திமுக 100 நாள் சாதனை துண்டு பிரசுரம் வினியோகம்

2021-08-15@ 01:19:03

உத்திரமேரூர்: திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாள் சாதனை குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. திமுக ஆட்சியின் 100 நாள் சாதனை குறித்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் நேற்று நடந்தது. சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல்மாலிக், துணை அமைப்பாளர் பெ.மணி, பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர்கள் சக்திவேல், வெங்கடேசன் வரவேற்றனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, சாலவாக்கம் பஜார் வீதியில் உள்ள பொதுமக்களுக்கு, திமுக ஆட்சியின் 100 நாள் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருப்போரூர்:  திமுக ஆட்சி தொடங்கி 100 நாட்கள் ஆனதையொட்டி திருப்போரூர் வடக்கு, தெற்கு ஒன்றியங்கள் மற்றும் நகர திமுக சார்பில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி திருப்போரூர் பஸ் நிலையத்தில் நடந்தது. முன்னாள் எம்எல்ஏ இதயவர்மன் இனிப்பு வழங்கி திமுக அரசின் 100 நாள் சாதனை குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர், நகர செயலாளர் தேவராஜ், நகர நிர்வாகிகள் டி.டி.சேகர், பரசுராமன், பாலு, கோபி கிருஷ்ணன், பலராமன், வீ.சந்திரன், சுப்பிரமணி, ஜெயச்சந்திரன், இரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.  அதேபோல் திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம், நாவலூர், படூர், கோவளம், தாழம்பூர், சிறுசேரி, மாம்பாக்கம், புதுப்பாக்கம், மேலக்கோட்டையூர், வட நெம்மேலி, செம்பாக்கம், மானாம்பதி, தண்டலம் ஆகிய ஊராட்சிகளிலும் திமுக அரசின் 100 நாள் சாதனை துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூர் திமுக சார்பில் திமுக ஆட்சியின் 100 நாள் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூர் செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். பஸ் நிலையத்தில் இருந்து ராஜவீதி, ரவுண்டானா, மார்க்கெட் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஊர்வலமாக சென்று, அங்குள்ள கடைகளிலும், மக்களிடமும் 100 நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினர்.