தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தேனியில் ஓ.பி.எஸ்., எடப்பாடியில் இ.பி.எஸ். போராட்டம்..!!

2021-07-28@ 10:51:10

சேலம்: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இணை செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் எடப்பாடியில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக திமுக தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தபடி அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தை பொறுத்தவரை காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை.

இருப்பினும் போராட்டம் நடத்தி வருவவதால் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவதற்கான நடவடிக்கையும் காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதேபோல் தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.