தஞ்சையில் விவசாயிகளின் நில பத்திரங்களை வைத்து ரூ.48 கோடி மோசடி!: ஆலை அதிபர் மீது நடவடிக்கை கோரி விவசாயிகள் போராட்டம்..!!

2021-07-13@ 10:42:18

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளின் நில பத்திரங்களை வாங்கி 48 கோடி ரூபாய் வங்கி கடன் பெற்று ஏமாற்றியதாக தனியார் சர்க்கரை ஆலை அதிபர் மீது குற்றம்சாட்டியுள்ள விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது. 15 ஆயிரம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய 80 கோடி ரூபாய் நிலுவை தொகையை 3 ஆண்டுகளாக வழங்காமல் பாபநாசம் திருஆரூரான் ஆலை அதிபர் ஏமாற்றி வருவதாக விவசாயிகள் கூறியுள்ளனர். 242 விவசாயிகளின் நில பத்திரங்களை பல்வேறு வங்கிகளில் 48 கோடி ரூபாய்க்கு அந்த ஆலையின் அதிபர் அடமானம் வைத்துள்ளார் என்பது கரும்பு விவசாயிகளின் குற்றச்சாட்டாகவும்.

கடன் தவணையை அடைக்கும்படி வங்கிகள் தங்களை நிர்பந்தம் படுத்துவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளார். பாபநாசத்தில் இயங்கி வரும் திருஆரூரான் சர்க்கரை ஆலையின் அதிபர் ராம் வி.தியாகராஜனை உடனே கைது செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவரிடம் உள்ள தங்களது நில பத்திரங்களை மீட்டு தர கோரி முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். மோசடி புகார்கள் காரணமாக திருஆரூரான் ஆலை சீல் வைக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ள விவசாயிகள், கடந்த அதிமுக ஆட்சியில் பல முறை புகார் அளித்தும் ராம் வி.தியாகராஜன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.