100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருளுக்கு தடை வரைவு அறிவிக்கை வெளியீடு: உச்ச நீதிமன்றத்தில் அரசு தகவல்

2021-08-16@ 01:01:08

புதுடெல்லி: நாட்டில் 100 மைக்ரானுக்கும் குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான வரைவு அறிவிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. தேர்தலின் போது பயன்படுத்தப்படும் பேனர், பதாகைகளுக்கு பயன்படுத்தப்படும் பிவிசி உள்ளிட்ட பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கும்படி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த தீர்ப்பாயம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு 2019ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி  எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் நீதிபதி அனிருத்த போஸ் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தபோது, ‘100 மைக்ரானுக்கும் குறைவான தடிமன் கொண்ட பிவிசி உள்ளிட்ட பல்வேறு வகை  பிளாஸ்டிக்கை தடை செய்ய வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபனை இருந்தால் மக்கள் தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’ என்று ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி அறிக்கையை சமர்ப்பித்தார். இதை கேட்ட நீதிபதிகள், வரைவு அறிவிப்பிற்கான ஆட்சேபனைகளை இறுதி செய்த பிறகு, ‘ஒன்றிய யூனியன் பொருத்தமான  உத்தரவுகளை நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்,’ என்று கூறினர். பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்களுக்கு அடுத்தாண்டு முதல் தடை என்று ஒன்றிய அரசு சில நாட்களுக்கு முன் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.