“ரேஷன் கடையில் இருந்து எனக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய அரிசி ஏன் கிடைக்கவில்லை?“ என்று ஜன்மபூமிக்காக தும்மாலாவில் உள்ள அரசு பள்ளியில் குழுமியிருந்த மண்டல அதிகாரிகளிடம் முகமது கேட்டார். அது மாநில அரசால் ஜனவரி மாதம் பேசுவதற்காக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த ஒரு குழுவாகும்.

தும்மாலா கிராமத்தில் முகமதுவின் பெயர் அவரது ரேஷன் அட்டையில் இருந்து காணாமல் போயிருந்தது. அவரது வீட்டில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கர்னூல் நகரில் உள்ள ரேஷன் அட்டையில் அவரது புகைப்படம் இருந்தது. “சிலரின் பெயர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விசாகப்பட்டினத்தில் இருக்கிறது“ என்று அதிகாரிகள் பதிலளித்தனர்.

ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்த பின்னர், 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து பதான் முகமது அலி கானுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுகிறது. 52 வயதான, காய்கறிகள் விற்பனை செய்யும் அலி, ஆந்திர அரசு இணைக்கும் செயலியை உருவாக்கிய உடனேயே ஆதார் எண்ணையும் ரேஷன் அட்டையையும் இணைத்துவிட்டார். சில வாரங்களிலேயே பொது வழங்கல் முறையில் தும்மாலா கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் அவருக்கு பிரச்சினைகள் துவங்கிவிட்டன. அவரது கிராமம் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள அமடங்கூர் மண்டலத்தில் உள்ளது.

அலியைப் போல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வைத்துள்ள ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள்,  ரேஷன் கடைகளுக்குச் சென்றபோதெல்லாம், கடைக்காரர் ரேஷன் அட்டையை ஓர் இயந்திரத்தில் சொருகுவார். அந்த இயந்திரம் அந்த குடும்பத்தில் உள்ள நபர்களின் பெயர்பட்டியலைக் காட்டும். அதில் உள்ள நபர்கள் தங்களின் கைரேகையை பதிவிடவேண்டும். ரேஷன் கடைக்காரர் அந்த இயந்திரம் காட்டும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருட்களை வழங்குவார். ஆனால், அலியின் குடும்ப அட்டையிலிருந்த அவரது பெயர் காணாமல் போயிருந்தது. “நான் பலமுறை சென்றேன். ஆனால், எனது பெயர் அதில் இல்லை“ என்று அவர் கூறுகிறார். “எங்கள் எண்ணை அவர் பதிவிடும்போது 5 பெயர்களை காட்டப்பட வேண்டும். ஆனால், நான்கு மட்டுமே இருந்தது. எனது பெயரை காணவில்லை. பெயர் இருந்தால் மட்டுமே கைரேகை வேலை செய்யும். இல்லாவிட்டால் வேலை செய்யாது“ என்று அவர் மேலும் கூறினார்.

PHOTO • Rahul M.
PHOTO • Rahul M.

முகமது அலி மற்றும் அவரது மனைவி பக்ரூனிஷா (இடது) அலியின் பெயரை அவர்களின் குடும்ப ரேஷன் அட்டையில் சேர்க்க முடியாது. அவரது ஆதார் அட்டையில் இறந்த முகமது ஹுசைனின் பெயர் இணைக்கப்பட்டிருந்தது

அலியின் ஆதார் எண் முகமது ஹுசைனின் ரேஷன் அட்டையுடன் இணைந்து விட்டதால் இது நடந்தது. எப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியாது. கர்னூல் நகரில் உள்ள காவடி தெருவில் வசித்த ஹுசைன், 59வது வயதில் மூளை முடக்குவாததத்தால் 2013ம் ஆண்டு இறந்துவிட்டார். ஆந்திராவின் மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்தவர். எனவே அவர்கள் எனது கணவரின் பெயரை ரேஷன் அட்டையில் இருந்து எடுத்துவிட்டனர் என்று அவரது மனைவி ஷாயிக் ஜீபேடா பீ கூறுகிறார்.

வெங்கடநாராயண பள்ளி குடியிருப்பு, தும்மாலாவில் இருந்து அதிக தொலைவில் இல்லை. அங்கு வி.நாகராஜுவின் பெயர் ரேஷன் அட்டையில் இருந்து காணாமல் போயிருந்தது. “நான் ரேஷன் அட்டையை இயந்திரத்தில் சொருகியவுடன் அவரது பெயரை காட்டவில்லை“ என்று ரேஷன் கடைக்காரர் ரமணா ரெட்டி கூறுகிறார். அவர் என்னிடம் ரேஷன் அட்டையில் உள்ள பெயர்களை காட்டினார். நாகராஜுவின் பெயர் இல்லை.

