பழம்பெரும் நகரமான அகமதாபாத்தின் நெரிசல் நிறைந்த சந்துகளில் சமீருதின் ஷேக் ஒருநாளுக்கு இருமுறை தனது மிதிவண்டியில் சென்று வருகிறார். ஜூஹாபுராவில் இருக்கும் தனது பணியிடத்திற்கு ஃபதேஹ்வாடியில் இருக்கும தனது வீட்டிலிருந்து 13 கிலோமீட்டர் தூரம் நாள்தோறும் பயணம் செய்கிறார்.  ஒரு முறை செல்ல அவருக்கு ஒரு மணி நேரம் ஆகிறது. “என்னிடம் மோட்டார் வண்டி கிடையாது. என்னால் பெட்ரோலுக்கு செலவு செய்ய முடியாது, ” என்று தனது மிதிவண்டியை நிறுத்தியபடி சொல்கிறார் 36 வயதாகும் அவர்.

காதியா எனும் பகுதியில் இருக்கும் வணிக வளாக அடிதளத்தில் 10 x 20 அறையில் அவரது வேலைநாள் தொடங்கி முடிகிறது. அவருடன் மேலும் 10 பேர் காகித உறை தயாரிப்பு வேலையை செய்கின்றனர். மிகச் சிறப்பாக ஒரே நாளில் 6000 முதல் 7000 உறைகளை அவர் தயாரித்துள்ளார்.

உறை தயாரிப்பது அவ்வளவு எளிதானது கிடையாது. “இக்கைவினையை கற்க ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் ஆகும்,”  என்கிறார் சமீருதின். “தனிப்பட்ட தொழிலாளியாக, தனியாக ஊதியம் பெறுவதற்கு உஸ்தாத்(மூத்த கைவினைஞர் மற்றும் வழிகாட்டி) வேலையின் தரத்தை ஏற்று முத்திரையிட வேண்டும்,” என்று அவர் விளக்குகிறார்.

இங்கே தரம் என்பது வேகம், துல்லியம், சாமர்த்தியம் மற்றும் கருவிகள் குறித்த அறிவு ஆகியவற்றின் கலவையாகும். ஒவ்வொரு பணிமனையிலும் வெட்டுதல், துளையிடுதல் ஆகிய இரு பணிகளுக்கு மட்டுமே இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மற்ற அனைத்து வேலைகளையும் கைகளால் செய்கின்றனர்.

இயந்திரங்களை பட்டறை உரிமையாளர்கள் மட்டுமே இயக்குகின்றனர். வெவ்வேறு அளவிலான உறைகளுக்காக பெரிய காகித அட்டைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் வெட்டப்பட்டு, சிறப்பு வண்ணங்கள் கொண்டு பூசப்படுகின்றன. தொழிலாளர்கள் ஒரு சமயத்தில் 100 காகிதங்களை எண்ணி எடுத்து மடித்து, ஒட்டி, மூடி கட்டுகின்றனர்.

PHOTO • Umesh Solanki
PHOTO • Umesh Solanki

இடது : காடியாவில் உள்ள தாஜ் என்வலப்ஸ் செல்வதற்கு பழைய நகரம் வழியாக மிதிவண்டியில் செல்லும் சமீருதின் ஷேக். வலது : வணிக வளாகத்தின் அடித்தளத்தில் இருக்கும் தாஜ் என்வலப்ஸ் பணிமனையில் தரையில் அமர்ந்தபடி வேலை செய்யும் கைவினைஞர்கள்

மிகுந்த கவனத்துடன் இவற்றை செய்ய வேண்டும். காகித உறையின் ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. மது (மேல் நுனி), பெண்டி (அடிப்பகுதி), தபா (கோந்து ஒட்டும் பக்கம்), கோலா (பக்க மடிப்பு கோந்து மடிப்பில் ஒட்டப்படுவது). கருவிகளையும் நன்கு அறிந்து பயன்படுத்தாவிட்டால் தீவிர காயம் ஏற்படும்.

