5 கிலோ எடை குறைந்த போது, அது பிரச்னைக்குரியது என்பதை  பஜ்ரங் கெய்க்வாட் நன்கறிவார். “முன்பெல்லாம் நான் ஆறு லிட்டர் எருமைப் பால், 50 பாதாம் பருப்பு, 12 வாழைப்பழம், இரண்டு முட்டைகள் ஆகியவற்றை தினமும் சாப்பிடுவேன். ஒருநாள் விட்டு ஒருநாள் இறைச்சி சாப்பிடுவேன்,” என்கிறார் அவர். இப்போது அவர் ஏழு நாட்கள் இடைவேளையில் தான் இவற்றை சாப்பிடுகிறார் அல்லது அதைவிட அதிக இடைவேளை எடுத்துக் கொள்கிறார். அவரது எடையும் 61 கிலோவாக சரிந்துவிட்டது.

“ஒரு மல்யுத்த வீரர் எடையை இழக்கக் கூடாது,” என்கிறார் கோலாப்பூர் மாவட்டம் ஜூனி பர்கான் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பயில்வான்  பஜ்ரங். “உணவு குறைந்தால் உடல் பலவீனமடையும். சண்டையின் போது சிறந்த அசைவுகளைத் தர முடியாது. பயிற்சியைப் போன்று எங்களின் உணவுமுறையும் மிகவும் முக்கியமானது.” மகாராஷ்டிராவின் கிராமப்புறத்தைச் சேர்ந்த பிற மல்யுத்த வீரர்களைப் போன்று பஜ்ரங்கும் களிமண் மல்யுத்தம், செம்மண்ணில் நடைபெறும் திறந்தவெளி போட்டிகள் போன்றவற்றில் கிடைக்கும் பரிசுத் தொகை மூலம் கிடைக்கும் பலமான உணவுமுறையைப் பெரிதும் சார்ந்துள்ளார்.

கோலாப்பூரின் டோனோலி கிராம மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பஜ்ரங் பங்கேற்று 500 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. “கடுமையான காயங்களின் போதுக் கூட இத்தகையை இடைவேளையை நான் எடுத்துக் கொண்டதில்லை,” என்கிறார் அவர்.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

இடது: பஜ்ரங் அவரது தாய் புஷ்பா கெய்க்வாட்; 2021 ஜூலை மாதம்  அவர்கள் வீடு வெள்ளத்தில் மூழ்கியது. வலது: மழையால் சேதமடைந்துள்ள மல்யுத்த பள்ளியை பார்வையிடும் பயிற்சியாளர் மாருதி மானி. ஊரடங்கினால் மல்யுத்தப் போட்டிகள் எதுவும் ஓராண்டாக நடைபெறாத நிலையில் வெள்ளம் வந்துவிட்டன

2020 மார்ச் முதல் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு மகாராஷ்டிரா முழுவதும் பல்வேறு கிராம திருவிழாக்களில் நடைபெற்ற குஸ்தி போட்டிகளும் தடை செய்யப்பட்டுவிட்டன. இப்போதும் அதற்கு அனுமதி இல்லை.

கோவிட்-19 பெருந்தொற்று தொடங்குவதற்கு முன் மல்யுத்த சீசனில் மேற்கு மற்றும் வட மகாராஷ்டிராவின் பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற போட்டித் தொடர்களில் பங்கேற்று பஜ்ரங் ரூ.1,50,000 வரை சம்பாதித்தார். அதுதான் அவரது ஓராண்டு வருமானம். “ஒரு சீசனில் நல்ல மல்யுத்த வீரர் குறைத்தது 150 போட்டிகளில் பங்கேற்க முடியும்,” என்கிறார் அவர். அக்டோபர் இறுதியில் தொடங்கும் சீசன் ஏப்ரல்- மே வரை (மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு வரை) நடைபெறும். “முறைசாரா பயிற்சி பெறாத மல்யுத்த வீரர்கள் ஒரு சீசனில் ரூ.50,000 வரை சம்பாதிப்பார்கள், அதுவே மூத்த மல்யுத்த வீரர்கள் ரூ.20 லட்சம் வரை ஈட்டுவார்கள்,” என்கிறார் பஜ்ரங்கின் பயிற்சியாளரான 51 வயது மாருதி மானி.

ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே 2019 ஆகஸ்ட் மாதம் மேற்கு மகாராஷ்டிரா, கொங்கன் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஹத்காங்கிலி தாலுக்கா ஜூனே பர்கான் கிராமத்தைச் சேர்ந்த பஜ்ரங் மற்றும் பிற பயில்வான்கள் பின்னடைவைச் சந்தித்தனர். ஜூனே (பழைய) பர்கான், அடுத்துள்ள பர்கான் ஆகியவை வாரனா ஆற்றின் வடக்கு கரைக்கு அருகமையில் உள்ளதால் மூன்று நாள் மழையால் அப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. இரண்டு கிராமங்களையும் சேர்த்து மொத்த மக்கள் தொகை 13130 (கணக்கெடுப்பு 2011).

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மல்யுத்த பயிற்சிப் பள்ளிகளும் மகாராஷ்டிரா முழுவதும் மூடப்பட்டன.  இது பயில்வான்களின் பயிற்சியை பாதித்தது. பயிற்சிக்கும், போட்டிகளுக்கும் இடையே இடைவெளி அதிகரித்ததால் பலரும் மாற்று வேலை தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்

நூற்றாண்டு பழமை வாய்ந்ததாக கருதப்படும் ஜூனே பர்கானில் உள்ள ஜெய் ஹனுமான் பயிற்சிப் பள்ளியும் மூழ்கியது. இங்குள்ள மற்றும் அருகமை கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர்கள் (அனைவரும் ஆண்கள்) அருகில் உள்ள கிராமங்களில் இருந்து லாரிகள் மூலம் 27,000 கிலோ செம்மண்ணை கொண்டு வந்து ஐந்து அடி ஆழத்திற்கு 23 x 20 அடி பயிற்சி அரங்கை மறுகட்டமைத்தனர். இதற்கு ரூ.50,000 செலவானது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மகாராஷ்டிரா முழுவதிலும் மல்யுத்த பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டன. இது பஜ்ரங்கி போன்ற பிற மல்யுத்த வீரர்களின் பயிற்சியையும் பாதித்தது. பயிற்சிக்கும், போட்டிகளுக்கும் இடையே இடைவெளி அதிகரித்து போனதால் பலரும் மாற்று வேலை தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

2021 ஜூன் மாதம் பஜ்ரங் தனது வீட்டிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாகன உதிரிபாக தொழிற்சாலையில் தொழிலாளராகச் சேர்ந்தார். “நான் மாதம் ரூ.10,000 பெறுகிறேன், என் உணவிற்கே குறைந்தது ரூ.7000 தேவைப்படும்,” என்கிறார் அவர். மேல் மட்டத்தில் உள்ள மல்யுத்த வீரர்கள் ஒருநாள் உணவிற்கு மட்டும் ரூ.1000 செலவிடுவதாக சொல்கிறார் அவரது பயிற்சியாளர் மாருதி மானி. இந்த உணவுமுறையை பின்பற்ற முடியாமல் 2020 ஆகஸ்ட் முதல் பஜ்ரங் உணவு எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொண்டதால் எடையும் குறையத் தொடங்கியது.

'இரண்டு மாதங்களாக ஒரு மல்யுத்த வீரர் கூட பயிற்சிப் பெறவில்லை,' என்கிறார் பயிற்சியாளர் மானி. 'முதலில் மண் காய்வதற்கே ஒரு மாதம் ஆகும்'

காணொலியைக் காண்க: வெள்ளம், ஊரடங்குகள் போன்ற பிரச்னைகளுடன் மல்யுத்தம்

விவசாயத் தொழிலாளியான தந்தை 2013ஆம் ஆண்டு இறந்த பிறகு, பஜ்ரங் பல்வேறு வேலைகளை செய்துள்ளார். சிலகாலம் ஒரு நாளுக்கு ரூ.150 பெற்றுக் கொண்டு உள்ளூர் பால் பண்ணையில் எண்ணற்ற அளவிலான பால் பேக்கேஜிங் பணிகளைச் செய்துள்ளார்.

