சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டசபையில் உடனே சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் உறுதியளித்தபடி, ஸ்டெர்லைட் ஆலையை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்து வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே இந்த உயிர்க்கொல்லி ஆலையை நிரந்தரமாக அகற்றும் சிறப்பு தீர்மானத்தை இயற்ற வேண்டும்.
தீர்மானத்தின் நகல் உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். மேலும், சொந்த ஆதாயங்களுக்காக விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, ஸ்டெர்லைட் ஆலை சர்வசுதந்திரமாக சூழலை சீரழிக்க அனுமதித்த அரசு அதிகாரிகள் மீதும், நீள்துயிலில் இருந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கவும், இந்த போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்தவர்களுக்கு தூத்துக்குடியிலேயே நினைவகம் அமைத்திடவும் தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.