பக்க மடிப்புகளை மடித்த பிறகு, தொழிலாளர்கள் கை முட்டி, பத்தார் (கல்) கொண்டு கூர்மையான, நேர்த்தியான மடிப்புகளை உருவாக்குகின்றனர். ‘மடிப்பு கல்’ ஒரு காலத்தில் அரவை கல்லில் செய்யப்பட்டன. இப்போது பலமான இரும்பு துண்டு பயன்படுத்தப்படுகிறது. “நான் முதலில் இச்செயல்முறைகளை கற்ற போது, பத்தார் (கல்) என் விரலை நசுக்கிவிட்டது,” என்கிறார் 51 வயது அப்துல் முத்தாலிப் அன்சாரி. “விரலில் இருந்து ரத்தம் பீறிட்டு சுவர்களில் தெளித்துவிட்டது. பிறகு உஸ்தாத் சொன்னார், நீ தேர்ந்த கைவினைஞராக மாறவேண்டும் என்றால் உடல் சக்தியை செலுத்தாமல் சில நுட்பங்களை கற்று பயன்படுத்த வேண்டும் என”

'கல்' ஒரு கிலோ எடை இருக்கும். “சாதாரண உறை செய்வதற்கு நீங்கள் அதை நான்கு முதல் ஐந்து முறை பயன்படுத்த வேண்டும்,” என்று விளக்குகிறார் அப்துல் முத்தாபில் அன்சாரி.  “காகிதத்தின் தடிமனுக்கு ஏற்ப நுட்பத்தை மாற்ற வேண்டும். கல்லை எவ்வளவு உயர்த்துகிறோமோ அத்தனை வேகமாக அடிக்க வேண்டும். எத்தனை முறை அடிக்க வேண்டும் என்பது தொடர் பயிற்சியில் தான் தெரியவரும்,” என்கிறார் 52 வயது அப்துல் குஃபர் அன்சாரி. “ஒரு உறை செய்வதற்கு 16 முதல் 17 முறை கைகளை காகிதம் கடந்து வரும். விரல்களை வெட்டிக் கொள்ளும் ஆபத்தும் அதிகம். வெட்டு விழுந்த விரல்களில் கோந்து பட்டால் இன்னும் எரியும்,” என்கிறார் அவர்.

64 வயதாகும் உறை தயாரிப்பாளர் முஸ்தான்சிர் உஜ்ஜைனி, வெட்டுக் காயங்களில் கோகம் எண்ணெய் பயன்படுத்துவதாக தெரிவிக்கிறார். சிலர் நிவாரணத்திற்கு வேசலின் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள். காகிதத்தின் வகையை சார்ந்து வேலைக்கான சவால் இருக்கும். “சில சமயம் கடகமால் [120 GSM ஆர்ட் பேப்பர்] கிடைத்தால் கைகள் காயமடையும். பிறகு நிவாரணத்திற்காக நான் கைகளை சுடு நீரில் ஏழு-எட்டு நிமிடங்கள் வைப்பேன்,” என்கிறார் சோனல் என்வலப்சின் முகமது ஆசிஃப்.  “குளிர் காலத்திலும் எங்கள் கைகளில் காயம் ஏற்படும். நிவாரணத்திற்காக சுடு தண்ணீரை பயன்படுத்துவோம்,” என்றார் சமீருதின் ஷேக்.

