ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம் வடமதுரை ஊராட்சியின், ஒரு பகுதியான செங்காத்தாகுளம் வருவாய் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி அக்கிராம மக்கள் கும்மிடிபூண்டி தொகுதி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘மிக பெரிய ஊராட்சியான வடமதுரை ஊராட்சியில் 9 கிராமங்கள் உள்ளன. இதில், செங்காத்தாகுளம் கிராமமும் அடங்கும். இந்த ஊராட்சியில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் இதை இரண்டாக பிரிக்க வேண்டும் என தமிழக கவர்னர், மாவட்ட கலெக்டர், பிடிஒ ஆகியோரிடம் மனு கொடுத்தோம். இதுவரை, எந்தவித நடவடிக்கையும் இல்லை. கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். எனவே, செங்காத்தாகுளம் வருவாய் கிராமத்தை தனி ஊராட்சியாக உருவாக்கி தரவேண்டும்.’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது, அவருடன் ஒன்றிய செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் இருந்தனர்.