புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் மறைவு!: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..!!

2021-08-18@ 12:15:49

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் தெலங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனின் தாயாரும், சுதந்திர போராட்ட வீரரும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 78. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு தனது பெற்றோரை தன்னுடன் அழைத்து சென்றார். 2 ஆண்டுகளாக தமிழிசை சவுந்தரராஜனுடன் இருந்து வந்த அவரது தாய் கிருஷ்ணகுமாரி, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதுகுறித்து தமிழிசை சவுந்தர்ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார். என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 4.00 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயார் மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மனைவியும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தாயாருமான கிருஷ்ணகுமாரி இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்திகேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என தமிழிசை தாயாரின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்களின் தாயார் திருமதி. கிருஷ்ணகுமாரி அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திப்பதோடு, அன்பு சகோதரிக்கு என் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.