கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அகமத். இவரது மகன் இம்ரான் (22). வெல்டிங் கடையில் வேலை செய்து வந்த இவர், சண்டைக்கோழிகள் வாங்கி விற்கும் வியாபாரமும் செய்து வந்தார். மேலும் சண்டைக்கோழி பந்தயங்களில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், கிருஷ்ணகிரி நேதாஜி சாலை பகுதியை சேர்ந்த மார்கோ (56) என்பவரிடம் சண்டைக்கோழியை வாங்கி, ஆந்திர மாநிலத்தில் நடந்த பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். ஆனால், அந்த பந்தயத்தில் கோழி சரியாக மோதவில்லை என தெரிகிறது. இதனால் இம்ரான், மார்கோவிடம் சென்று நீங்கள் கொடுத்த கோழி பந்தயத்தில் சரியாக ஆடவில்லை என கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் உருவானது.
இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி பழையபேட்டை தியேட்டர் அருகில் இம்ரான், மார்கோ இடையே சண்டைக்கோழி சம்மந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மார்கோ மற்றும் அவரது மகன் குல்பி (எ) மணிமாறன் (30) ஆகிய இருவரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் இம்ரானை சரமாரியாக குத்தியுள்ளனர். இதை தடுத்த இம்ரானின் அண்ணன் சலாவுதீன்(36) என்பவரையும் சரமாரியாக குத்தி விட்டு, இருவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் இம்ரான் பரிதாபமாக உயிரிழந்தார். சலாவுதீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, மார்கோ, அவரது மகன் மணிமாறன் ஆகியோரை தேடி வருகின்றனர்.