புதுடெல்லி: ‘நாட்டில் பொருளாதார ஒருங்கிணைப்பு பாதை உள்ளிட்ட புதிய தேசிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, ரூ.100 லட்சம் கோடியில் ‘கதி சக்தி’ திட்டம் அமல்படுத்தப்படும்,’ என 75வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்புக்கு இடையே, நேற்று காலை 7 மணியளவில் பிரதமர் மோடி மூவர்ணக் கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.
நேற்று அவர் ஆற்றிய 90 நிமிட உரையில் கூறியதாவது: மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட அனைவரின் தியாகத்தையும் நினைவு கூர்வோம். ஒலிம்பிக்கில் நமது வீரர்கள் திறமையுடன் விளையாடி பெருமை சேர்த்தனர். கொரோனா தடுப்பூசி போடுவதில் உலகத்திலேயே இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சியை அடைய உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும். உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி, கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றுக்காக இணைந்து பணியாற்ற வேண்டும். வரவிருக்கும் நாட்களில், ‘பிரதமர் கதி சக்தி’ திட்டத்தை தொடங்க உள்ளோம். இதில், ரூ.100 லட்சம் கோடி செலவில் நாட்டில் புதிய தேசிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். பொருளாதார ஒருங்கிணைப்பு பாதை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்றவை இதில் உருவாக்கப்படும்.
இந்தியா, எவ்வாறு தனது புதிய நிர்வாக அத்தியாயத்தை எழுதுகிறது? என்பதை உலகமே பார்க்கிறது. அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சியானது நாட்டின் கடைக்கோடி குடிமகனுக்கும் சென்றடைய வேண்டும். 15 மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் மூலம் ஊட்டச்சத்துக்களுடன் கூடிய அரிசி விநியோகிக்கும் திட்டம் சோதனை முறையில் தொடங்கப்படும். சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதன் மூலம், நமது எதிரிகளுக்கு புதிய இந்தியாவின் தோற்றம் பற்றிய செய்தியை அனுப்பி உள்ளோம். இவ்வாறு மோடி பேசினார். விழாவில் மூத்த ஒன்றிய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பதக்கங்களைப் பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
* 7 ஆண்டும் ஒரே பேச்சுதான்...
மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், ‘ஏழு ஆண்டுகளாக பிரதமரின் ‘அதே பேச்சுக்களை’ நாடு கேட்டுக் கொண்டிருக்கிறது, ஆனால், சிறு விவசாயிகள் உட்பட பாதிக்கப்பட்ட எந்த பிரிவினருக்கும் எதுவும் செய்யப்படவில்லை. அவர் புதிய திட்டங்களை அறிவிக்கிறார், ஆனால், இவை ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை. அவர் நிறைய விஷயங்களைச் சொல்கிறார், ஆனால் ,அவற்றைக் கடைப்பிடிப்பதில்லை. இப்போது, மூன்று புதிய பண்ணைச் சட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம், அவர் விவசாயிகளுக்கு அழிவை உச்சரித்துள்ளார்,’’ என்றார்.
* பாகிஸ்தான், சீனா மீது தாக்கு
பிரதமர் மோடி தனது உரையில் பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகள், எல்லைகளை விரிவுபடுத்தும் சீனாவின் முயற்சி போன்றவற்றையும் சுட்டிக்காட்டினார். இருநாடுகளின் பெயரைக் குறிப்பிடாத அவர், ‘எல்லை தாண்டிய தீவிரவாதம் மற்றும் எல்லைகளை விரிவுபடுத்தும் பேராசை என்ற இரட்டை சவால்களை இந்தியா உறுதியுடன் எதிர்கொண்டு வருகிறது’ என்று கூறினார். மேலும், ‘கடந்த 2016ம் ஆண்டில் இந்தியா மேற்கொண்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக், 2019ம் ஆண்டின் பாலக்கோடு தாக்குதல் ஆகியவை நம் எதிரிகளுக்கு உறுதியான சிக்னல்களை கொடுத்துள்ளது. இது, பழைய இந்தியா அல்ல,’ என்றும் கூறினார்.
* தலைப்பாகையை தொடரும் மோடி
சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது பிரதமர் மோடி விதவிதமான தலைப்பாகையை அணிந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். பிரதமராக பதவியேற்ற 2014 சுதந்திர கொண்டாட்டம் முதல் அவரது தலைப்பாகையின் நிறமும் பேசும் பொருளாகிறது. நேற்றைய விழாவில் காவி நிறத்துடன் சிகப்பு, வெள்ளை கட்டங்கள் கொண்ட தலைப் பாகையை அவர் அணிந்திருந்தார்.
* பெண் குழந்தைகளுக்கும் சைனிக் பள்ளிகள்
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் சைனிக் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ராணுவத்தில் சேர்வதற்கான மாணவர்கள் இதன்மூலம் இளம் வயதிலேயே தயார் செய்யப்படுகின்றனர். நாடு முழுவதும் இது போல் 33 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த சைனிக் பள்ளியில் பெண் குழந்தைகளும் கல்வி கற்கலாம் என்று பிரதமர் நேற்று தனது உரையில் அறிவித்தார். ஏற்கனவே, சோதனை முயற்சியாக மிசோராமில் பெண் குழந்தைகளுக்கான சைனிக் பள்ளிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
* காங்கிரஸ் அலுவலகத்தில் கொடியேற்றிய சோனியா
டெல்லியிலுள்ள காங்கிரசின் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் சோனியா காந்தி நேற்று மூவர்ணக் கொடியை ஏற்றினார். இந்நிகழ்வில் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் ஏகே அந்தோணி, குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன் கார்கே, புபீந்தர் சிங் ஹூடா மற்றும் ஆனந்த் சர்மா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* சிறுவிவசாயிகள் மீது அக்கறை
2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் கொண்ட சிறுவிவசாயிகள் மீது ஒன்றிய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அவர்கள் இந்தியாவின் மதிப்புமிக்க அடையாளமாக உருவாக்கப்படுவார்கள்,’ என்றும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.
* டூடுலை மாற்றிய கூகுள்
சுதந்திர தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் தனது டூடுலை நேற்று மாற்றியது. பன்முகத் தன்மை கொண்ட இந்தியா என்பதை குறிப்பிடும் வகையிலான வரைபடத்தை முகப்பில் வைத்திருந்தது கூகுள். இந்த டிஜிட்டல் ஓவியத்தை கொல்கத்தாவை சேர்ந்த சயான் முகர்ஜி வடிவமைத்ததாகவும் அறிவித்தது கூகுள்.
* 75 வந்தே பாரத் ரயில்கள்
‘நம் கிராமங்கள் வேகமாக மாறிக் கொண்டுள்ளதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இன்னும் 75 வாரங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்,’ என்றும் பிரதமர் அறிவித்தார்.