PHOTO • Umesh Solanki
PHOTO • Umesh Solanki

இடது : மடிப்பு ஏற்படுத்த தபா மீது கல்லை வைத்து அடிக்கும் சோனல் என்வலப்சின் முகமது ஆசிஃப் ஷேக். வலது : கைகளில் உள்ள காயங்களில் வெதுவெதுப்பான கோகம் எண்ணெய் பூசும் முஸ்தான்சிர் உஜ்ஜைனி

இந்த வேலைக்கு கைவினைஞர் பல மணி நேரம் தரையில் அமர்ந்து வேலை செய்ய வேண்டும். “நாங்கள் காலை 9.30க்கு வேலையில் அமர்ந்தால் மதிய உணவுக்காக ஒரு மணிக்கு எழுவோம். மாலையில் வேலை முடிந்து எழுந்த பிறகும் முதுகு வலிக்கும்,” என்கிறார் சமீருதின்.  ஒரே நிலையில் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்வதால் அவரது காலில் தோள் தடிப்பு ஏற்பட்டு விட்டது.“எல்லோருக்கும் இது வந்துவிடுகிறது,”என்றபடி தரையில் கால்களை மடித்து அமர்வது தான் காரணம் என்று அவர் குறிப்பிடுகிறார். “என் கால்களை பாதுகாக்க நினைத்தால், முதுகு வலி வந்துவிடுகிறது,” என்றார்.

வெட்டு, தீப்புண், வலி, எரிச்சல் போன்றவை ஏற்பட்டாலும் கிடைப்பது குறைந்த வருமானம் தான். 33 வயது மொஹ்சீன் கான் பதான் கூறுகையில், “எனது குடும்பம் என்னை [என் வருமானத்தை] மட்டுமே சார்ந்துள்ளது. வீட்டு வாடகை 6000 ரூபாய். நான் தினமும் தேநீர், தீனிக்கு 50 ரூபாய் செலவிடுவேன். பேருந்து, ஆட்டோவிற்கு என மேலும் 60 ரூபாய் செலவாகும்.” அவரது நான்கு வயது மகள் அண்மையில் ஆங்கில வழி பள்ளியில் சேர்க்கப்பட்டு இருக்கிறாள். “பள்ளிக் கட்டணம் ஆண்டிற்கு 10,000 ரூபாய்,” என்று கவலையோடு கூறியபடி உறை தயாரிப்பை அவர் தொடர்கிறார்.

சமீருதின் குடும்பத்தில் ஆறு பேர். மனைவி, மூன்று பிள்ளைகள், அவரது வயதான தந்தை. “குழந்தைகள் வளர்கின்றனர்,” என்று கூறியவர், “இந்த உறை தயாரிப்பு தொழிலில் போதிய வருவாய் கிடைப்பதில்லை. இதை வைத்து குடும்பம் நடத்தலாம், சேமிக்க முடியாது.” வேறு வேலைக்கு செல்வதற்கும் அவர் யோசித்து வருகிறார். ஆட்டோ உரிமத்திற்கு முயற்சித்து வரும் அவர் ஆட்டோரிக்ஷா வாங்கினால் அதைகொண்டு நல்ல வருவாய் பெறலாம் என கருதுகிறார். “உறை தயாரிப்பு தொழிலில் கிடைக்கும் வருவாயும் நிரந்தரம் கிடையாது. சில சமயங்களில் வேலை எதுவும் இருக்காது. மதியம் இரண்டு அல்லது மூன்று மணிக்கே வேலை முடிந்துவிடுகிறது. நாங்கள் அனைவரும் தரகுக்கு வேலை செய்பவர்கள். எங்களுக்கு என நிர்ணய ஊதியம் கிடையாது,” என்கிறார்.

PHOTO • Umesh Solanki
PHOTO • Umesh Solanki

வேலை நேரங்களில் இந்த ஒரே நிலையில்தான் தொழிலாளர்கள் பெரும்பாலும் அமர்கின்றனர். சமீருதின் ஷேக் (இடது) தொடர்ந்து கால்களை மடக்கி அமர்வதால் இடது முழங்கால் தசையில் தோள் தடிப்பு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறார். முஸ்தான்சிர் உஜ்ஜைனி (வலது) இரு தொழிலாளர்களுடன் தரையில் அமர்ந்திருந்தார்

