சாதனை சரித்திரம் படைக்கும் திமுக அரசு: மதிமுக மாவட்டசெயலாளர்கள் கூட்டத்தில் பாராட்டு

2021-08-15@ 00:07:09

சென்னை: மதிமுக மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமை செயலாளர்கள் கூட்டம்  நேற்று எழும்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்துக்கு அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பொருளாளர் கணேச மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* தமிழகத்தில் திராவிட இயக்க ஆட்சி தொடங்கிய நூறாவது ஆண்டில், 2021 மே 7ம் நாள் தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களுக்கு வாழ்த்துகள்.
* கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தமிழக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும், அரசு மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் நன்றி.
* முதல்வர் பொறுப்பு ஏற்ற முதல் நாளிலேயே, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல் கையெழுத்திட்டு மு.க.ஸ்டாலின்  பிறப்பித்த 5 அரசு ஆணைகளும் நூறு நாட்களில் செயலாக்கம் பெற்று, மக்களின் நம்பிக்கையைப் பெற்று இருப்பதற்கு மதிமுக சார்பாக பாராட்டு.
* மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று அறைகூவல் விடுத்துள்ள கர்நாடக பாஜ அரசின் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடும் கண்டனம்.
* பாசிசப் பாதையில் பயணிக்கும் பாஜ அரசு, தனி மனித உரிமையையும் அரசியல் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமையையும் தட்டிப்பறித்து வருகின்றது. உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் மோசமான உளவு வேலையில் ஈடுபட்ட ஒன்றிய பாஜ அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.
* விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக  உயர்த்தி வரும் பாஜ அரசுக்கு இக்கூட்டம் கண்டனம் தெரிவிப்பதுடன், தமிழக அரசு பெட்ரோல் மீதான வரி ரூ.3 குறைத்து இருப்பதற்கு இக்கூட்டம் பாராட்டுத் தெரிவிக்கின்றது.
* பாரம்பரிய மீனவர்களை ஒடுக்கி, வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், நமது கடல் வளத்தை பன்னாட்டு அந்நிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் வகையிலும் கொண்டுவரப்பட்டு இருக்கின்ற கடல்மீன் வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) சட்ட முன் வரைவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.