ஏடிஎம் மிஷினை கண்டுபிடித்தவர் பிறந்த மருத்துவமனையில் ஏடிஎம் இயந்திரம்: ஷில்லாங்கில் நெகிழ்ச்சி

2021-08-11@ 16:57:11

ஷில்லாங்: ஏடிஎம் இயந்திரத்தை கண்டு பிடித்தவர் பிறந்த ஷில்லாங் மருந்துவமனையில், ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.  மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள  கார்டன் ராபர்ட் மருத்துவமனையில், கடந்த 1925 ஜூன் 23ம் தேதி ஜான் அட்ரியன் ஷெப்பர்ட் பரோன் பிறந்தார். இவரது தந்தை, வில்ஃப்ரெட்  ஷெப்பர்ட் பரோன், சிட்டகாங் துறைமுக கமிஷனரேட்டு தலைமை பொறியாளராக  இருந்தார். அப்போது இது ஆங்கிலேயர்களின் பகுதியாக இருந்தது. சுதந்திர இந்தியாவிற்கு பிறகு, ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன்பின், வில்ஃப்ரெட்  ஷெப்பர்ட் பரோன் குடும்பம் லண்டன் சென்றது. கடந்த 1965ல்  ஏடிஎம் இயந்திரத்தை (பணம் எடுக்கும் இயந்திரம்) அட்ரியன் ஷெப்பர்ட்  பரோன் கண்டுபிடித்தார்.

இதன்பிறகு, 1967ம் ஆண்டில் லண்டனில் உள்ள ஒரு  வங்கியில் முதல் முதலாக ஏடிஎம் இயந்திரத்தை நிறுவினார். இவரது நினைவாக, ஷில்லாங்கில் உள்ள கார்டன் ராபர்ட் மருத்துவமனை வளாகத்தில் ஏடிஎம் இயந்திரத்தை எஸ்பிஐ வங்கி திறந்து வைத்துள்ளது. இந்த மருத்துவமனை நிறுவப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதால், அடுத்தாண்டு நூற்றாண்டு கொண்டாடப்பட உள்ளதால் அட்ரியன் ஷெப்பர்ட்  பரோனை கவுரவிக்கும் வகையில் ஏடிஎம் வைக்கப்பட்டுள்ளது. இதனை பலரும் பாராட்டி உள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனையின் மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் ரோகன் நோங்க்ரூம் கூறுகையில், ‘மருத்துவமனை வளாகத்தில் ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டதற்கு எஸ்பிஐ வங்கிக்கு நன்றி. இந்த இயந்திரத்தை கண்டுபிடித்தவர் (அட்ரியன் ஷெப்பர்ட்  பரோன்) எங்களது மருத்துவனையில் கடந்த 1925ல் பிறந்தார். அவரது நினைவாகவும், நூற்றாண்டு கொண்டாடவும் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டது’ என்றார்.