காபூல்: காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. காபூல் நகரை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றியதால் ஆயிர கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகியதையடுத்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கானி பதவி விலகியதால் தாலிபான்கள் துணைத் தலைவர் முல்லா பராதார் புதிய இடைக்கால அதிபராக பதவியேற்று இருப்பதாக தெரிகிறது.
ஆப்கானிஸ்தானை தன் வசப்படுத்தியவுடன் முதல் வீடியோவை வெளியிட்ட தாலிபான்கள் தலைவர், ஆப்கான் மக்கள் தங்களுடைய வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. எங்களுடைய சேவையைப் தேசத்துக்கு வழங்குவோம். அமைதியை நிலைநாட்டுவோம் என்று கூறியிருந்தார். எனினும் தாலிபான்கள் படையால் அச்சமடைந்த ஆப்கான் மக்கள் அந்நாட்டில் இருந்து வெளியேற முயற்சிக்கின்றனர். காபூல் விமான நிலையத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.
அந்த விமான நிலையம் தற்போது நோட்டோ கூட்டுப்படை வசம் இருக்கும் நிலையில், அங்கிருந்து மக்கள் முயற்சிப்பதை அறிந்த தாலிபான்கள் ராணுவ விமானங்களை தவிர மற்ற அனைத்து விமானங்களுக்கும் தடைவிதித்தனர். மேலும் காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காபூலில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக தாலிபான்கள் அறிவித்ததால் அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது. டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் 12.30 மணிக்கு செல்லவிருந்த விமானத்தை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.