ரேஷன் கடையில் இருந்து மாதம் 5 கிலோ அரிசி கிடைக்கப் பெறாமல் இருப்பது எங்களுக்கு பெரிய கஷ்டமான விஷயம்“ என்று 45 வயது நாகராஜு கூறினார். அலியின் நண்பர், விவசாயி. அவர் சில நேரங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிவார். இருப்பு இருந்தால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு கிலோ கேழ்வரகும், சர்க்கரையும், சோப்பும் கிடைக்கும்.

நாகராஜு டிஎஸ்ஓவிடம் அவரது பிரச்னையை எடுத்துக்கொண்டு சென்றார். டிஎஸ்ஓ அலுவலகம் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ளது. அது அமடங்கூரில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு ஒரு அலுவலர் அவரது விவரங்களை பார்த்து, நாகராஜுவின் ஆதார் அட்டை நகலில் எழுதினார். இந்த ஆதார் அட்டை கர்னூல் மாவட்டத்தில் உள்ளது. ஏற்கனவே டிஎஸ்ஓவுக்கு தகவல் அனுப்பப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டு அனுப்பினார்.

PHOTO • Rahul M.
PHOTO • Rahul M.

வி.நாகராஜு மற்றும் அவரது மனைவி லட்சுமிதேவி (இடது) ஆகியோருக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்பட்டுவிட்டது. அவரது தகவல்கள், விஜயலட்சுமி (வலது) என்பவரின் பெயருடன் இணைக்கப்பட்டுவிட்டது

அலியைப் போலவே, நாகராஜுவின் ஆதாரும் எப்படியோ, கர்னூலில் உள்ள ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. கர்னூல் நகரில் ஸ்ரீனிவாசா நகரில் வசிக்கும் ஜி. விஜயலட்சுமி என்பவரின் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. ஆந்திராவின் பொது வழங்கல் இணையத்தளத்தை பொறுத்தவரை விஜயலட்சுமியின் அட்டையின் நிலை செயல்பாட்டில் உள்ளது. அவர் பொது விநியோகக்கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குகிறார்.

“ஆனால் நான் எனது ரேஷன் பொருட்களை வாங்கவில்லை“ என்று விஜயலட்சுமி கூறுகிறார். 40 வயது இல்லத்தரசியான அவரது கணவர் மோட்டார் மெக்கானிக். விஜயலட்சுமியால் நாகராஜுவின் புகைப்படத்தை அடையாளம் காண முடியவில்லை. அவரின் பெயர் குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டையில் உள்ள பெண்ணையும் அவரால் அடையாளம் காண முடியவில்லை. அவர் 2017ம் ஆண்டு ஜனவரியில் அவருக்காகவும், அவரது குடும்பத்தினருக்காகவும் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தார். அப்போது முதல் ரேஷன் அட்டைக்காக காத்திருக்கிறார்.

கர்னூலில் உள்ள இரண்டு ரேஷன் அட்டைகளும், தவறாக அலி மற்றும் நாகராஜுவின் ஆதார் எண்ணும் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வழங்கப்பட்டதாக பொது வினியோகத் திட்ட இணையதளம் குறிப்பிடுகிறது. 2016ம் ஆண்டு இறுதிவரை பல்வேறு முறை இந்த இரு ரேஷன் கார்டுகளையும் ஆதாருடன் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று, அவை அனைத்தும் வெற்றிபெறவில்லை என்றும் இணையதளம் காட்டுகிறது. நல்ல அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியாக இது இருக்கலாம் அல்லது முகம் தெரியாத நபரின் மோசடியாக கூட இருக்கலாம். ஆனால் இவை அலி மற்றும் நாகராஜு இருவரும் செய்தது கிடையாது.

