விவசாயிகள் போராட்டம், விலைவாசி உயர்வு , பெகாசஸ் விவகாரத்தில் மவுனம்.. ஒன்றிய அரசை பொதுமக்கள் கேள்வி கேட்க காங்கிரஸ் அழைப்பு!!

2021-08-12@ 10:22:11

டெல்லி : பெகாசஸ் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒன்றிய அரசு மறுத்த நிலையில், பிரச்னையை மக்களிடம் கொண்டு செல்ல ஈதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அக்கல் பிரச்சனைகளை பேச ஒன்றிய அரசு மறுப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக விவசாயிகள் போராட்டம், விலைவாசி உயர்வு மற்றும் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெகாசஸ் உளவு விவகாரத்தில் ஒன்றிய அரசு மவுனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர்.

குறைந்தபட்ச விவாதம் கூட இன்றி குறைவான நேரத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறியுள்ள காங்கிரஸ், உலகின் மிக பெரிய ஜனநாயகம் ஆபத்தின் பிடியில் உள்ளதாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம், ஜனநாயகம், வாக்குகள் உள்ளிட்டவற்றை மோடி அரசு கேலிக்குள்ளாக்கி உள்ளதாகவும் இனியும் நாம் இதை தொடர விடாமல் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகள், ஒன்றிய அரசின் பிடிவாதம் குறித்து மக்களிடமே முறையிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஒன்றுகூட உள்ள ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், விஜய் சவுக் நோக்கி பேரணியாக செல்ல உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஜனநாயகம் கேள்விக்குறி ஆகி உள்ளதாக திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.அவை காவலர்கள் பெண் உறுப்பினர்களை நடத்திய விதமும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.விவசாயிகள் போராட்டத்திற்கு ஒன்றிய அரசு செவிமடுக்காத நிலையில், விலைவாசி உயர்வும் பெகாசஸ் விவகாரமும் பூதாகரமாக வெடித்துள்ளது. எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து போராட்டங்களை அறிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.