட் முடாயி கே நா ஹோகி [என் எதிரிகளுக்குக் கூட இதுபோன்ற ஒரு துயரமும், கலக்கமும் வந்துவிடக்கூடாது].”

கணவரின் மரணம் அவரது குடும்பத்தை வறுமையில் தள்ளிவிட்டது: “மாலிக் சாஹிப் உயிருடன் இருந்தபோது நாங்கள் கறியும், மீனும் உண்போம். அவர் போன பிறகு காய்கறிகள் கூட உண்ண முடியவில்லை. அரசு எங்களுக்கு ஏதேனும் பண உதவி செய்யும் வகையில் தயவுசெய்து எழுதுங்கள்,” என்றார் அவர் கவலையுடன்.

மாநிலத்தில் விளிம்பு நிலை மக்களின் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்ற பீகாரைச் சேர்ந்த ஒரு தொழிற்சங்கவாதியின் நினைவு மானியப்பணியாக இக்கட்டுரை வெளிவந்துள்ளது.

தமிழில்: சவிதா

Umesh Kumar Ray

Umesh Kumar Ray is a freelance journalist based in Bihar

Other stories by Umesh Kumar Ray
Editor : Devesh

Devesh is a poet, journalist, filmmaker and translator. He is the Translations Editor, Hindi, at the People’s Archive of Rural India.

Other stories by Devesh
Editor : Sanviti Iyer

Sanviti Iyer is an Assistant Editor at the People's Archive of Rural India. She also works with students to help them document and report issues on rural India.

Other stories by Sanviti Iyer
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha