அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

2021-08-16@ 00:59:29

சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம்  நடந்தது. தொடர்ந்து,  மாநகர எல்லைக்குள் பல்வேறு பகுதிகளில் காவல் துறையின் சார்பில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டு சுமார் 405 கிலோ கிராம் அளவு கொண்ட குட்கா, ஜர்தா, ஹான்ஸ் உட்பட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சென்னை  மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொழில் புரிவோர் கட்டாயம் தொழில் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

அவ்வாறு தொழில் உரிமம் பெற்று தொழில் செய்வோர் பொதுமக்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்களை விதிகளை மீறி விற்பனை செய்ய கூடாது. இந்த விதிமுறைகளுக்கு மாறாக  தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து காவல்துறை சோதனையின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டவர்களில்  6 வணிக கடைகளுக்கு சென்னை மாநகர முனிசிபல் சட்டபடி மேல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு விளக்கம் கேட்டு  குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. எனவே சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக கடைகள் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை எக்காரணம் கொண்டும் சேமித்து வைக்கவோ அல்லது விற்பனை  செய்யவோ கூடாது.  மீறினால் காவல் துறையுடன் இணைந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.