அபாய கட்டத்தில் கிறிஸ் கெய்ன்ஸ்: சிட்னி டாக்டர்கள் தகவல்

2021-08-11@ 14:45:54

சிட்னி: நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ன்ஸ் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று சிட்னியில் அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவருமான கிறிஸ் கெய்ன்ஸ், கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென அவர் மயங்கி சரிந்ததாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் செய்திகள் வெளியாகின.

பரிசோதனையில் அவரது இதயத்திற்கு செல்லும் முக்கியமான ரத்தக்குழாயின் உட்புறம் கிழிசல் ஏற்பட்டுள்ளது என தெரிந்தது. இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இருப்பினும் சிகிச்சைகளுக்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்காததால், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மாலை அவர் சிட்னியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று டாக்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிறிஸ் கெய்ன்ஸ் விரைவில் நலம் பெற வேண்டும் என்று நியூசிலாந்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன், வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே மற்றும் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்மி ஆர்மி ஆகியோர், ‘கெய்ன்ஸ் விரைவில் குணமடைவார்’ என்று நம்பிக்கை தெரிவித்து, டுவீட்டரில் பதிவிட்டுள்ளனர். நியூசிலாந்து அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள கிறிஸ் கெய்ன்ஸ், அவற்றில் 3,320 ரன்களை குவித்துள்ளார். 5 சதங்கள், 22 அரை சதங்களை விளாசியுள்ள அவர், டெஸ்ட் போட்டிகளில் 218 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதே போல் 215 ஒருநாள் போட்டிகளில் 4,950 ரன்களை குவித்துள்ள அவர் 4 சதங்கள் மற்றும் 25 அரை சதங்களை அடித்துள்ளார். 201 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.