கிரைம் நியூஸ்

2021-08-18@ 00:56:28

மாநகர பஸ் மோதி வாலிபர் பலி: பெரம்பூர் நட்டால் கார்டன் 1வது தெருவை சேர்ந்த லோகேஷ் (23), உறவினர் மணிகண்டன் (20) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் மேம்பாலம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்கு மாநகர பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது தடுமாறி பஸ் முன்பு விழுந்ததில், லோகேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மணிகண்டன் காயங்களுடன் தப்பினார்.

கத்தி முனையில் நகை பறிப்பு: வில்லிவாக்கம் ராஜிவ்காந்தி நகர் 6வது தெருவை சேர்ந்த திவாகர் (26), நேற்று முன்தினம் அண்ணாநகர் 14வது மெயின் ரோட்டில் பைக்கில் சென்றபோது, மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள், கத்தி முனையில் இவரை வழிமறித்து, சரமாரி தாக்கி, அவர் அணிந்திருந்த ஒன்றரை சவரன் செயினை பறித்து சென்றனர்.

செல்போன் திருடன் கைது: கொளத்தூர் ஜவஹர் நகர் 6வது மெயின் ரோட்டை சேர்ந்த ராம் கூஸ் சர்மா (21) என்பவர் வீட்டில்  நேற்று முன்தினம் இரவு புகுந்து 3 செல்போன்களை திருடிய அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த ராம்குமார் கிரியை (19), போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய அர்ஜூன் கிரியை தேடி வருகின்றனர்.

பேருந்தில் பணம், நகை அபேஸ்: கொளத்தூர் கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜலட்சுமி (31), ரெட்டேரி சந்திப்பில் இருந்து அம்பேத்கர் நகருக்கு மாநகர பேருந்தில் சென்றபோது, அவரது பையில் இருந்த 10 சவரன் நகை மற்றும் ரூ.55 ஆயிரத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர்.

ஊழியரிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு: ராஜஸ்தான்  மாநிலத்தை சேர்ந்த நாராயணராம் (47),  நேற்று முன்தினம் இரவு கோயம்பேட்டில் இருந்து ஒரு  ஆட்டோவில் கீழ்ப்பாக்கம் சென்றபோது, அருகில் அமர்ந்து பயணித்த மர்ம நபர், இவரிடம் இருந்த ரூ.50 ஆயிரத்தை  அபேஸ் செய்து தப்பினார்.

 மதுரை மாவட்டத்தை சேர்ந்த காளீஸ்வரன் (25), குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த இருவர் கத்தியால் தாக்கி, அவரது செல்போனை பறித்து சென்றனர்.

தொழிலதிபரிடம் ரூ.17 ஆயிரம் அபேஸ்: அரும்பாக்கம் விசாலாட்சி தெருவை சேர்ந்த தொழிலதிபர் அன்வர் (42), நேற்று முன்தினம் அரும்பாக்கம் நூறடி சாலையில் காரில் சென்றபோது, அவ்வழியாக வந்த 2 திருநங்கைகள் ஆசீர்வாதம் செய்வதாக கூறி, அவரது பர்ஸை வாங்கி அதிலிருந்த ரூ.17 ஆயிரத்தை அபேஸ் செய்து சென்றனர்.

பைக்கில் வைத்த ரூ.1.5 லட்சம் திருட்டு: மாத்தூர் எம்எம்டிஏ காலனியை சேர்ந்த டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர் பெரியநாயகம் (36), நேற்று வங்கியில் இருந்து ரூ.1.5 லட்சத்தை எடுத்து பைக்கில் வைத்துக்கொண்டு, மாதவரம் பால்பண்ணை தபால் நிலையம் சென்றார். பைக்கை வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றவர், திரும்பி வந்து பார்த்தபோது, ரூ.1.5 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.

பெண்ணிடம் ரூ.4.74 லட்சம் அபேஸ்: கொளத்தூரை சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் சரிதாவிடம் (35) போலி தங்க குண்டுமணிகளை விற்று, ரூ.4.74 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.