“மீன் வெட்டும் பெண்களுக்கான இடம் ஒன்றுமில்லை,” என்கிறார் கடலூர் மாவட்டத்தின் கிஞ்சம்பேட்டை கிராமத்தை சேர்ந்த மீன் வெட்டும் தொழிலாளரான கலா.

60 வயது நிரம்பிய அவர், சிங்காரத்தோப்பு பாலத்துக்கு அடியில் அமர்ந்திருக்கிறார். கற்களாலும் உலோகத்தாலும் கட்டப்பட்டிருக்கும் இக்கட்டுமானம் கடலூரின் ஓல்ட் டவுன் துறைமுகத்துக்கு வெளியே அமைந்திருக்கிறது. இங்கு சுமாராக 20-30 மீன் வியாபாரிகளும் மீன் வெட்டும் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். அனைவரும் பெண்கள்.

மாவட்டத்தில் 57.5 கிலோமீட்டர் நீள கடற்கரை இருக்கிறது. குடோன்கள், கிடங்குகள், கடைகள், மீனவப் படகுகள் போன்றவை துறைமுகத்தில் நிரம்பியிருக்கின்றன.

“நிறைய வணிகர்களும் ட்ரக்குகளும் வரத் தொடங்கியபின் துறைமுகத்தில் எங்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது,” என்கிறார் கலா (இந்த பெயரை மட்டுமே அவர் பயன்படுத்துகிறார்). “வெளியே தள்ளப்பட்ட நாங்கள், பாலத்துக்கடியில் இருக்கும் இந்த பொது இடத்துக்கு வந்து சேர்ந்தோம். துறைமுகத்துக்கு வெளியே இப்பகுதி இருக்கிறது,” என்கிறார் அவர்.

விற்பது, வெட்டுவது, காய வைப்பது, மீன் கழிவுகளை விற்பது போன்ற பணிகளை செய்யும் கலா போன்ற பெண்கள் படிப்படியாக வெளியேற்றப்படுகின்றனர். உடன் படிக்க: தலைகள், வால்கள் முதலியவற்றால் புலி வாழ்க்கை ஓட்டுகிறார்

பொதுவாக மீனவப்பெண்கள் மீன் விற்பவர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். முதலீடு கிட்டாத பெண்களும் உடல்ரீதியாக பிரச்சினைகள் கொண்ட பெண்களும் மீன் விற்பவர்களுக்கு அருகே அமர்ந்து மீன்களை சுத்தப்படுத்தி வெட்டும் வேலைகளை செய்கின்றனர்.

”விற்பனையாளர்களுக்கு அருகே நாங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் மீன் வாங்கும் வாடிக்கையாளர்கள் மீன் வெட்டவும் சுத்தப்படுத்தவும் எங்களிடம் வருவார்கள். விற்பனையாளர்களுக்கு அருகே நாங்கள் இல்லையெனில் வியாபாரம் நடக்காது,” எனச் சுட்டிக் காட்டுகிறார் கலா.

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: கடலூர் ஓல்ட் டவுன் துறைமுகத்தில் கிட்டத்தட்ட 20-30 மீன் வெட்டுவோரும் விற்பனையாளரும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் பெண்கள். வலது: சிங்காரத்தோப்பு பாலத்துக்கடியில் அமர்ந்து, பக்கத்து உணவகத்தில் வாங்கிய மதிய உணவை உண்கிறார் கலா. ‘மீனுடன் காய்கறி ஏதேனும் எடுத்துக் கொண்டால் அதற்கேற்ப ஒரு உணவின் விலை 30லிருந்து 40 ரூபாய் வரை மாறும். பெரும்பாலும் நான் சாப்பிட நேரமாகிவிடும்,’ என்கிறார் அவர்

உப்பனாறு மற்றும் பரவனாறு ஆகிய இரு ஆறுகள் இணையும் இடம் கடலூர் துறைமுகமாகும். இரு ஆறுகளும் அங்கு ஒன்றாகி, வங்காள விரிகுடா சென்று கலக்கின்றன. இந்தியாவின் 7,500 கிமீ நீளக் கடலோரத்தை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட சாகர்மாலா திட்டத்தின்படி அத்துறைமுகம் நவீனப்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்படுகிறது.

