ஏடிஎம்மில் பணம் இல்லையா? வங்கிக்கு ரூ10,000 அபராதம்; அக். 1 முதல் அமல்

2021-08-12@ 01:15:04

மும்பை: ஏடிஎம்மில் பணம் இல்லாவிட்டால், வங்கிக்கு ரூ10,000 அபராதம் விதிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது அக்டோபர் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் எந்த நேரமும் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதிக்காக, ஏடிஎம் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.  ஆனால், சில சமயம் அவசரத்துக்கு பணம் தேவைப்படும்போது எந்த ஏடிஎம்மிலும் பணம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.

 இந்த நிலையை போக்கும் வகையில், ரிசர்வ் வங்கி புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளது. இதன்படி, வங்கிகள் தங்களது ஏடிஎம்மில் ஒரு மாதத்தில் 10 மணி நேரத்துக்கும் மேல் பணம் விநியோகம் செய்ய முடியாமல் இருந்தால், அந்த வங்கிக்கு ஒரு ஏடிஎம்முக்கு ரூ10,000 வீதம் அபராதம் விதிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வங்கி சாரா நிறுவனங்கள் இயக்கும் ஒயிட் லேபிள் ஏடிஎம்மாக இருந்தால், அந்த ஏடிஎம் இணைந்த வங்கியிடம் அபராதம் வசூலிக்கப்படும்.

பின்னர் சம்பந்தப்பட்ட வங்கி, ஒயிட்லேபிள் ஏடிஎம் வைத்துள்ள நிறுவனத்திடம் அபராதத்தை வசூலித்துக் கொள்ளும்.  சம்பந்தப்பட்ட வங்கி ஏடிஎம்மில் பணம் இல்லாமல் இருந்து, வாடிக்கையாளர் பணம்  எடுக்க முடியாமல் போனால், மேற்கண்ட அபராதம் விதிக்கப்படும். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதியில் இருந்து இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

Tags:

ஏடிஎம் அபராதம்