மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நேற்று முதல் கடல் அலையின் சீற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மீனவர்கள் இன்று அதிகாலை கடலுக்கு செல்லாமல், நீண்ட நேரம் கழித்தே மீன்பிடிக்க சென்றனர். மாமல்லபுரத்தில் நேற்று முதல் கடல் அலை பலத்த சீற்றமாக காணப்பட்டது. அவை கடலுக்குள் மிக உயரமாக எழும்பி, கரையை நோக்கி வேகமாக வந்தன. இதனால் மாமல்லபுரம் கடற்கரையை ஓட்டியுள்ள மீனவ குப்பங்களில் கடல்நீர் வந்து மோதியது. மாமல்லபுரம் குப்பம், தேவனேரி, கொக்கிலமேடு குப்பம், வெண்புருஷம், புதிய கல்பாக்கம், புதுஎடையூர்குப்பம், பட்டிபுலம் குப்பம், நெம்மேலிகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், இன்று விடியற்காலை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
பின்னர், நீண்ட நேரம் கழித்தே கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலுக்கு செல்லாத ஒருசில மீனவர்கள், கரையோரமாக நின்றபடி கடலில் தூண்டில் போட்டு மீன்கள் பிடித்தனர். காலை 8 மணியளவில் சுமார் 5 அடி உயரத்துக்கு ராட்சத அலை கரைப்பகுதி வரை நோக்கி வந்தன. மேலும், மாமல்லபுரம் கடற்கரையில் மிதமான வேகத்தில் காற்று வீசி வருகிறது. மாமல்லபுரத்தை, பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த, கடல் சீற்றத்தால் மீனவ குப்பங்களில் உள்ள ஒரு சில மீனவர்கள் கடலுக்கு செல்லாமல், தங்களது மீன்பிடி வலைகளை பத்திரமாக எடுத்து வந்து, பாதுகாப்பான இடத்தில் மீனவர்கள் வைத்துள்ளனர்.