உறை தயாரிப்பு தொழிலாளர்களுக்கான சங்கம் 1988ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சில சமயங்களில் துடிப்புடனும், சில சமயங்களில் செயல்படாமலும் அது இருந்து பிறகு குலைந்துப் போனது. எப்போது அது செயலிழந்தது என்பது தொழிலாளர்களுக்கு தெரியவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களில் சிலர் அமைப்பை மீட்டெடுத்து, பணிமனை உரிமையாளர்களுடன் இணைந்து, ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஆண்டுதோறும் வருவாய் உயர்த்தப்படுவதோடு, பணவீக்கம் ஏற்படும்போது 10% ஊதிய உயர்வு, போனஸ் மற்றும் பணிக்கு ஏற்றவாறு விடுப்பு ஆகிய உரிமைகளை பெற்றுத்தர முடிவு செய்தனர்.

அகமதாபாத்தில் இத்தொழிலில் ஆண்களின் ஆதிக்கமே அதிகம். இங்கு ஒரு பெண் உறை தயாரிப்பாளர் மட்டும் இருக்கிறார்.

உறைகளின் எண்ணிக்கை, அளவு, தடிமனுக்கு ஏற்ப வாரந்தோறும் ஊதியம் வழங்கப்படுகிறது. சாதாரண காகிதத்தில் 1000 உறைகள் செய்தால் ரூ.350 கிடைக்கும். ஆர்ட் காகிதம் என்றால் ரூ.489. உறையின் வகை, வேகம், சீசன் தேவைக்கு ஏற்ப ஒரு தொழிலாளர் 2000 முதல் 6000 உறைகள் வரை தயாரிக்கிறார்.

ஒரு அலுவல் உறையின் அளவு: 11 x 5 அங்குலம், 100 GSM எடை (ஒரு சதுர மீட்டருக்கு ஒரு கிராம்) ரூ.5க்கு விற்பனையாகிறது.

100 GSM தரத்திலான 1000 உறைக்கு ஒரு தொழிலாளிக்கு ரூ.100 கூலியாக தரப்படுகிறது. அதாவது விற்பனை மதிப்பில் ஐம்பதில் ஒரு பங்கு பெறுகிறார்.

நூறு ரூபாய் வருமானம் பெற ஒரு கைவினைஞர் இரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

PHOTO • Umesh Solanki

தாஜ் என்வலப்சின் உரிமையாளர் எஸ். கே. ஷேக் இயந்திரத்தில் காகிதங்களை வெட்டுவதற்கு முன்பாக செவ்வக அட்டைகளில் அச்சுகளை அடுக்குகிறார்


PHOTO • Umesh Solanki

ஓம் டிரேடர்சின் தொழிலாளர் மக்புல் அஹமது ஜமாலுதீன் ஷேக் காகிதத் தாள்களை மடிப்புக்குத் தயாரான அளவு மற்றும் வடிவத்திற்கு வெட்டும் இயந்திரத்தை இயக்குகிறார். பெரும்பாலான பணிமனை உரிமையாளர்கள் வெட்டுதல், துளையிடுதல் இயந்திரங்களை தாங்களே இயக்குகின்றனர்


PHOTO • Umesh Solanki

துளையிடும் இயந்திரத்தில் பல்வேறு வடிவங்கள், அளவுகளில் உலோக சட்டங்களை (அச்சு என்கின்றனர்) பயன்படுத்துகின்றனர்

PHOTO • Umesh Solanki

ஓம் டிரேடர்ஸ் கைவினைஞர்கள் 100 காகித அடுக்குகளை எண்ணி மடிப்பதற்கு தயாராகின்றனர்


PHOTO • Umesh Solanki

உறைகளுக்கு வடிவம் கொடுப்பதற்காக அவற்றை மடிக்க தொடங்கும் தொழிலாளர். ஒவ்வொரு மடிப்பிற்கும் வெவ்வேறு பெயர்கள் கொண்டு அடையாளப்படுத்துகின்றனர்- மத்து (மேல் மடிப்பு), பெண்டி (கீழ் மடிப்பு), தபா (வலது மடிப்பு, அங்கு கோந்து பூசப்படுகிறது), கோலா (இடது மடிப்பு). தாஜ் என்வலப்சின் பிக்வாய் ரவால் எக்ஸ்-ரே வைப்பதற்கான பெரிய உறைக்கு பெண்டி மடிக்கிறார்