பரிவர்த்தனை வரலாறு மற்றும் அட்டை குறித்த விவரங்களை பார்ப்பதற்கு கடவுச்சொல் தேவையில்லை. ரேஷன் அட்டை எண்களை பதிவிடுவதே போதுமானது. நான் இந்த கார்டுகளை, இணையதளத்தின் ரேஷன் அட்டை அச்சிடுக என்ற பிரிவில் இருந்து மீட்டெடுத்தால், அதில் அலி அல்லது நாகராஜு அகிய இருவரில் ஒருவரின் எண் இருக்குமல்லவா? குடும்ப உறுப்பினர்கள் 6 பேரில் (4 அலியின் ஆதார் அட்டையில் உள்ளது. இரண்டு நாகராஜுவின் ஆதார் அட்டையில் உள்ளது) அலி மற்றும் நாகராஜு புகைப்படங்கள்தாம் (அவர்களின் ஆதார் அட்டையில் இருந்து) தெரிந்தன. மற்றவை நாகராஜுவால் அடையாளம் காட்ட முடியவில்லை.

PHOTO • Rahul M.
PHOTO • Rahul M.

அலியின் புகைப்படத்துடன் ரேஷன் அட்டை (இடது), நாகராஜுவுடைய ரேஷன் அட்டை (வலது) அவர்களுக்கு தெரியாத நபர்களுடைய புகைப்படங்களுடன்

24 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது முதல் ரேஷன் பொருட்கள் கிடைக்கப்பெறாத விஜயலட்சுமியை போலன்றி அலி 1980 முதல் தனது ரேஷன் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார். 2016ம் ஆண்டு இந்த குளறுபடிகள் துவங்கியபோது, அவரது ரேஷன் அட்டை உதவி மையத்திற்கு சில முறை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் திரும்பவும் இந்த பிரச்சினைகள் சரி செய்யப்படும் என்று கூறியுள்ளார்கள். சிறிது கால காத்திருப்புக்கு பின்னர் அலி 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அமடங்கூர் சேவை மையத்திற்கு சென்று அவரது ரேஷன் அட்டையில் அவரது பெயரை சேர்க்க வேண்டும் என்று கோரினார். அவர் அந்த ஊரின் வருவாய் அலுவலரிடமும் பேசினார். அவரும் இந்தப் பிரச்சினை விரைவில் சரிசெய்யப்படும் என்று குறிப்பிட்டார். “நான் எப்போது இந்த ஆதாருக்கான பணியை செய்ய செல்லும்போதும், எனது வருமானம் பாதிக்கப்படும். எனது வேலை கெடும்“ என்று அலி கூறினார்.

திருமலாவில் நடைபெற்ற ஜென்ம பூமி கூட்டத்திற்கு பின்னர், அலியும், நானும் அமடங்கூர் சேவை மையத்திற்கு சேர்ந்து சென்றோம். அது இங்கிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு அவரது ஆதார் அட்டையின் நகலை பெற்று தகவல் முரண்பாடுகளை சரிபார்த்தோம். ஓடிபி அவரது ஆதார் எண்ணுக்கு வந்தது. அலிக்கு இது தெரியாது. ஒடிபி அவரால் கண்டுபிடிக்க முடியாத எண்ணுக்கு சென்றது.

ஆதாரை மீட்டெடுப்பதில் தோல்வியடைந்ததால், நாங்கள் அருகில் உள்ள அமடங்கூர் எம்ஆர்ஓ அலுவலகத்துக்கு சென்றோம்.  சேவை மையத்தில் 2017ம் ஆண்டு அக்டோபரில் அலி செய்திருந்த விண்ணப்பம் என்னவாகியிருந்தது என்பதை சரிபார்க்க அங்கு சென்றோம். ஆனால் அங்கிருந்த கம்ப்யூட்டர் இயக்குபவர் அலியிடம் மையம் வழங்கிய ரசீதை கேட்டனர். ஆனால் அத்தகைய ரசீது அலியிடம் இல்லை. எனவே நாங்கள் மீண்டும் சேவை மையத்திற்கு ஒப்புகை சீட்டு பெறுவதற்காக திரும்பி வந்தோம். இதை மீட்டெடுப்பது எளிதான காரியமல்ல இதற்கு சிறிது நேரம் எடுக்கும்.

நாங்கள் அந்த ஒப்புகை சீட்டை பெற்றவுடன், மீண்டும் எம்ஆர்ஓ அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு அந்த கம்யூட்டர்காரர் விவரங்களைப் பார்த்தார். அதிலிருந்த கருத்துக்கள் பக்கத்தில், சேவை இணையத்தின் ஒருங்கிணைந்த சேவைகள் தகவல்களில் முகமது அலியின் ரேஷன் பொருட்கள் நிறுத்தப்பட்டதற்கு காரணம் ”…யுஐடி ஏற்கனவே இருந்தது” என்பதாகும். அது தெரியாத ரேஷன் அட்டை எண்ணுடன் கர்னூலில் முகமது ஹுசேனின் முகவரியுடன் இணைந்திருந்தது.

