லண்டன்: இங்கிலாந்து- இந்தியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் அரங்கில் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில், கடைசி நாள் ஆட்டம் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டதால் இங்கிலாந்து தலை தப்பியது. இந்நிலையில் இந்த 2 அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.
வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் காயம் அடைந்துள்ளதால், 2வது டெஸ்டில் அவர் விளையாட மாட்டார் என அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. அவருக்கு பதிலாக அனுபவ ஸ்பின்னர் அஷ்வின் அல்லது அனுபவ வேகம் இஷாந்த் சேர்க்கப்படலாம். முதல் டெஸ்டில் மழையின் தயவால் தோல்வியின் பிடியில் இருந்து தப்பிய இங்கிலாந்து, புதிய வியூகங்களுடன் 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கத் தயாராகி உள்ளது. இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட ‘வரலாறு’ கொண்ட ஆல் ரவுண்டர் மொயீன் அலியை அவசரமாக சேர்த்துள்ளார்கள்.
அதே சமயம், அனுபவ வேகப் பந்துவீச்சாளர்கள் ஸ்டூவர்ட் பிராடு, ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவரும் காயம் அடைந்துள்ளது அந்த அணிக்கும் பின்னடைவை கொடுத்துள்ளது. இரு அணிகளும் வெற்றிக் கணக்கை தொடங்க மல்லுக்கட்டும் என்பதால், 2வது டெஸ்டி ல் அனல் தெறிக்கும் என்பதில் சந்தேகமில்லை.