12 வயதில் உள்ளூர் போட்டியில் தொடங்கிய அவரது பயணம் பயிற்சி பள்ளி வரை சென்றடைய அவரது 50 வயது தாயான புஷ்பா உதவியுள்ளார். “விவசாயக் கூலியாக வேலை செய்து [ஆறு மணி நேரம் வேலை செய்து ரூ.100 சம்பாதித்துள்ளார்] நான் அவனை மல்யுத்த வீரனாக்கினேன். வெள்ளத்தால் [வடிவதால்] இப்போது வயல்களில் வேலை கிடைப்பதும் கஷ்டமாகிவிட்டது,” என்கிறார் அவர்.

பஜ்ரங்கின் முதுகை உடைக்கும் கடுமையான புதிய கூலி வேலை கட்டாய பயிற்சி நேரத்தையும் விழுங்கிவிடுகிறது.  “மீண்டும் நான் பயிற்சிக்கு செல்ல முடியாத நாட்களாகவே உள்ளன,” என்கிறார் அவர். (2020 மார்ச் முதல் அந்த அரங்குகள் மூடப்பட்ட போதிலும் சில மல்யுத்த விரர்கள் உள்ளுக்குள் பயிற்சியை தொடங்குகின்றனர்.)

PHOTO • Sanket Jain

2020 மார்ச் முதல் ஜூனே பர்கான் கிராம பயிற்சிக் கூடம் மூடப்பட்டபோதும், சில மல்யுத்த வீரர்கள் உள்ளே சென்று சிலசமயம் பயிற்சி மேற்கொள்கின்றனர். போட்டியின்போது பிடிமானத்தை தக்கவைக்க செம்மண்ணை முதலில் பூசிக் கொள்கின்றனர்

ஓராண்டாக குறைவாகவே ஆடுகளம் பயன்படுத்தப்பட்டதால் 2021 மே மாதத்திற்குப் பிறகு அதை மீண்டும் தயார் செய்யும் பணியை மல்யுத்த வீரர்கள் தொடங்கினர். செம்மண்ணில் 520 லிட்டர் எருமைப் பால், 300 கிலோ மஞ்சள் தூள், 15 கிலோ இடித்த கற்பூரம், 2,500 எலுமிச்சைகளின் சாறு, 150 கிலோ உப்பு, 180 லிட்டர் சமையல் எண்ணெய், 50 லிட்டர் வேம்பு கலந்த தண்ணீர் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இக்கலவையே மல்யுத்த வீரர்களை தொற்று, வெட்டுகள், பெரிய காயங்களின்றி காப்பதாக நம்பப்படுகிறது. மல்யுத்த வீரர்கள் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த சில விளையாட்டு ஆதரவாளர்களின் உதவியோடு மீண்டும் ரூ.1,00,000 பங்களிப்பு செய்யப்பட்டது.

இரண்டு மாதங்களுக்குள் ஜூலை 23ஆம் தேதி அவர்களின் கிராமம் மீண்டும் மழை, வெள்ளத்தில் மூழ்கியது. “2019ஆம் ஆண்டு ஆடுகளத்திற்குள் 10 அடியாக தேங்கியிருந்த வெள்ள நீர், 2021ஆம் ஆண்டு 14 அடி வரை வந்துவிட்டது,” என்கிறார் பஜ்ரங். “எங்களால் [மீண்டும்] இவ்வளவு பங்களிப்பு அளிக்க முடியாது என்பதால் பஞ்சாயத்தை அணுகினேன், ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை.”

“இரண்டு மாதங்களாக எந்த மல்யுத்த வீரரும் பயிற்சி பெறவில்லை,” என்கிறார் பயிற்சியாளர் மானி. “முதலில் மண்தளம் முழுவதும் ஒரு மாதத்திற்கு உலர வேண்டும். பிறகு புதிய மண் வாங்க வேண்டும்.”

