விருதுநகர் தனியார் விடுதியில் 1,083 மது பாட்டில்கள் பதுக்கிய 2 பேர் கைது

2021-08-14@ 12:05:49

விருதுநகர் : விருதுநகர் தனியார் விடுதியில் 1,083 மதுபாட்டில்களை பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.கொரோனா ஊரடங்கால் எப்எல் 2 பார்களில் மது விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பார்களிலும் டாஸ்மாக் கடைகளில் விலைக்கு வாங்கி மதுபாட்டில் விற்பனை இரவு, பகலாக நடைபெறுவதாக புகார் எழுந்தது. விருதுநகர் - மதுரை ரோட்டில் மேற்கு போலீஸ் நிலையம் எதிரில் உள்ள தனியார் லாட்ஜில் உள்ள அறைகளில் 24 மணிநேரமும் மதுவிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி அருணாசலம் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அங்கு 1,083 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.18,300 பணம் சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பார் மேலாளர் காந்திராஜன் (65), விற்பனையாளர் வேல்முருகன் (45) இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.