வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட கோயில் சிலைகள் மீட்க நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

2021-07-13@ 01:07:32

நாகர்கோவில்: வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட கோயில் சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஆய்வு செய்தார். பத்மநாபபுரத்தில் உள்ள கல்குளம் நீலகண்டசுவாமி கோயிலில் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் இருக்கின்ற இதுபோன்ற 100 ஆண்டுகளை கடந்துள்ள குடமுழுக்கு நடைபெறாத கோயில்களை கணக்கிட்டு உடனடியாக அங்கு கும்பாபிஷேகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை நடத்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த கோயிலை பொறுத்தவரையில் எந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது என்பதாக வரலாறு இல்லை. அதுவும் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாக  இந்த கோயில் விளங்குகிறது. இங்கு குடமுழுக்கு நடத்த ஆயத்த  பணிகள் நடக்கிறது என்றார். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ‘‘வெளிநாட்டில் உள்ள சிலைகளை மீட்கவும், சிலைகள் மேலும் திருட்டு போகாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட கோயில் சிலைகள், தங்க ஆபரணங்கள் மீட்பு தொடர்பாக எஸ்.பி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடத்த ரூ.100 ேகாடி ஒதுக்கியதில் இந்த கோயிலிலும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.