சேலத்தில் குடிபோதையில் ஆத்திரம் வீட்டுக்குள் வைத்து பூட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை

2021-08-18@ 00:05:03

சேலம்: சேலம் அருகே குடிபோதை தகராறில் மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற தந்தையை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலத்தை அடுத்த பனமரத்துப்பட்டி அடிமலைப்புதூர் கரியகோயில்காடு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (47). இவரது மனைவி மணிமேகலை (45). இவர்களுக்கு அஜித்குமார் (23), மற்றும் 14 வயதில் மகனும் உள்ளனர். அன்பழகன் தினமும் போதையில் வீட்டிற்கு வந்து மனைவி, மகன்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.  கடந்த 15ம் தேதி மாலை வீட்டிற்கு அன்பழகன் குடிபோதையில் வந்துள்ளார்.

அப்போது, தோட்டத்தில் அரளி பூ பறிக்க வரும்படி கணவனை மணிமேகலை அழைத்துள்ளார். அதற்கு தன்னால் வர முடியாது எனக்கூறி திட்டியுள்ளார். இதனை மகன் அஜித்குமார் தட்டிக் கேட்டு, போதையில் இருந்த அவரை வீட்டிற்குள் வைத்து கதவை வெளியே பூட்டி விட்டார். ஆத்திரத்தில் இருந்த அன்பழகன், வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து ஜன்னல் வழியாக மகன் அஜித்குமாரை நோக்கி சுட்டார். தப்பியோடியதால் அஜித்குமார் மயிரிழையில் உயிர் தப்பினார். பனமரத்துப்பட்டி போலீசார் விரைந்து வந்து, போதையில் துப்பாக்கியுடன் இருந்த அன்பழகனை கைது செய்தனர். துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.