* தொகுதிக்கு ஒரு தடுப்பணை கட்டுவதற்கு திட்டம்
* 8 புதிய நீர்நிலைகள் உருவாக்கப்படுகிறது
* நீர்வளத்துறை உயர்அதிகாரி தகவல்
சென்னை: தமிழகத்தில் நீராதாரத்தை பெருக்கும் வகையில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளுக்கான அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் நீராதாரத்தை பெருக்கும் வகையில் நீர்பாசனத்துறைக்கென தனியாக அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி தடுப்பணைகள் கட்டுதல், ஏரிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்பேரில், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, மாநிலம் முழுவதும் தடுப்பணை, கதவணை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து அறிக்கை அனுப்ப பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், மாநிலம் முழுவதும் ஒவ்வொரு கோட்ட பொறியாளர்கள் சார்பில் அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி, நீராதாரங்களை பெருக்கும் வகையில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதில், முக்கியமாக பருவமழை மூலம் கிடைக்கும் நீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க ரூ.2,500 கோடியில் காவிரி ஆற்றுப்படுகையில் 2 இடங்களில் கதவணை, கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் 1 இடங்களில் கதவணை தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 3 இடங்களில் கதவணை என மொத்தம் 6 கதவணை அமைக்கப்படுகிறது. இதை தவிர்த்து 500 இடங்களில் தடுப்பணை அமைக்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் ஒரு தொகுதிக்கு ஒரு தடுப்பணை அமைக்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் 8 இடங்களில் புதிய நீர்நிலைகள் அமைக்கப்படுகிறது. ஆற்றுப்படுகைகளில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில், கடைமடைகளில் நீரொழுங்கிகள் அமைக்கப்படுகிறது. இதன் மூலம், கடலோர பகுதிகளில் நிலத்தடி நீரின் உப்பு தன்மை குறைவது மட்டுமின்றி, அங்கு பாசன வசதிகளுக்கு இந்த நீரை பயன்படுத்த முடியும். மேலும், புதிதாக ஏரிகளை புனரமைப்பது, தூர்வாருவது உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கான அறிக்கை தயார் செய்து அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், நடப்பாண்டு பட்ஜெட்டில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது. எனவே, தற்போது, நீர்வளத்துறையால் அளிக்கப்பட்ட அறிக்கைகளில், முக்கிய திட்டப்பணிகள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வருங்காலங்களில் மற்ற திட்டப்பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நீர்வளத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.