PHOTO • Umesh Solanki

அப்துல் மஜீத் அப்துல் கரிம் ஷேக் ( இடது), சமீர் என்வலப்சின் யூசுப் கான் சோட்டுகான் பதான் ஆகியோர் மடிந்த தாபா, பெண்டியின் மீது தங்கள் உள்ளங்கைகளை பயன்படுத்தி கூர்மையான மடிப்பை உருவாக்குகின்றனர்


PHOTO • Umesh Solanki

துருவ் என்வலப்சின் முகமது இலியாஸ் ஷேக் பக்க மடலில் முட்டியை கொண்டு மடிக்கிறார். அவர் ஒரு நேரத்தில் 100 உறைகளுக்கு இப்படி வேலை செய்கிறார். மேலும் 16 முறை தனது உள்ளங்கைப் புண்ணின் பக்கங்களில் விட்டுவிட்டு மீண்டும் அப்படியே செய்ய வேண்டும்


PHOTO • Umesh Solanki

தாஜ் என்வலப்சின் அப்துல் கஃபார் குலாபாய் மன்சூரி , மல் டோட்வனோபத்தார் ( மடிப்புக் கல்) மடலுக்கு கீழ் பயன்படுத்துகிறார். ஒன்றரை கிலோ எடையிலான அந்த இரும்பு துண்டு இச்செயல்முறைக்கு தேவையான கருவி


PHOTO • Umesh Solanki

கைவினைஞர்கள் பயன்படுத்தும் சிலாஸ் எனப்படும் மர கருவி, உறைகளின் அடுக்கின் வலது பக்கத்தை ஒரு ஸ்லைடில் இழுத்து, கோந்து பூசுவதை எளிதாக்குகிறது


PHOTO • Umesh Solanki

தாஜ் என்வலப்சின் அப்துல் முத்தாலிப் முகமது இப்ராஹிம் அன்சாரி, ரெக்சின் துண்டுக்குள் கட்டப்பட்ட மெல்லிய துணியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட சிறிய மூட்டை போன்ற கருவியான புட்லோ கொண்டு உறைகளின் மீது கோந்து (மைதா மாவு அல்லது புளியங்கொட்டையில் செய்யப்பட்ட கோந்து) பூசுகிறார்


PHOTO • Umesh Solanki

காகித உறையின் வலது மடலான தபாவில் கோந்து பூசும் சமீருதின் ஷேக். அவர் ஒரே சமயத்தில் 100 உறைகளை தயார் செய்கிறார்


PHOTO • Umesh Solanki

கோலா எனும் இடது மடல் மீது வலது மடலை ஒட்டுவதற்கு காகிதங்களை மடித்து வைக்கிறார் தாஜ் என்வலப்சின் பிகாபாய் ராவல்


PHOTO • Umesh Solanki

உறையின் கோந்து பூசப்பட்ட பெண்டியை மூடும் துருவ் என்வலப்சின் முகமது இலியாஸ் ஷேக்


PHOTO • Umesh Solanki

மதிய உணவுக்கு செல்லும் ஓம் டிரேடர்சின் கைவினைஞர்கள். நாள் முழுவதும் அவர்கள் இச்சமயத்தில் மட்டும் தான் வேலையை நிறுத்துகின்றனர்


PHOTO • Umesh Solanki

தாஜ் என்வலப்சில் செய்யப்படும் பெரிய அளவிலான லேமினேஷன் உறையை காட்டுகிறார் அப்துல் முத்தாலிப் முகமது இப்ராஹிம் அன்சாரி