இந்த மேம்பாடு கலா போன்ற மீனவப் பெண்களுக்கு இன்னும் துயரத்தை ஏற்படுத்தும். “பல முறை நான் இடம்பெயர்ந்துவிட்டேன். இனியும் இடம்பெயர முடியுமா எனத் தெரியவில்லை.” மறுசீரமைக்கப்பட்ட கடலூர் துறைமுகத்தைதான் அவர் குறிப்பிடுகிறார். மீன் வெட்டும் தொழிலாளர்கள் போன்ற பல வகை பெண் தொழிலாளர்களுக்கு அங்கு இடம் இருக்காதென அவர் நம்புகிறார்.

நவீனப்படுத்தப்பட்ட கடலூர் துறைமுகம் பூம்புகார் கடலோரப் பொருளாதார மண்டலத்தில் (CEZ) இடம்பெறுகிறது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அனல் மின் நிலையங்கள் மற்றும் பிற தொழில்கள் கடலூர் துறைமுகத்தில் வரவிருக்கின்றன. ஒரு மாவட்டத்தின் பெரும் பகுதியோ அல்லது பல கடலோர மாவட்டங்கள் கூட்டாகவோ ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான செலவுகளை குறைத்து, சரக்குப் போக்குவரத்து அதிகரிக்கவென துறைமுகத்துடன் வலுவான பிணைப்புகளை கொண்டிருக்கும் பகுதிகளைதான் கடலோர பொருளாதார மண்டலம் எனக் குறிப்பிடுகின்றனர் .

*****

தமிழ்நாட்டின் நாகப்பட்டின மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் பிறந்தவர் கலா. அவரின் தந்தை கட்டுமரத்தில் சென்று மீன் பிடித்தார். அந்த மீன்களை சந்தைக்கு சென்று விற்றார் தாய். 17 வயதில் மணம் முடித்த கலா, வடக்குப் பக்கம் கடலோரமாக நகர்ந்து கடலூருக்கு அருகே இருக்கும் கணவரின் ஊரான கிஞ்சம்பேட்டைக்கு இடம்பெயர்ந்தார்.

“என்னுடைய மாமியார் முனியம்மாதான் மீன் விற்பனைக்கு என்னை அறிமுகப்படுத்தினார். இருவருமாக சேர்ந்து கிஞ்சம்பேட்டை சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு மீன் விற்போம்,” என நினைவுகூருகிறார் கலா. மீன் கிடைப்பதை பொறுத்து அவர்கள் நெத்திலி, கொடுவா, சுறா, கெரா போன்ற மீன்களை விற்பார்கள்.

இருபது ஆண்டுகளுக்கு முன் ஆரோக்கியம் குன்றி முனியம்மா இறந்தார். கலா தொடர்ந்து அங்கு வேலை பார்த்தார். அவருக்கும் அவரது கணவர் ராமனுக்கும் இரு மகள்களும் இரு மகன்களும் இருக்கின்றனர். கலாவும் அவரது குடும்பமும் பட்டனவர் சமூகத்தை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டின் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக அச்சமூகம் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: கலா 15 வருடங்களாக மீன் வெட்டும் பணி செய்து வருகிறார். அதற்கு முன் அவர் இருபது ஆண்டுகளாக மீன் விற்பனை செய்திருக்கிறார். ‘என் கணவரின் ஊரான கிஞ்சம்பேட்டைக்கு மணப்பெண்ணாக வந்தவுடன் என் மாமியார்தான் மீன் விற்பனையை எனக்கு அறிமுகப்படுத்தினார்.’ வலது: ‘விற்பனையாளர்களுக்கு அருகே நாங்கள் இருக்க வேண்டும். மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் அப்போதுதான் மீன்களை வெட்டவும் சுத்தப்படுத்தவும் எங்களிடம் வருவார்கள். விற்பனையாளர்களுக்கு அருகே நாங்கள் இல்லாவிட்டால், வியாபாரம் கிடைக்காது’

கலாவுக்கு இருதயப் பிரச்சினை இருப்பது 2001ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. “அதிகமாக மூச்சு வாங்கும். எல்லா நேரமும் சோர்வாகவே இருப்பேன்,” என நினைவுகூறுகிறார். 20-லிருந்து 25 கிலோ வரை எடை கொண்ட மீன்களை தலையில் சுமந்து துறைமுகத்திலிருந்து சந்தைக்கும் பின் சந்தையிலிருந்து தெருக்களுக்கும் கொண்டு சென்று விற்றதால்தான் பிரச்சினை ஏற்பட்டது என்கிறார் அவர். அதே வருடத்தில் அவருடைய கணவர், 45 வயது ராமன் கொந்தளிப்பான கடலில் மீன் பிடிக்கப் போய் உயிரிழந்தார்.

”அது கடினமான காலக்கட்டம்,” என நினைவுகூருகிறார் அவர். 2005ம் ஆண்டில் கீழே விழுந்து காலில் காயப்பட்டபிறகு அவரது நிலைமை இன்னும் மோசமானது. காயமும் இருதயப் பிரச்சினையும் நீண்ட தூரம் மீன் சுமந்து அவர் செல்வதற்கு சிக்கலை கொடுத்தது. அப்போதுதான், “நான் துறைமுகத்தில் மீன் வெட்டுவதென முடிவெடுத்தேன்,” என்கிறார அவர்.

4 சதவிகித வட்டிக்கு 20,000 ரூபாய் கடன் வாங்கினார் கலா. அதிலிருந்து 800 ரூபாய்க்கு ஓர் அரிவாள் மனையும் 400 ரூபாய்க்கு கத்தியும் 200 ரூபாய்க்கு ஒரு நாற்காலியும் வாங்கினார். மிச்சத்தை வீட்டுச்செலவுக்கு பயன்படுத்தினார். அந்த தொகைக்கும் இன்னும் அவர் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்.

மீன் விற்பனையில் இல்லாத இப்பெண்களை அரசுக் கொள்கைகள் புறக்கணிக்கின்றன. மீன் வெட்டும் கலா போன்ற பெண்களை 2017ம் ஆண்டின் கடல் மீன்வள தேசியக் கொள்கை அங்கீகரிக்கிறது. “மீன் பிடித்ததற்கு பிறகான பணிகளை செய்வதில் 66 சதவிகிதம் பெண்கள்தான் மீன்வளத்துறையில் இருக்கின்றனர். குடும்பங்களை பார்த்துக் கொள்வது மட்டுமின்றி, மீன் விற்பது, காய வைப்பது போன்ற பிற மதிப்பு வாய்ந்த பணிகளையும் பெண்கள் செய்கின்றனர்…” என அக்கொள்கை குறிப்பிடுகிறது.

இருப்பினும், கிடைத்த ஆதரவு மிகக் குறைவுதான்.

*****

ஒரு கிலோ மீனை 20 ரூபாய்க்கும் ஒரு கிலோ இறாலை 30 ரூபாய்க்கும் கலா இப்போது சுத்தப்படுத்துகிறார். நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 500 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. மீன் விற்பனையில் காலம் மற்றும் கிடைக்கும் மீனைப் பொறுத்து இரட்டிப்பு வருமானத்தை அவர் பெற முடியும்.

அதிகாலைக்கு முன்பே எழுந்து விடுகிறார். துறைமுகத்துக்கு அருகே இருக்கும் பாலத்துக்கு அதிகாலை 4 மணிக்கு வந்து விடுகிறார். 13 மணி நேரங்கள் கழித்து மாலை 5 மணிக்கு அவர் கிளம்புகிறார். “காலை நேரங்களில்தான் அதிக வியாபாரம் இருக்கும். வாடிக்கையாளர்களும் சிறு உணவகத்தாரும் மீன் வாங்க வருவார்கள். வாங்கியவற்றை வெட்டவும் சுத்தப்படுத்தவும் கொடுப்பார்கள்,” என்கிறார் அவர். மாலை நெருங்கும்போதுதான் அவர் இளைப்பாற நேரம் கிடைக்கும். தொலைக்காட்சி தொடர்களை பார்த்துக் கொண்டே கலா இரவுணவை தயாரிப்பார்.

