திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்: பக்தி கோஷங்கள் எழுப்பி தரிசனம்

2021-08-12@ 14:51:24

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பி தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழக முழுவதும் மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கோயில்களில் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் கோயில் நடை திறக்கப்பட்டது. கொரோனா பாதுகாப்புவிதிமுறைபடி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், கொரோனாவின் 3வது அலை பரவவாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து முக்கிய விழாவின்போது கோயில் நடை மூடப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் பக்தர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். திருத்தணி முருகன் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி நடை சாத்தப்பட்டது. இதனால் அன்றைய தினம் கோயிலுக்கு வந்த மக்கள், ஏமாற்றம் அடைந்தனர். கோயிலுக்கு வெளியே தேங்காய் உடைத்தும் கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். தங்களது நேர்த்திக்கடனையும் கோயிலுக்கு வெளியே நிறைவேற்றி சென்றனர். இந்த நிலையில், கடந்த 2 நாளுக்கு பிறகு திருத்தணி முருகன் கோயிலில் இன்று காலை நடை திறக்கப்பட்டது.  இதையொட்டி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து முருகனை தரிசனம் செய்து சென்றனர். மலைக்கோயில் பகுதியில் நீண்டவரிசையில் காத்திருந்து மக்கள் தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் ‘’கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வெற்றிவேல், வீரவேல்’’ என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.