PHOTO • Umesh Solanki

ஒரு சராசரி தொழிலாளி 100 உறைகள் தயார் செய்வதற்கு ஆறு முதல் ஏழு நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறார். ஷர்தாபென் ராவல் (இடது) கடந்த 34 ஆண்டுகளாக உறைகள் செய்து வருகிறார். கணவர் மங்கல்தாஸ் ராவலுடன் (வலது) வேலை செய்தபோது இதை அவர் கற்றார்


PHOTO • Umesh Solanki

ஒட்டுமொத்த செயல்முறைகளிலும் ஒரு உறை 16 சுற்றுகள் ஒரு தொழிலாளியின் கைகளில் சென்று வருகிறது. இதில் விரல்கள் வெட்டுப்படும் ஆபத்துகளும் அதிகம். தனது காயப்பட்ட கட்டை விரலை காட்டும் கலீம் ஷேக்


PHOTO • Umesh Solanki

காயப்பட்ட விரல்களில் கோந்துபட்டால் (கையால் செய்யப்பட்ட கோந்து) எரிவதுடன், வலிக்கவும் செய்கிறது. துருவ் என்வலப்சின் கலீம் ஷேக் அண்மையில் தனக்கு ஏற்பட்ட காயங்களை காட்டுகிறார்


PHOTO • Umesh Solanki

அளவுகளுக்கு ஏற்ப உறைகளை அடுக்குகிறார் தாஜ் என்வலப்சின் ஹனிஃப் கான் பிஸ்மில்லா கான்


PHOTO • Umesh Solanki

மேல் மடலை மடிப்பதன் மூலம் உறையின் வாயை மூடும் முகமது ஹனிஃப் நுர்கானி ஷேக் . இவர் காகித உறை தொழிலாளர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவர்


PHOTO • Umesh Solanki

முமுமைப் பெற்ற உறைகளை நூறு நூறாக பிரித்து பொட்டலங்களாக ஹனிஃப் பதான் கட்டுகிறார்


PHOTO • Umesh Solanki

உறைகளில் பெட்டிகளில் வைக்கும் ஷர்தாபென் ராவல். அகமதாபாத்தில் மொத்தமுள்ள 35 உறை பணிமனைகளில் இவர் ஒருவர் மட்டுமே பெண்


PHOTO • Umesh Solanki

துருவ் என்வலப்ஸ் உரிமையாளர் ஜிதேந்திரா ராவலிடம் தங்கள் பணி அறிக்கையை அளிக்கும் ராவல் தம்பதி. வாரந்தோறும் சனிக் கிழமைகளில் ஊதியம் கொடுக்கப்படும்


PHOTO • Umesh Solanki

2022 ஜனவரி 1 முதல் 2023 டிசம்பர் 31, வரையிலான காலக்கட்டத்தில் கைவினைஞர்களின் ஊதிய உயர்வை பட்டியலிடும் ஆவணத்தின் புகைப்படம் . அகமதாபாத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் இரு தொழிற்சங்கங்களின் கலந்துரையாடலுக்குப் பிறகு இது தயாரிக்கப்பட்டது . 2022- ல் , கைவினை உறையின் விலை 6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது


தமிழில்: சவிதா

Umesh Solanki

Umesh Solanki is an Ahmedabad-based photographer, documentary filmmaker and writer, with a master’s in Journalism. He loves a nomadic existence. He has three published collections of poetry, one novel-in-verse, a novel and a collection of creative non-fiction to his credit.

Other stories by Umesh Solanki
Editor : Pratishtha Pandya

Pratishtha Pandya is a poet and a translator who works across Gujarati and English. She also writes and translates for PARI.

Other stories by Pratishtha Pandya
Photo Editor : Binaifer Bharucha

Binaifer Bharucha is a freelance photographer based in Mumbai, and Photo Editor at the People's Archive of Rural India.

Other stories by Binaifer Bharucha
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha