தானே மாவட்டத்தின் நிம்பாவலி கிராமத்தில் சப்ரியா மலை அடிவாரத்தில், மைய மும்பையிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, எங்களின்  கரேல் பதா. வார்லி பழங்குடியினரின் இந்த சிறிய ஊரில் 20-25 வீடுகள் மட்டுமே இருக்கின்றன.

ஒவ்வோர் ஆண்டையும்போலவே, இந்த ஆண்டும், தீபாவளித் திருவிழாவை பதா பாரம்பரியத்துடன் கொண்டாடியது. இந்த மாதத்தின் தொடக்கத்தில், எல்லோரும் திருவிழாவுக்கான தயாரிப்பில் மும்முரமாக இறங்கிவிட்டனர்.

வாக்பர்சி, பார்கி திவ்லி, மோதி திவ்லி, பாலிப்பிரதி பதா என எங்கள் சமூகத்தினருக்கு தீபாவளியில் நான்கு முக்கியமான நாள்கள் உண்டு. இந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி முதல் 8வரை கொண்டாடினோம்.

வார்லி இனத்தினர் புலியை கடவுளாகக் கருதுகின்றனர். வாக்பர்சியின்போது நாங்கள் புலியிடம் பிரார்த்தனை செய்கிறோம். பழங்குடியினர் பதாகள் பொதுவாக வனப்பகுதியில் அமைந்திருக்கும். முந்தைய காலத்தில், வார்லி இனத்தினர் பிழைப்புக்காக முழுவதுமாக காட்டையே நம்பியிருந்தனர். மேய்ச்சலுக்காக கால்நடைகளை காட்டுப்பகுதிக்குதான் கூட்டிச்செல்வார்கள். இன்னும் நிறைய பேர் அப்படித்தான் செய்கிறார்கள். தங்களைத் தாக்கவேண்டாமென அவர்கள் புலியிடம் பிரார்த்தனை செய்தனர். பயத்தைத் தாண்டி அவர்களுக்கு மரியாதை வந்தது.

Garelpada is a small hamlet of the Warli Adivasis that has only a handful of houses, around 20-25.
PHOTO • Mamata Pared

தானே மாவட்டத்தின் நிம்பாவலி கிராமத்தில் சப்ரியா மலையின் அடிவாரத்தில், அதாவது மைய மும்பையிலிருந்து 95 கிமீ தொலைவில் இருக்கிறது, எங்களின் கரேல் பதா. இந்த ஆண்டும் பதாவில் அதன் மரபுவழியில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது

கோவாதேவி கோயிலில் ஒரு மரப்பலகையின் மையத்தில் ஒரு புலியின் உருவம் பொறிக்கப்பட்டு இருக்கும். சாமி கும்பிடுகையில் ஊர் மக்கள் இங்கு தேங்காய் உடைத்து, ஊதுபத்திகள், விளக்கு ஆகியவற்றை ஏற்றிவைக்கின்றனர். பதாவுக்கு அருகே சிறிது தொலைவில் உள்ள காட்டில் ஒரு பெரிய கல்தான், எங்கள் புலிக் கோயில். அந்தக் கல் மீது பாதரச சல்பைடால் பூச்சு பூசப்பட்டிருக்கும்.

சிறிய விளக்கு எனும் பொருளைக் கொண்ட பார்கி திவ்லி நாளன்று, என் அம்மா பிரமிளா காட்டுக்குள் இருந்து கொஞ்சம் சிரோட்டிகளை எடுத்துவருவார். அவருக்கு 46 வயது; செங்கல் சூளைகளில் வேலைசெய்தார்; கருப்பு வெல்லத்திலிருந்து மது தயாரித்து விற்பார். ஆனால் இப்போது வனத்தில் உள்ள எங்களின் இடத்தில் விவசாயம் செய்கிறார். வெள்ளரிவகையைச் சேர்ந்த சிரோட்டி காட்டுப்பழங்களை வெட்டியெடுக்கிறார். ஆனால் இவை சிறிதாகவும் கசப்பாகவும் இருக்கும். விளக்கு செய்வதற்காக உள்பக்கமாக அவற்றை குழிவாக்குவார்.