PHOTO • Rahul M.
PHOTO • Rahul M.

சேவை மற்றும் எம்ஆர்ஓ அலுவலக ரசீதுகளுடன் அலி. வலது: கர்னூலில் ஒழுங்கற்று இயங்கியதால் மூடப்பட்ட  ரேஷன் கடை

அலி மற்றும் நாகராஜுவின் ஆதார் சென்றடைந்திருக்கும் கர்னூலின் ரேஷன் கடை, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளால் 2017ல் மூடப்பட்டுவிட்டது. நகரில் வேறு ஒரு ரேஷன் கடையை மக்கள் பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள்.

அலியின் ரேஷன் அட்டை வரலாற்றை ஆய்வு செய்தால், அவரது ஓடிபி வேறு ஒரு எண்ணுக்குச் செல்லும். தெரியாத நபர்களின் புகைப்படங்கள் ரேஷன் கார்டில் இடம்பெற்றிருக்கும். டிஜிட்டல்மயமாக்கல் இந்த குழப்பத்தை ஏற்படுத்தியது. இது ஆதார் நடைமுறையிலுள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டுவதுடன் உணவுப்பொருட்களுக்கு சந்தைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தையும்  சுட்டிக்காட்டுகிறது.

இதுகுறித்து கர்னூலில் ஊழல் மயமான ரேஷன் கடைகளுக்கு எதிராக 2016ல் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த கர்னூல் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.பிரபாகர் ரெட்டி கூறுகையில், “கர்னூல் முகவரியில் கூடுதல் ரேஷன் அட்டைகளை ரேஷன் கடைக்காரர்கள் வைத்துள்ளார்கள். அவற்றை போலி ஆதார் அட்டைகளுடன் இணைத்துள்ளார்கள். அதற்காக அவர்கள் மீது வழக்குகளும் போடப்பட்டுள்ளது. இதில் சில ரேஷன் கடைக்காரர்கள் ஜெயில் சென்று திரும்பியுள்ளார்கள்,” என்கிறார்.

பராமரிப்பு, சரி பார்ப்பு மற்றும் இயக்கங்கள் அதிகாரி சுப்புலட்சும்மா கூறுகையில், அலி மற்றும் நாகராஜுடைய பிரச்சினைகள் தவறான எண்கள் தவறாக பதியப்பட்டதால் ஏற்பட்ட பிழையாக இருக்கலாம் என்றார். இதை சரிசெய்ய முடியும் என்றும் அவர் கூறுகிறார். “சேவை மையத்திற்கு சென்று தங்களின் 10 விரல் ரேகைகளை புதுப்பிப்பதன் மூலம் அவர்கள் இந்த பிரச்சினையை சரிசெய்யலாம்“ என்றார்.

ஆனால், அலி நிறைய இடங்களுக்கு சென்று பார்த்துவிட்டார். அவரால் பணியில் இருந்து விடுப்பு எடுத்துவிட்டு  ரேஷன் அட்டை, ஆதார் அட்டை இணைப்பதில் சிரமம் உள்ளது. அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். காய்கறி விற்று கிடைக்கும் வருமானம் மட்டும் தான் அவர்கள் வீட்டின் ஒரே வருமானம். அவரும், அவரது மனைவியும் எப்போதாவது நூறு நாள் வேலை திட்ட வேலைக்கு செல்வார்கள். “எம்ஆர்ஓ அலுவலகத்திற்கு நான் நிறைய முறை வந்துவிட்டேன்“ என்று அலி கூறுகிறார். அவர்கள் இப்போது என்னை டிஎஸ்ஓ அலுவலகத்துக்கு அனுப்புகிறார்கள். எனக்கு எப்போது நேரம் கிடைக்கும் என்று தெரியவில்லை என அவர் புலம்புகிறார்.

தமிழில்: பிரியதர்சினி. R.

Rahul M.

Rahul M. is an independent journalist based in Andhra Pradesh, and a 2017 PARI Fellow.

Other stories by Rahul M.
Editor : Sharmila Joshi

Sharmila Joshi is former Executive Editor, People's Archive of Rural India, and a writer and occasional teacher.

Other stories by Sharmila Joshi
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.