PHOTO • Sanket Jain

உடல் திட பயிற்சிக்கான ஒரு பகுதியாக கயிறு ஏறும் ஜூனே பர்கானைச் சேர்ந்த பயில்வான். 'ஒருநாள் பயிற்சியை நீங்கள் தவறவிட்டாலும், எட்டு நாட்களுக்கு பின்தங்கிவிடுவோம்,' என்கிறார் சச்சின் பட்டில்

இந்த கால இடைவெளி மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். “ஒருநாள் பயிற்சி செய்யாவிட்டாலும் எட்டு நாட்கள் பின்தங்க நேரிடும்,” என்கிறார் பெருமைமிக்க கேசரி போட்டிகளில் பங்கேற்ற 29 வயது சச்சின் பாட்டில். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மகாராஷ்டிரா மாநில மல்யுத்த கூட்டமைப்பின் சார்பில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2020 பிப்ரவரி மாதம் அவர் ஹரியானாவில் ஏழு தொடர்களில் வெற்றிப் பெற்றார். “அது ஒரு சிறந்த சீசன், நான் ரூ.25,000 சம்பாதித்தேன்,” என்கிறார் அவர்.

சச்சின் நான்கு ஆண்டுகளாக விவசாய கூலி வேலைகளை செய்து வருகிறார். சில சமயங்களில் வயல்களில் இரசாயனம் தெளிப்பது போன்ற வேலைகளை செய்து மாதம் சுமார் ரூ.6000 வரை சம்பாதிக்கிறார். கோலாப்பூர் மாவட்டம் வாரனா சர்க்கரை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் மாதம் ரூ.1000 உதவித் தொகை, தினமும் ஒரு லிட்டர் பால், தங்குவதற்கு இடம் போன்றவை அளிக்கப்படுகின்றன. (2014 முதல் 2017ஆம் ஆண்டு வரை பஜ்ரங் பெற்றது போன்று சில சமயங்களில் பல சாதனைகள் படைக்கும் இளம் மல்யுத்த வீரர்களுக்கு மாநில சர்க்கரை மற்றும் பால் கூட்டுறவு சங்கங்களின் சார்பில் உதவிகள் அளிக்கப்படுகின்றன.)

2020 மார்ச் மாதத்திற்கு முன், தினமும் காலை 4.30 மணி முதல் காலை 9 மணி வரையிலும், பிறகு மாலை 5.30 மணிக்கு மேல் மீண்டும் என அவர் பயிற்சி கொடுப்பார். “ஊரடங்கின்போது பயிற்சி கொடுக்க முடியாது என்பதால், அவற்றின் தாக்கமும் இப்போது தெளிவாக தெரிகிறது,” என்கிறார் பயிற்சியாளர் மானி. போட்டிகளில் மீண்டும் பங்கேற்க மல்யுத்த வீரர்கள் குறைந்தது நான்கு மாதங்களுக்காவது கடுமையான பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்கிறார் அவர். 2019ஆம் ஆண்டு மத்தியிலிருந்து ஏற்பட்ட இரு வெள்ளப் பெருக்குகள், கோவிட் பெருந்தொற்று போன்ற காரணங்களால் தனது முதன்மையான மல்யுத்த நேரத்தை இழந்துவிட்டதாக சச்சின் அஞ்சுகிறார்.

PHOTO • Sanket Jain

ஒருகாலத்தில் புகழ்பெற்ற விளையாட்டாக இருந்த குஸ்தி ஏற்கனவே வரவேற்பை இழந்து வரும் நிலையில் இந்த தொடர் பின்னடைவுகள் சரிவை வலுப்படுத்துகின்றன

“25 முதல் 30 வயது வரையில் தான் நீங்கள் சிறப்பாக செயலாற்ற முடியும், பிறகு மல்யுத்தத்தை தொடர்வது கடினமாகிவிடும்,” எனும் மானி 20 ஆண்டுகளுக்கு மேல் மல்யுத்தம் செய்தவர். கடந்த இருபது ஆண்டுகளாக உள்ளூர் தனியார் மருத்துவமனையில் பாதுகாவலராக பணியாற்றியவர். “கிராமப்புற மல்யுத்த வீரரின் வாழ்க்கை போராட்டங்கள், துயரங்கள் நிறைந்தது. பல சிறந்த மல்யுத்த வீரர்கள் கூட கூலிகளாக வேலை செய்கின்றனர்,” என்கிறார் அவர்.

