தமிழக அரசின் 100 நாள் சாதனையை வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாட்களில் இரண்டு மடங்காக உழைப்போம்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

2021-08-15@ 00:07:11

சென்னை: தமிழக அரசின் 100 நாள் சாதனையை வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாட்களில் இரண்டு மடங்காக நாங்கள் உழைப்போம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி  முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று திமுக ஆட்சிக்கு வந்து இன்றோடு 100 நாட்கள் ஆகிறது. அந்த பெருமையின் அடையாளமாக, கழக ஆட்சியையும் என்னையும் பாராட்டி உரையாற்றி இருக்கக்கூடிய, முன்வரிசையில் அமர்ந்திருக்க கூடிய பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் முதலில் இதயப்பூர்வமான நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

100 நாட்கள் கடந்ததை பற்றி இங்கே நீங்கள் எல்லாம் பெருமையோடு பேசினீர்கள். ஆனால் எனக்கு அடுத்து வரும் காலத்தை பற்றிய நினைப்பாகவே இருந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன் கழகத்துக்கோ, எனக்கோ இருந்த எதிர்பார்ப்பை விட இந்த 100 நாட்களில் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகி இருக்கிறது. நீங்கள் எல்லாம் இப்போது பாராட்டினீர்கள் என்றால் பணியை முடித்துவிட்டதற்காக அல்ல, இன்னும் பணியை செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்தியிருக்கிறீர்கள், உற்சாகப்படுத்தியிருக்கிறீர்கள். அதைத்தான் நான் உணர்கிறேன்.

திமுகவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட, இப்போது தேர்தல் நடந்தால் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். அந்தளவுக்கு ஒரு சிறப்பை, பெயரை பெற்றிருக்கிறோம். அந்த பெயரை காலம் எல்லாம் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணமாக இருக்கிறது. என்னுடைய பணிக்கு தோளோடு தோள் நிற்கும் நம்முடைய அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் நான் மீண்டும் மீண்டும் இந்த நேரத்தில்  நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இங்கே நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஆட்சிக்கு வரும்போது, கொரோனா என்ற ஒரு பெருந்தொற்று நம்மை சூழ்ந்திருந்தது. அதனை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நாம் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட்டோம். முதல் ஒரு மாத காலம் ஆம்புலன்ஸ் சத்தம்தான். அந்த சத்தம் நம்மை நிம்மதியாக இருக்கவிடவில்லை. அதையும் தாண்டி, மருத்துவமனையில் இடம் இல்லை, ஆக்சிஜன் பற்றாக்குறை இப்படி ஏதாவது ஒரு செய்தி வந்து நம் மனதை வாட்டி வதைத்துக்கொண்டே இருந்தது. இதையெல்லாம் சமாளிக்கத்தான் உடனடியாக ஒரு கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தினோம்.

மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்துக் கேட்டோம். அதை முடிந்த வரைக்கும் நாம் நிவர்த்தி செய்தோம். இன்னும் சொல்லப்போனால் கோரிக்கைகளே வராத, வர முடியாத ஒரு சூழ்நிலையை இப்போது உருவாக்கியிருக்கிறோம். லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதும் அவர்களுக்கு அரவணைப்பாக இருந்ததும்தான், என்னைப் பொறுத்தவரை, இந்த 100 நாளில் செய்த சாதனையில் பெரிய சாதனையாக நான் கருதுகிறேன். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரைப்போல இந்த அரசு நடவடிக்கை எடுத்தது என்று வருங்கால தலைமுறை சொல்ல வேண்டும் நம்மை பற்றி.

தேர்தல் வாக்குறுதிகளை இப்போது நான் முழுதாக எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டோம் என்று சொல்லி உங்களையும் ஏமாற்றி என்னையும் ஏமாற்றிக்கொள்ள தயாராக இல்லை. படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம், நிறைவேற்றுவோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது, அது உறுதி. நேற்றைய தினம், முதல் நிதிநிலை அறிக்கையை நம்முடைய நிதியமைச்சர் இங்கே தாக்கல் செய்திருக்கிறார். நமது அரசின் நூறாவது நாளில், தமிழகத்தின் வரலாற்றில் பதிவாக கூடிய வகையில், நீங்கள் எல்லாம் பெருமையோடு சொன்ன அடிப்படையில், வேளாண்துறையின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து துறைகளுக்கும் தாயுள்ளத்தோடு திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரி இல்லாத நிதிநிலை அறிக்கையை கொடுத்துள்ளோம். இப்போதுதான் தொடங்கி இருக்கிறோம். படிப்படியாக அனைத்து வாக்குறுதியையும் நிச்சயமாக நிறைவேற்றிக் காட்டுவோம். யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். இங்கே படமாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் கலைஞர் சொன்னது என்னுடைய மனதில் இன்னும் ஆழமாக இருக்கிறது. ‘சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்’. அவர் இருந்து செய்ய வேண்டியதை அவர் மகன் நிச்சயம் செய்வான் என்ற உறுதியை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஐந்து ஆண்டு கால ஆட்சியில் 100 நாட்கள் என்பது பதினெட்டில் ஒரு சதவிகிதம்தான். ஆனால் இந்த 100 நாட்களில் இந்த அரசு செய்த சாதனைகளை நான் இங்கே பட்டியல் போட்டால் மூன்று மணிநேரம் ஆகும். அதனால் அதை பட்டியல் போட விரும்பவில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அமைச்சர்களும் சொல்வார்கள், நானும் சொல்லக் காத்திருக்கிறேன். தமிழ்நாட்டின் இழந்த பெருமையை மீட்டெடுக்க எங்களால் முடியும் என்ற நம்பிக்கை தரும் நாட்களாக இந்த 100 நாட்கள் அமைந்துள்ளது.

நமது அரசு என்று சொல்லக்கூடிய அளவுக்குத்தான் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. எனவே வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள். வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாட்களில் இரண்டு மடங்காக நாங்கள் உழைப்போம், உழைப்போம், உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார். 100 நாட்களில் இந்த அரசு செய்த சாதனைகளை நான் இங்கே பட்டியல் போட்டால் மூன்று மணிநேரம் ஆகும். அதனால் அதை செய்ய  விரும்பவில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அமைச்சர்களும் சொல்வார்கள், நானும் சொல்லக் காத்திருக்கிறேன்.