விளக்குக்காக, வீட்டுச்சுவரில் உயரமான இடத்தில் பசுமாட்டுச் சாணியையும் மண்ணையும் கலந்து உள்ளீடற்ற பொவலா எனப்படும் வட்டமான தாங்கியை ஏற்படுத்துவார்கள். அந்தத் தாங்கியை சாமந்திப்பூக்களால் அலங்கரிப்பார்கள். மாலையில் இந்த பொவலாவில் விளக்கை வைத்து, தீபம் ஏற்றப்படும். அது உயரத்தில் வைக்கப்படுவதால், அந்த இடம் முழுவதற்கும் விளக்கு வெளிச்சம் அளிக்கும்.

PHOTO • Mamata Pared
PHOTO • Mamata Pared

இடது: பார்கி திவ்லி நாளில், ஒரு காட்டுப்பழத்தை வழித்தெடுத்து கிண்ணமாக ஆக்கி, தயாரிக்கப்பட்ட ஒரு விளக்கு மண்ணும் சாணமும் கலந்த பொவாலாவில். வலது: எங்கள் வயல்களில் அறுவடை செய்யப்பட்ட கரண்டே, அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கும் பண்டங்களில் ஒன்று

முன்னைய காலகட்டங்களில், எங்களுடைய பதாவில் உள்ள அனைத்து வீடுகளும் கரவி குச்சிகளாலும் மரத்தாலுமே அமைக்கப்படும். ஓலைக்கூரையும் வேயப்பட்டிருக்கும். அப்போது சாணம்கலந்த பொவாலா குடிசையில் தீ பிடிக்காமல் பாதுகாக்கும். (2010 ஆம் ஆண்டுவாக்கில், எங்கள் ஊரில் இருப்பவர்கள் இந்திரா ஆவாஸ் திட்டத்தின் கீழ் செங்கல்,சிமெண்ட் வீடுகளைக் கட்டத் தொடங்கிவிட்டனர்.)

பெரிய விளக்கு எனப்பொருள்படும் பார்கி, மோதி திவ்லி நாள்களில் ஊரில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பாகவும் இந்த விளக்குகள் அலங்கரிக்கும். இரண்டு நாள் இரவுகளிலும் திவ்லியின் வெளிச்சம் பதாவில் உள்ள இருளை விரட்டுகிறது - மாட்டுக் கொட்டில், சாணமேடு, சமுதாயக் கிணற்றின் ஓரம் என - எல்லா இடங்களிலும் தீபச்சுவாலைகள் தென்றல் காற்றால் ஆடியபடி இருக்கும்.

பலிபிரதி பதாவில், விடிகாலையில் விழா தொடங்கிவிடும். அன்றைய நாள் தந்திரமான குறும்பு நாளாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சந்தேகம் வராதபடி பாதிப்பும் ஏற்படாமல் பீடித் தீயால் இலேசாக சுடுவார்கள். "அனைவரும் சீக்கிரமே எழுந்து, விரைவாக குளியலை முடித்துவிடவேண்டும். தூங்குபவர்களை எழுப்புவதற்குதான் இந்த தந்திரக் குறும்பு பழக்கம்..”என்கிறார் ராம் பரேட். அவர் என்னுடைய மாமா. 42 வயது இருக்கும். அவரின் குடும்பத்தினர் செங்கல் சூளைகளில் வேலை செய்துவந்தனர்; இப்போது, ஒப்பந்தத் தொழிலாளியாகவும் மழைக்காலத்தில் வனத்தில் உள்ள இடத்தில் விவசாயமும் செய்கிறார்.

PHOTO • Mamata Pared
PHOTO • Mamata Pared

பலிபிரதி பதாவில் , எங்கள் மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, பிரார்த்தனை நடைபெறுகிறது. 'இது ஒரு பழங்குடியினரின் மரபு ' என்கிறார் 70 வயதான அசோக் காக்கா கரேல்.( இடது)

பலிபிரதி பதாவில், எல்லாருடைய வீட்டு முற்றங்களும் மாட்டுச் சாணத்தால் இலேசாக மெழுகி, மாட்டுக் கொட்டில்கள் தூய்மைப்படுத்தப்படுகின்றன. கால்நடைகள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு, வழிபாடு நடக்கிறது. "இது ஒரு பழங்குடியினர் மரபு " என்கிறார் அசோக் காக்கா கரேல். கிட்டத்தட்ட 70 வயது இருக்கும் இவர், மாடு மேய்க்கிறார். அவருடைய கை மண் சேறும் அரிசிமாவும் கலந்த கலவை ஒட்டியபடி இருந்தது. சிவப்பு-மரம் கலந்த இந்த நிறம் மாடுகளுக்கு பனைப் பூச்சு பூசுவதற்கு தோதாக இருக்கும். அவற்றின் கொம்புகளும் அதே கலவையைக் கொண்டு வண்ணம்பூசப்படும்.