ஒருகாலத்தில் புகழ்பெற்ற விளையாட்டாக இருந்த குஸ்தி ஏற்கனவே வரவேற்பை இழந்து வரும் நிலையில் இந்த தொடர் பின்னடைவுகள் சரிவை வலுப்படுத்துகின்றன. மகாராஷ்டிராவில் திறந்த வெளி மல்யுத்த போட்டிகள் என்பது சமூக சீர்திருத்தவாதியும், ஆட்சியாளருமான ஷாஹூ மகராஜினால் (1890க்கு பிந்தைய காலத்தில் தொடங்கியது) பிரசித்திப் பெற்றது. ஆப்கானிஸ்தான், இரான், பாகிஸ்தான், துருக்கி, சில ஆப்ரிக்க நாட்டு மல்யுத்த வீரர்களுக்கு கிராமங்களில் அதிக வரவேற்பு இருந்தது. (பார்க்க குஸ்தி: மதச்சார்பற்ற ஒத்திசைவு )  )

“பத்தாண்டுகளுக்கு முன்பு ஜூனே பர்கானில் குறைந்தது 100 மல்யுத்த வீரர்கள் இருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை 55ஆக சரிந்துவிட்டது. பயிற்சிக்கு மக்களிடம் பணமில்லை,” என்கிறார் தங்கார் சமூகத்தைச் சேர்ந்தவரும், மானி குடும்பத்தின் இரண்டாம் தலைமுறை மல்யுத்த வீரருமான மாருதி. குனாக்கி, கினி, நைல்வாடி, பர்கான், ஜூனே பர்கான் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர் கட்டணமின்றி பயிற்சி அளிக்கிறார்.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

'இந்தாண்டு [2021], 2019ஆம் ஆண்டைவிட மோசமான வெள்ளப் பெருக்கு' என்கிறார் பஜ்ரங். ஜூனே பர்கான் கிராமத்தில் மீண்டும் வெள்ளம்  பரவலான சேதத்தை ஏற்படுத்திவிட்டது

வெள்ளத்தில் சிக்காமல் அவரது மல்யுத்த கோப்பைகள் பயிற்சிக் கூடத்தில் உயர் இடத்தை அலங்கரிக்கின்றன. வெள்ளம் குறித்து அவர் பேசுகையில், “ஜூலை 23 [2021], நாங்கள் இரவு 2 மணிக்கு வீட்டைவிட்டு வெளியேறி அருகில் உள்ள வயலுக்கு சென்றோம். தண்ணீர் மெல்ல அதிகரித்து ஒரே நாளில் கிராமத்தை மூழ்கடித்தது.” மானி குடும்பம் தங்களின் ஆறு ஆடுகள், எருமையை பாதுகாப்பாக மீட்டது, ஆனால் 25 கோழிகளை இழந்துவிட்டது. ஜூலை 28ஆம் தேதிக்கு பிறகு வெள்ளம் வடியத் தொடங்கியதும், சேதம் குறித்து அறிவதற்கு சுமார் 20 மல்யுத்த வீரர்களுடன் மானி முதலில் பயிற்சிக் கூடத்திற்கு சென்றார்.

இளம் தலைமுறை மல்யுத்த வீரர்கள் மீது எதிர்காலத்தில் தாக்கம் செலுத்தும் என இப்போது அவர் கவலை கொள்கிறார். இரண்டு ஆண்டுகளில் [2018-19] நடைபெற்ற போட்டிகளில், சங்கிலி மாவட்ட பி.ஏ பட்டதாரியான 20 வயது மயூர் பகடி 10 போட்டி தொடர்களில் வென்றார். “நான் நிறைய கற்று மேலும் பயணிப்பதற்குள் ஊரடங்கு அனைத்தையும் எடுத்துச் சென்றுவிட்டது,” என்கிறார் அவர். அதிலிருந்து அவர் தனது குடும்பத்தின் இரண்டு எருமைகளிடம் பால் கறப்பது, நிலத்தை உழவு செய்வது போன்றவற்றில் உதவி வருகிறார்.

