சென்னை: பட்டியல் இன மக்கள் தொடர்பாக அவதூறு வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுனை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மாடலிங் துறையை சேர்ந்தவர் நடிகை மீரா மிதுன். ஒரு சில சினிமாக்களில் துணை நடிகையாக தலை காட்டியுள்ளார்.அதன்பிறகு மாடலிங் துறையிலும், சினிமாவிலும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் அவ்வப்போது தனது சமூக வலைத்தள கணக்குகளில் யாரையாவது வம்புக்கிழுத்து மாட்டிக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் மீரா மிதுன் பேசி வெளியிட்டிருந்த வீடியோவில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மக்களைப் பற்றி அவதூறாக பேசியிருந்தார். அதில் பட்டியலின மக்கள் தான் மோசமானவர்கள் என்றும், அவர்கள் தான் குற்றச்செயல்களில் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்றும் பேசிய வீடியோ இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது. இதுதொடர்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விசிக வன்னியரசு அளித்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் என்னைத் தாராளமாகக் கைது செய்து கொள்ளுங்கள், காந்தி, நேரு எல்லாம் சிறைக்குச் செல்லவில்லையா என்ன? என்னைக் கைது செய்வது நடக்காது. அப்படி நடந்தால் அது கனவில் மட்டுமே நடக்கும். பட்டியலின மக்கள் அனைவரையும் நான் தவறானவர்கள் என்று கூறவில்லை. எனக்குத் தொந்தரவு கொடுத்தவர்களை மட்டுமே தவறானவர்கள் என்று கூறினேன் என்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். பின்னர் தலைமறைவானார்.
இந்நிலையில் கேரளா மாநிலம், ஆழப்புலாவில் உள்ள சுப்ரீம் ரிசார்ட்டில் மீரா மிதுன் பதுங்கியிருப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் கருணாகரன் தலைமையிலான போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்று, ரிசார்ட்டில் இருந்த அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவருடைய வீடியோ கலாட்டா, கைது செய்யும் போதும் தொடர்ந்தது.
வீர வசனம் பேசிய மீரா மிதுன் போலீசை பார்த்ததும் என்ன செய்வது என தெரியாமல், ‘என்னைத் தொட்டால் என்னை நானே கத்தியால் குத்திக் கொள்வேன்’ என்று மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டார். மேலும் மீரா மிதுனின் பேச்சுகளை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டது அவரது ஆண் நண்பர் அபிஷேக் ஷாம் என்பது தெரியவந்தது. இதையடுத்து மீரா மிதுனை கைது செய்யும் போது, அவருடன் இருந்த அபிஷேக் ஷாமையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சாலை மார்க்கமாக நேற்று காலை சென்னைக்கு அழைத்துவந்தனர்.
வேனில் இருந்து இறக்கி வேப்பேரியில் உள்ள சென்னை கமிஷனர் அலுவலகத்திற்குள் அழைத்து சென்றபோது போலீசாருக்கு எதிராக கூச்சலிட்டவாறே சென்றார். பின்னர் மத்திய குற்றப்பிரிவு அலுலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பட்டியல் இன மக்களுக்கு எதிரான மோதலை தூண்டும் வகையில் பேசியது ஏன்? தொடர்ந்து வீடியோ வெளியிட அவருக்கு பக்கபலமாக இருக்கும் முக்கிய பிரமுகர்கள் யார்? என்று துருவித்துருவி விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் வாக்குமூலம் அளிக்காமல் முரண்டு பிடித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘தன்னுடைய வழக்கறிஞர் வந்தால் தான் பேசுவேன்’ என்று தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், வழக்கறிஞர் வந்ததையடுத்து, போலீசாரின் கேள்விக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17-வது மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 13 நாட்கள் (27ம் தேதி வரை) நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.