*செல்லும் என வங்கிகள் தகவல்
நெல்லை : 5 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ள நிலையில் இந்த நோட்டுக்களை வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரூ.10க்கும் குறைவான ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், 5 ரூபாய் நோட்டுக்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன. எனினும் ஒன்று, இரண்டு, ஐந்து ரூபாய்களை பொறுத்தவரை நாணயங்களே அதிக புழக்கத்தில் உள்ளன.
இந்த ரூபாய் நோட்டுக்களை பொருத்தவரை புழக்கம் மிகக் குறைவாக உள்ளதால் புதிய ரூபாய் நோட்டுக்களை பார்ப்பது அரிதாக உள்ளது. இதனால் ஒன்று, இரண்டு, ஐந்து ரூபாய்களை பொறுத்தவரை பழைய, கிழிந்த, கந்தலான ரூபாய் நோட்டுக்களே புழக்கத்திற்கு வருகின்றன.இந்நிலையில் கடைகள், காய்கறி மார்க்கெட்டுகளில் ஐந்து ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால் ஏற்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. அதற்கு பதிலாக நாணயத்தையே கேட்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
ரிசர்வ் வங்கி ஐந்து ரூபாய் நோட்டுக்கள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் இந்த நோட்டுக்களை ஏற்க மறுப்பது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் சில சமயங்களில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, தற்போதும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. எனினும் இந்த ரூபாய்களில் நாணயங்களே அதிகம் புழங்கி வருகின்றன. ஐந்து ரூபாய் நோட்டுக்கள் இன்றளவும் புழக்கத்தில் உள்ளது.
வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், கடைகளில் 5 ரூபாய் நோட்டுக்கள் இன்னமும் புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் 5 ரூபாய் நோட்டுக்களை ஏற்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. வங்கிகளில் 5 ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.