சென்னை: நீட் தேர்வு நடைபெறும் தேதியை ஒன்றிய கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்வை ரத்து செய்து அதற்கான அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா 3ம் அலை ஆரம்பித்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறியிருக்கும் நிலையில், செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள திருமாவளவன், இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா 3ம் அலை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உச்சத்தில் இருக்கும் என்றும் அப்போது நாள் ஒன்றிற்கு 5 லட்சம் பேர் பாதிக்கப்படுவர் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதை திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நேரத்தில் நீட் தேர்வை நடத்த திட்டமிட்டிருப்பது மாணவர்களின் உயிரை பற்றி ஒன்றிய அரசு கவலை படாததையே காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
3வது அலையின் போது 8 மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை செயலர் கூறியிருக்கும் நிலையில் தற்போது டெல்டா பிளஸ் வைரஸும் உலகத்தையே அச்சுறுத்தி வருவதையும் திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். மாநிலங்களுக்கு போதிய தடுப்பூசியும் வழங்கப்படாத நிலையில், நீட் தேர்வுக்கான தேதியை அறிவித்திருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல என்றும் அவர் சாடியுள்ளார்.