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

அதிகாலை 4 மணிக்கு கலா துறைமுகத்துக்கு வந்து மாலை 5 மணிக்கு கிளம்புவார். அதிகாலை நேரங்களில்தான் அதிக வியாபாரம் நடக்கும். மீன்களை வெட்டவும் சுத்தப்படுத்தவும் வாடிக்கையாளர்கள் கொடுப்பார்கள்

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: இருதயப் பிரச்சினை இருப்பதை 2001ம் ஆண்டில் கலா கண்டுபிடித்தார். ‘அதிகமாக மூச்சு வாங்கும். எல்லா நேரமும் சோர்வாகவே இருப்பேன்.’ 2005ம் ஆண்டில் கீழே விழுந்து காலில் காயமேற்பட்ட பிறகு அவரின் நிலைமை மோசமானது. தூரமான இடங்களுக்கு நடக்க முடியவில்லை. வலது: இரவுணவின்போது தொலைக்காட்சி பார்த்து கலா இளைப்பாறுகிறார். இலகுவாக இருக்க முடியவில்லை

2018ம் ஆண்டில் இன்னொரு இடியை கலாவின் வாழ்வாதாரம் எதிர்கொண்டது. மீன்களின் இனவிருத்தியையும் கடல்வாழ் உயிரினங்களின் சூழலையும் பாதிப்பதாக சொல்லி சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடையால் வேலையில்லாமல் போனது. பல பெண்கள் மீன் வெட்டும் வேலைக்கு தள்ளப்பட்டனர்.

கோவிட் தொற்று பலரை மீன் வெட்டும் வேலைக்குக் கொண்டு வந்தது. தொடக்கத்தில் பட்டனவர் சமூகத்தை சேர்ந்த பெண்கள்தான் பெரும்பாலும் மீன் வெட்டும் வேலையை செய்தார்கள். ஊரடங்கு காலத்தில் வேலைக்கான வாய்ப்புகள் குறைந்ததும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களையும் பட்டியல் சமூகங்களையும் சேர்ந்த பெண்களும் இங்கிருக்கும் உழைப்பு சந்தைக்குள் நுழைந்து துறைமுகத்தில் மீன் வெட்டும் பணிகளை செய்யத் தொடங்கினர். “இது இன்னும் நிலைமையை நிச்சயமற்றதாக்கியது,” என்கிறார் அவர்.

“எதிர்காலம் பாதுகாப்பற்றதாக தெரிகிறது. ஆனால் முடிந்தவரை உழைப்பதென முடிவெடுத்திருக்கிறேன். என்னையும் நான் பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு பேரக் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போதைக்கு நான் ஓய்வதாக இல்லை,” என்கிறார் அவர்.

சங்கீதா தர்மராஜன் மற்றும் உ.திவ்யாஉதிரன் ஆகியோரது ஆதரவில் இக்கட்டுரை எழுதப்பட்டது.

தமிழில்: ராஜசங்கீதன்

Nitya Rao

Nitya Rao is Professor, Gender and Development, University of East Anglia, Norwich, UK. She has worked extensively as a researcher, teacher and advocate in the field of women’s rights, employment and education for over three decades.

Other stories by Nitya Rao
Editor : Urvashi Sarkar

Urvashi Sarkar is an independent journalist and a 2016 PARI Fellow.

Other stories by Urvashi Sarkar
Photographs : M. Palani Kumar

M. Palani Kumar is PARI's Staff Photographer and documents the lives of the marginalised. He was earlier a 2019 PARI Fellow. Palani was the cinematographer for ‘Kakoos’, a documentary on manual scavengers in Tamil Nadu, by filmmaker Divya Bharathi.

Other stories by M. Palani Kumar
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan