புதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு உச்ச நீதிமன்ற வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது: நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும்போது போதுமான அளவுக்கு விவாதங்கள் நடத்தாதது மிகவும் கவலை அளிக்கிறது. இது போன்று கொண்டு வரக்கூடிய சட்டங்களில் போதுமான தெளிவுகள் இருக்காது. முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் குறித்து விரிவான மற்றும் ஆழமான விவாதங்கள் நடைபெறும். இதனால், நீதிமன்றங்களின் தலையீடு குறைவாக இருக்கும். அப்படியே இருந்தாலும் அது சுலபமாக தீர்க்கும் வகையில் அமையும். விவாதமின்றி கொண்டு வரப்படும் சட்டங்களின் நோக்கத்தை நீதிமன்றத்தால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. இதுபோன்ற சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
வழக்கறிஞர்கள் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். அதனால், அறிவார்ந்த வழக்கறிஞர்கள் பொது வாழ்விற்கு வர முடியவில்லை. தற்போது உள்ள சூழலில் அவர்கள் பொது வாழ்வுக்கு வரவேண்டியது அவசியம். ஏனென்றால், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பல முன்னணி சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவருமே வழக்கறிஞர்கள் தானே? அவர்கள் அனைவரும் தங்கள் தொழிலை மட்டும் எந்த காரணத்தைக் கொண்டும் கடைசி வரையில் விட்டுக் கொடுக்கவில்லை. அதேப்போல், தங்களின் குடும்பம், சொத்து என அனைத்தையும் விட்டுதான் நாட்டுக்காக உழைத்துள்ளார்கள். எனவே, பணம் குறிக்கோளுடன் உள்ள வழக்கறிஞர்கள்அவர்கள் இனியாவது தங்களின் திறமைகளை நாட்டிற்காக அர்ப்பணிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.