சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் 100 நாட்களில் ஆற்றிய அரும்பணிகள் 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்று தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்து 100 நாட்களை நிறைவு செய்திருக்கிறது. இந்த 100 நாள் சாதனை நூறு ஆண்டுகள் பேசும். அப்படித்தான் இந்த 100 நாட்கள் தமிழ்நாட்டு முதல்வருடைய பணிகள் அமைந்திருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு சாதனைப் பட்டியல், ஒவ்வொரு துறையிலும் ஒரு சாதனை என இப்படி ஒட்டுமொத்த தமிழர்களை மட்டுமல்ல உலகத்தையே தன் பக்கம் ஈர்த்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கடந்த அதிமுக ஆட்சியின் மோசமான நிதி நிர்வாகத்தால் தமிழ்நாட்டின் கடன் சுமை 5.7 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு மோசமான நிதி நிலையில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றுமா என்கிற அய்யம் பல பேருடைய உள்ளத்திலே எழுந்தது. ஆனால் அவற்றையெல்லாம் முறியடித்து கொடுத்த வாக்குறுதிகளை மட்டுமல்ல கொடுக்காதவற்றையும் நாள்தோறும் நடைமுறைப்படுத்தி நாட்டு மக்கள் மனதில் மு.க.ஸ்டாலின் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.
ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அன்றே கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கிடவும், ஆவின் பால் விலையில் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்திடவும், மகளிருக்கு விலையில்லா பேருந்து பயணம் செய்திடவும், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை வழங்கிடவும் கையொப்பமிட்டு திட்டத்தை அறிவித்தார். இந்த 5 முத்தான திட்டங்களோடு தொடங்கிய அவரது ஆட்சி இன்று நூற்றுக்கும் அதிகமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி 100 நாட்களில் சாதனை படைத்துள்ளது. 100 நாட்களில் அவர் ஆற்றிய அரும்பணிகள் 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.