பதாவில் உள்ள ஆண்கள் மாடுகளை அலங்கரிப்பதில் மும்முரமாக இருக்கையில், ​​பெண்களோ தீபாவளி சிறப்பு உணவுகளை சமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பன்மோடி, சாவ்லி, கரண்டே ஆகியவை மிகவும் ஆவலோடு காத்திருக்கும் சுவையான பண்டங்கள். இவை அனைத்தும் அவர்களே உருவாக்கிய பொருள்களைக் கொண்டே செய்யப்படுகின்றன.

"எங்களுடைய சிறு நிலங்களில் புதிதாக அறுவடைசெய்யப்பட்ட நெல், நன்றாக மாவாக அரைக்கப்படுகிறது. இத்துடன் அரைத்த வெள்ளரிக்காய், சிறிதளவு வெல்லத்தைச் சேர்க்கிறோம். இந்த மாவை மடிக்கப்பட்ட தேயிலைகளுக்கு இடையே வைத்து வேகவைக்கப்படுகிறது.” - பன்மோடி செய்வது எப்படி என விளக்குகிறார், என் அம்மா பிரமிளா. "இதைச் செய்யும்போது ​​வீட்டைத் துடைக்கவோ கழுவிவிடவோகூடாது. அப்படிச் செய்தால் எப்போதும் பன்மோடி செய்யப்படக்கூடாது! ” என்றும் அம்மா சொல்கிறார்.

PHOTO • Mamata Pared
PHOTO • Mamata Pared
PHOTO • Mamata Pared

எங்கள் வயல்களில் விளைந்த நெல்லரிசியின் மாவு, அரைத்த வெள்ளரி, வெல்லம் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும், சுவையான பான்மோடி மடிக்கப்பட்ட சாய் இலைகளுக்கு இடையே வைக்கப்பட்டு வேகவைக்கப்படுகிறது

கரண்டேவை விதைப்பதற்கு, பருவமழைக் காலத்தில் ஒரு சிறிய, தட்டையான மண் மேடு உருவாக்கப்படும். தீபாவளி நேரத்தில் புதிய கரண்டே தவழும் மரங்களில் வளரும். சில இருண்டவை, மற்றவை வெள்ளை, சில வட்டமானவை, மற்றவை சீரற்றவை. அவை உருளைக்கிழங்கு போல ருசிக்கின்றன. மேலும் வனப்பகுதிகளின் ஒரு பகுதியில், உலர்ந்த இலைகள், வைக்கோல் மற்றும் உலர்ந்த சாணம் கேக்குகள் எரிந்து அந்த பகுதியை சவ்லி சாகுபடிக்கு தயாராக வைக்கின்றன. நிலத்தை உழுது, சாவ்லா என்று நாம் அழைக்கும் சாவ்லி (கருப்பு-கண்கள் கொண்ட பீன்ஸ்) அங்கு விதைக்கப்படுகிறது. பலிபிரதிபாதாவில், கரண்டே மற்றும் சாவ்லா நீரில் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கப்படுகிறது.

சமையலை முடித்தபிறகு, பெண்கள் கால்நடைக் கொட்டிலுக்குச் செல்வார்கள். வைக்கோல், உலக்கை,  இரும்பு உளி, கொஞ்சம் சாமந்திப் பூக்கள் வெளியே வைக்கப்படும். ஆடு, மாடுகள் கொட்டிலில் இருந்து கிளம்பியதும் அவற்றிடம் மிதிபடும்படி சிரோட்டி பழங்கள் கீழே போடப்படும். அப்படி ஆடு, மாடுகளின் குளம்புகளால் மிதிபடும் சிரோட்டி விதைகள் இனிப்பான பழங்களைக் கொடுக்கும் என்று கூறுகின்றனர்.

