சுற்றுச்சூழலுக்காக புத்தகம் எழுதி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 10 வயது வேலூர் சிறுவன்

2021-08-16@ 15:02:07

வேலூர்: வேலூரை சேர்ந்த 10 வயது சிறுவன் சுற்றுச்சூழல் மாசு தடுப்பதற்கான வழிமுறைகளுடன் புத்தகம் ஒன்றை எழுதி ஆசிய, இந்திய சாதனை புத்தகங்களில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளான்.எழுத்தாளராவதற்கு நிறைய படிக்க வேண்டும், நிறைய விஷயங்களை அறிந்திருக்க வேண்டும். வரலாறு, சமூகம், பொருளியல், அறிவியல் என எதை சார்ந்த புத்தகங்களை எழுதுவதற்கும் அதுசார்ந்த அறிவை பெற்றிருக்க வேண்டும். அதில் வித்தியாசமாக 8 வயதில் சர்வதேச அளவில் நடந்த சுற்றுச்சூழல் கருத்தரங்கில் கலந்து கொண்டு பலரது கவனத்தை ஈர்த்து அதன் மூலம் புத்தகத்தை எழுதி தனது சாதனை பயணத்தை 10வது வயதில் தொடர்ந்து வருகிறான் வேலூரை சேர்ந்த சிறுவன் ஒருவன்.வேலூர் அரியூரை சேர்ந்தவர் சுபாஷ் ஆறுமுகம். அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இதனால் அங்கு தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி தேவி துளசிராமன். இவர்களுக்கு சிரிஷ் சுபாஷ், நிவிஷா சுபாஷ் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களில் மகன் சிரிஷ் சுபாஷ், அங்கு 6ம் வகுப்பு படித்து வருகிறான்.

இவன் சிறுவயது முதலே பள்ளி நூலகத்தில் புத்தகங்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளான். அப்போது சுற்றுச்சூழல் தொடர்பான குறும்படத்தை நூலகத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் புவிவெப்பமயமாதலால் ஏற்படும் அபாயம் குறித்து சக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் கருத்துக்களை பகிர்ந்து வந்துள்ளான்.தனது 8வது வயதில் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் தொடர்பான பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு பேசினான். அவனது பேச்சை கேட்ட பள்ளி ஆசிரியர்களின் பாராட்டு, அவனை அடுத்த நிலைக்கு நகர்த்தியுள்ளது. அதை தொடர்ந்து தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சுவாயுக்கள், வாகனங்கள் வெளியேற்றும் கார்பன் ஆகியவற்றால் புவி வெப்பமயமாகி வருவதும், அதனால் உலகின் கடல் நீர்மட்டம் உயரும் ஆபத்து குறித்தும் தனது கருத்துக்களை 102 பக்கங்கள் கொண்ட ‘கார்பன் பிளாக் பசுல்’ (CARBON BLOCK BUZZLE) என்ற தலைப்பில் புத்தகம் எழுதி, அதனை அங்குள்ள மரியட்டா தினசரி நாளிதழ் வெளியிட்டது. அப்புத்தகத்தை 2 பிரபல நிறுவனங்களும் வெளியிட்டன.

இதையடுத்து இவனது சாதனையை பள்ளி நிர்வாகம் இளம் எழுத்தாளர் என்ற நிலையில் கின்னசுக்கு சிபாரிசு செய்துள் ளனர். அங்கு விதிகள் இடம் தராததால் தனது புத்தகத்தை ஆசியா புக் ஆப் ரிகார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரிகார்ட்ஸ் ஆகியவற்றுக்கு சிரிஷ் சுபாஷ் சமர்ப்பித்துள்ளான். அங்கு இச்சிறுவனின் சாதனை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, புனைக்கதை அல்லாத இளம் எழுத்தாளனின் புத்தகம் என்ற பாராட்டுதலுடன் சான்றிதழ் வழங்கி தங்கள் சாதனை பக்கங்களில் பதித்துள்ளன.