திருமங்கலத்தில் பெண்ணை மிரட்டி தாக்கிய வாலிபர் கைது

2021-08-16@ 14:49:48

அண்ணாநகர்: திருமங்கலத்தில் நடந்து சென்ற ஒரு பெண்ணை கத்திமுனையில் மிரட்டி, அப்பெண்ணை சரமாரி தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருமங்கலம், பெரியார் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (43). இவரது மனைவி இளஞ்சியம் (40). இவர்களது மகன் மனோஜ் (27). நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மனோஜ் வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முரளி (32) என்பவர் வழிமறித்து, மனோஜிடம் வீண்தகராறில் ஈடுபட்டு சரமாரியாகத் தாக்கினார்.

வீட்டின் அருகே மகன் மனோஜின் அலறல் சத்தம் கேட்டு இளஞ்சியம் வெளியே ஓடிவந்தார். மகனை தாக்கிய முரளியை தடுக்க முயன்றார். இதில் ஆத்திரமான முரளி,  கத்திமுனையில் மிரட்டி, இளஞ்சியத்தை கைகளால் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து திருமங்கலம் போலீசில் இளஞ்சியம் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று அதே பகுதியில் பதுங்கியிருந்த முரளியை சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில், அவர் இளஞ்சியத்தை கத்திமுனையில் மிரட்டி, அவரையும் மகன் மனோஜ் ஆகியோரை சரமாரியாக தாக்கியதாக ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் ஏற்கெனவே 2019-ம் ஆண்டு, அடிதடி வழக்கில் குண்டாசில் சிறை சென்று திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.