தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்தின்படி 2017ல் அறிவித்த ரூ.743 கோடியிலான திட்டப்பணிகளுக்கு உள்தணிக்கை இல்லை: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

2021-08-16@ 01:00:55

சென்னை: தமிழகத்தில் பாசன உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் நீர்வள, நிலவள திட்டத்தின் இரண்டாம் பாகம் உலக வங்கியின் கடனுதவியின் கீழ் ரூ.2131 கோடி மதிப்பீட்டில் 4778 ஏரிகள், 477 அணைகட்டுகளை புனரமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள கடந்த 2017ல் திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக, ரூ.743 கோடி மதிப்பீட்டில் 22 மாவட்டங்களில் உள்ள 18 உபவடிநிலங்களில் 1325 ஏரிகள், 107 அணைகட்டுகள், 45 செயற்கை நீர் செறிவூட்டு கிணறுகள் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, கடந்த 2018ம் ஆண்டு பொதுப்பணித்துறை சார்பில், பல்வேறு திட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

ஆனால், 2019ம் ஆண்டில் தான் ஒப்பந்த நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டு மார்ச் மாதம் முதல் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகள் கடந்த 2020ம் ஆண்டு தான் முழுவதுமாக முடிக்கப்பட்டன. இதை தொடர்ந்து, இப்பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முறையாக செலவிடப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு உள் தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இப்பணிகளுக்காக உள்தணிக்கை எதுவும் நடைபெறவில்லை என்று தெரிகிறது. இதனால், திட்டத்துக்கான செலவு சரியாக நடந்ததா என்பது கூட தெரியவில்லை.

அதேநேரம் இந்த பணிகள் மேற்கொண்டது தொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்து அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கை கூட சமர்ப்பிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக கன்சல்டன்ட் ஆக நியமிக்கப்பட்ட நிறுவனம் எந்தெவாரு கேள்வியும் எழுப்பவில்லை. இதனால், அந்த பணிகள் முறையாக நடந்ததா, இல்லையா என்பது கூட தெரியாமல் போய் விட்டது. இதற்கிடையே இரண்டாவது கட்டமாக கடந்தாண்டு ரூ.649 கோடி மதிப்பில் 906 ஏரிகள், 37 செயற்கை முறை செறிவூட்டுகள் கிணறுகள் அமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு தற்போது வரை பணிகள் நடந்து வருகிறது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

கடந்த 2017-18, 2018-19ல் செலவு செய்ததில் முரண்பாடு: இந்திய தணிக்கைத்துறை சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் சந்தை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல், கால்நடைத்துறை, மீன்வளத்துறை, நீர்வளத்துறைகளில் மேற்கொண்ட பணிகளில் உள்ள செலவு தொடர்பாக கணக்கு விவரங்களை ஆய்வு செய்தது. கடந்த 2018-18ம் நிதியாண்டில் ரூ.65,35,417ம், 2018-19ல் ரூ.63,99438  வரை கூடுதலாக செலவு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. இதில், 2018-19ம் நிதியாண்டில் நீர்வளத்துறையில் ரூ.43,82197ம், வேளாண்மை பொறியியல் துறையில் ரூ.19,61,404ம் வரை முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.