கால்நடைகள் விவசாயத்துடன் ஒன்றுகலந்தவை. வேளாண்மையில் விளைச்சலைக் கொண்டுவர மனிதர்களோடு சேர்ந்து அவையும் பாடுபடுகின்றன. இதனால் தீய சக்திகள் தங்களின் கால்நடைகளை சபிக்க வாய்ப்பிருக்கிறது என வார்லி இனத்தவர் நம்புகின்றனர். ஆகையால், அவற்றுக்கு தீமை ஏதும் நிகழாமல் தடுக்க, இவர்கள் ஒரு தீ சடங்கைச் செய்கின்றனர். ஊரிலுள்ள பசுக்கள், எருதுகள், எருமைகள், ஆடுகள் என எல்லா கால்நடைகளையும், வைக்கோல் வளையத்தை எரித்து அந்தத் தீ வளையத்தைத் தாண்ட வைக்கின்றனர்.

PHOTO • Mamata Pared
PHOTO • Mamata Pared

தீபாவளியின்போது ​​வார்லி இனத்தவர் ஒரு தீ சடங்கைச் செய்கின்றனர். ஊரில் உள்ள அனைத்து கால்நடைகளையும் வைக்கோல் வளையத் தீயைத் தாண்டுமாறு ஓட்டிவிடுகின்றனர்

இந்த நாளில் வார்லி இனத்தவர், வகையா எனப்படும் புலி, ஹிர்வா எனப்படும் பசுமை, ஹிமாய் எனப்படும் மலைத் தெய்வம், கன்சாரி - தானியங்கள்,  காவல்தெய்வமான நரந்தேவ், தீமையிலிருந்து பாதுகாக்கும் கடவுள் செடோபா ஆகியவற்றை வழிபடுகின்றனர். சாமந்திப் பூக்கள் முதலில் மந்திரிக்கப்பட்டு, பிறகு சாவ்லா, கரண்டே, பன்மோடியுடன் கடவுளுக்குப் படைக்கப்படும். இந்த சமயத்திலிருந்து, அதிகமான வார்லி இனப் பெண்கள் பருவமழை தொடங்கும்வரை சாமந்திப்பூக்களை வைத்துக்கொள்வார்கள். அதன் பிறகு, அடுத்த தீபாவளிவரை சாமந்திப் பூக்களை சாமி கும்பிடுவதற்கோ அலங்காரத்திற்கோ பயன்படுத்தமாட்டார்கள்.

எல்லா பருவமழைக் காலங்களிலும் பழங்குடியினர் தங்களின் சிறு வனநிலத்தில் பாடுபடுகின்றனர். மலைகளில் உள்ள பாறைப்பகுதிகளிலும் அவர்கள் பயிர்செய்வதில் கடும் உழைப்பு செலுத்துகின்றனர். தீபாவளி சமயத்தில், நெல், உளுந்து, சோளம் முதலிய பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கும். இயற்கையின் அருளால் விளைச்சல் நன்றாக அமைந்தால், விளைபொருள்களை விற்று பல குடும்பங்கள் கூடுதல் வருவாயை ஈட்டமுடியும். இப்படியான மகிழ்ச்சியுடன் பழங்குடினர் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். புதிய அறுவடையைப் படைத்து வழிபட்ட பிறகுதான், அவர்கள் சாப்பிடத் தொடங்குகின்றனர்.

ஆனால் பருவமழை முடிந்துவிட்டால், வயல்களில் ஒரு வேலையும் இருக்காது. அடுத்து வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என்பதைப் பற்றி சிந்திக்கவேண்டிய கட்டம். சில பேர் அருகிலுள்ள ஊர்களில் செங்கல்சூளை வேலைக்குச் செல்கின்றனர்; சிலர் மும்பையின் வடக்கு புறநகர்ப் பகுதிகளில் கட்டுமானத் தளங்களில் வேலைக்குப் போகின்றனர். மற்றவர்கள் கல் உடைக்கவும் சர்க்கரை ஆலைகளுக்கும் செல்வார்கள். அடுத்த சில மாதங்களுக்கு இவர்களின் உழைப்பு இப்படித்தான்!

மராத்தியிலிருந்து மொழிபெயர்த்தவர், சம்யுக்த சாஸ்திரி.

தமிழில்: தமிழ்கனல்

Mamata Pared

Mamata Pared is a 2018 PARI intern; she is doing a Masters in Journalism and Mass Communication at the Abasaheb Garware College in Pune.

Other stories by Mamata Pared
Translator : R. R. Thamizhkanal

R. R. Thamizhkanal is a Chennai-based independent journalist and a translator focussing on issues related to public policies.

Other stories by R. R. Thamizhkanal