முதுமலை முகாமில் உலக யானைகள் தினம் கோலாகல கொண்டாட்டம்!: யானைகளுக்கு பழங்கள், கரும்பு கொடுத்து சிறார்கள் மகிழ்ச்சி..!!

2021-08-12@ 14:31:15

நீலகிரி: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு முகாமில் உள்ள யானைகளுக்கு பல்வேறு வகையான சிறப்பு உணவுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் உலக யானைகள் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் யானைகளுக்கு பிடித்த பல்வேறு வகையான சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டது.

ஆதிவாசி சிறுவர்கள் மூலம் பலாப்பழம், அண்ணாச்சி, வாழை, மாதுளை, கரும்பு ஆகியவை யானைகளுக்கு அளிக்கப்பட்டது. அப்போது யானையின் வாழ்க்கை முறைகள், வனவளத்தில்  அவற்றின் முக்கியத்துவம், யானைகள் பாதுகாப்பின் அவசியம் குறித்து பழங்குடியினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பக யானைகள் முகாமில் 49 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த முகாமில் யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வரும் காட்டு யானைகளை விரட்டவும், அவற்றை பிடித்து கூட்டில் அடைத்து பழக்கப்படுத்துவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முதுமலை முகாமிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வன உயிரின ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் யானைகள் குறித்து பல்வேறு தகவல்கள் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.