லாப நோக்கமின்றி மக்களுக்கு விற்கப்படும் திருப்பதியில் இயற்கை வேளாண் பொருளில் தயாரான உணவுகள்: கூடுதல் செயல் அதிகாரி தகவல்

2021-08-16@ 01:01:29

திருமலை: ‘திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இயற்கை வேளாண்மை பொருட்கள் கொண்டு உணவு தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு லாப நோக்கம் இல்லாமல் விற்பனை செய்யப்படும்,’ என்று கூடுதல் செயல் அதிகாரி தர்மா தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள கூடுதல் செயலர் அதிகாரி அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழா நேற்று நடந்தது. விழாவில் தலைமை செயல் அதிகாரி ஜவஹர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். தொடர்ந்து, கூடுதல் செயல் அதிகாரி தர்மா பேசியதாவது: சுவாமி நைவேத்தியத்திற்கு  அரிசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்டவை இயற்கை வேளாண் பொருட்களை கொண்டும், நாட்டு மாடுகளின் நெய் பயன்படுத்தி நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

வரும் கிருஷ்ண ஜெயந்தி முதல் நவநீத சேவை திட்டம் தொடங்கப்பட்டு நாட்டு மாடுகளின் நெய் பக்தர்களிடம் நன்கொடை பெறும் திட்டமும் தொடங்கப்பட உள்ளது. அன்னதான திட்டத்தில் புதிதாக ஒரு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் சம்பிரதாய போஜனம் என்ற பெயரில் இயற்கை வேளாண் பொருட்களை கொண்டு  தேவஸ்தானம் சார்பில் 4 இடங்களில் கேன்டீன் தொடங்கப்பட உள்ளது. பக்தர்களிடம் இருந்து பெற்று விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் 15 முதல் 30 நாட்களுக்குள் தொடங்கப்படும். வழக்கம்போல் வழங்கக்கூடிய அன்னதானமும் வழங்கப்படும்.

* அலிபிரி மலைப்பாதை 31க்குள் திறக்க முயற்சி
‘‘அலிபிரியில் இருந்து திருமலைக்கு நடந்து வரும் மலைப்பாதை புனரமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 31ம் தேதிக்குள் இந்த பணிகளை முடித்து பக்தர்களை அனுமதிக்க திட்டமிட்டு உள்ளோம். திருமலையில் அனுமான் பிறந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ள ஆகாச கங்கை தீர்த்தம் அருகே பால அனுமன் சுவாமி சன்னதி அமைத்து அங்கு 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது,’’ என்றும் தர்மா கூறினார்.