2020 பிப்ரவரியில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று அவர் ரூ.2000 வென்றார். “வெற்றியாளர் மொத்த தொகையில் 80 சதவீதத்தையும், தோற்பவர் 20 சதவீதத்தையும் பெறுகிறார்,” என விளக்குகிறார் சச்சின் பாட்டில். இவ்வகையில் ஒவ்வொரு போட்டியும் கொஞ்சம் வருவாய் அளிக்கிறது.

அண்மை வெள்ளத்திற்கு முன்பு வரை மயூர் மற்றும் பிற மல்யுத்த வீரர்கள் நைல்வாடியிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜூனே பர்கானுக்கு பயணம் செய்வார்கள். “எங்கள் கிராமத்தில் பயிற்சிக் கூடம் கிடையாது,” என்கிறார் அவர்.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

வலது:  2005 மற்றும் 2019 வெள்ளப் பெருக்கில் மல்யுத்த வீரர் சச்சின் பாட்டிலின் வீடு சேதமடைந்தது. இடது: நைல்வாடியைச் சேர்ந்த மயூர் பகடி இரண்டு ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட போட்டிகளில் வென்றார்

கடந்த மாத வெள்ளம் குறித்து அவர் பேசுகையில், “நாள் முழுவதும் மூன்று அடி வெள்ள நீரில் நாங்கள் இருந்தோம். மீட்கப்பட்ட பிறகு எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது.” பர்கான் கிராம தனியார் பள்ளியில் பகாடி ஒரு வாரம் தங்கினார். “எங்கள் வீடு முழுவதும் மூழ்கிவிட்டது, எங்களின் கால் ஏக்கர் நிலமும் தான்,” என்கிறார் மயூர். ரூ.60,000 மதிப்பிலான 20 டன் கரும்பு , 70 கிலோ சோளம் சாகுபடி, வீட்டில் சேமித்து வைத்திருந்த கோதுமை, அரிசி போன்றவற்றையும் அக்குடும்பம் இழந்துவிட்டது. “எல்லாம் போய்விட்டது,” என்கிறார் மயூர்.

விவசாயத்துடன், விவசாய கூலி வேலையும் செய்து வரும் தனது பெற்றோருக்கு வெள்ளத்திற்கு பிறகு மயூர் வீட்டை சுத்தம் செய்வதற்கு உதவினார். “துர்நாற்றம் இன்னும் போகவில்லை, ஆனால் இப்போது அங்கு தான் உண்டு, உறங்குகிறோம்,” என்கிறார் அவர்.

வெள்ளம் மெல்ல சேதத்தை அதிகரித்தது, என்கிறார் பஜ்ரங். “2019 வெள்ளம் என்பது 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தைவிட மிகவும் ஆபத்தானது. 2019ஆம் ஆண்டு எங்களுக்கு ஒரு ரூபாய் கூட இழப்பீடு கிடைக்கவில்லை. இந்தாண்டு [2021] வெள்ளம் என்பது 2019ஆம் ஆண்டை விட மோசமானது,” என்கிறார் அவர். “ஐபிஎல் [இந்தியன் பிரிமீயர் லீக்] போன்ற போட்டிகளை அரசு ஆதரிக்க முடியும் என்றால், வேறு நாடுகளுக்கு அதை மாற்ற முடியும் என்றால் ஏன் குஸ்திக்கும் இதை செய்யக் கூடாது?”

“எந்த சூழலிலும் எந்த மல்யுத்த வீரருடனும் என்னால் சண்டையிட முடியும்,” என்கிறார் சச்சின். “ஆனால் என்னால் கோவிட் மற்றும் இரு வெள்ளப் பெருக்கை வெல்ல முடியவில்லை.”

தமிழில்: சவிதா

Sanket Jain

Sanket Jain is a journalist based in Kolhapur, Maharashtra, and a 2019 PARI Fellow.

Other stories by Sanket Jain
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha