பின்னடைவு

2021-07-23@ 00:02:38

பெகாசஸ் நிறுவனத்தில் உளவு மென்பொருள் மூலமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, உச்சநீதிமன்ற நீதிபதிகள், பிரபல பத்திரிகையாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பி வருகிறது. ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 45 நாடுகள் வரை இந்த மென்பொருளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இன்றைய நவீன காலத்தில் நமது தனிப்பட்ட தேவைகளுக்காக, ஆப்பிள், ஆன்ட்ராய்ட் செல்போன்களை நாம் அதிகளவில் உபயோகித்து வருகிறோம்.

இந்த வகை செல்போன்கள் மூலமாகத்தான் பெகாசஸ் மென்பொருள் ஊடுருவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நமது சொந்த பயன்பாட்டுக்காக பல்வேறு இணையதளங்கள், செயலிகள் மூலம் டிக்கெட் புக்கிங், மின்சார கட்டணம், பணத்தை பிற வங்கிக் கணக்குக்கு மாற்றுதல் உள்ளிட்டவைகளை மேற்கொள்கிறோம். எண்ணற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்கிறோம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யும் ஒரு செயலி, நமது செல்போனில் உள்ள தொடர்பு எண்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை, பார்க்கும் பயன்படுத்திக் கொள்ளும் வசதிகளை தரவேண்டுமென கேட்கிறது. மறுத்தால் அந்த செயலியை நாம் பயன்படுத்த முடியாது.

நமது தனிப்பட்ட உரிமை இப்படித்தான் பறி போகிறது என்பதை உணர வேண்டும். அது மட்டுமல்ல... தொடர்பு எண், ஆதார் எண், பான் கணக்கு எண் உள்ளிட்டவைகளையும் சில செயலிகள் பெற்றுக் கொள்கின்றன. சில பண பரிவர்த்தனை செயலிகளில் உங்கள் செல்போன் எண்ணை பதிவு செய்தாலே போதும். உங்கள் வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை, அடுத்த சில வினாடிகளில் காண்பிக்கும். இது மிகவும் ஆபத்தானது. இதன் மூலம் ஒரு செயலி, நமது தனிப்பட்ட தகவல்களை, ரகசியங்களை எளிதாக பெற்றுக் கொள்ள முடிகிறது. அதாவது, உள்ளங்கையிலே ஒரு உளவு சாதனத்தை வைத்துக் கொண்டே உலா வருகிறோம்.

பெகாசஸ் ஸ்பைவேர் கூட ஒரு மிஸ்டு காலாகவோ, ஒரு எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் கால், அறிமுகமில்லாத எண்களிடம் இருந்து வரும் லிங்க் மூலமாகவும் அல்லது குறிப்பிட்ட சில செயலிகள் வழியாகவோ தான் ஒரு செல்போனுக்குள் ஊடுருவுகிறது என்பதை கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனமானது, பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளை அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்து வருகிறது. அந்தவகையில் இந்த விவகாரம், ஒன்றிய அரசுக்கு பெரும் தலைவலியை தந்துள்ளது.

ஒன்றிய அரசானது இந்த மென்பொருளை உளவு பார்க்க பயன்படுத்தியதா என்ற எதிர்க்கட்சியினரின் கேள்விக்கு இதுவரை, பாஜ அரசு தரப்பில் சரியான விளக்கம் அளிக்கவில்லை. நாட்டின் வளர்ச்சி பற்றிய அக்கறையின்றி, பிறகட்சிகளை வேரறுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து, பாஜ அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவ்விவகாரம் தேசிய அரசியலில் பாஜவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்துமென அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Tags:

Regression பின்னடைவு