ஐதராபாத் நிபுணர் பரபரப்பு தகவல்: ஜூலை 4ல் தொடங்கிய 3ம் அலை: சரிந்து வரும் தடுப்பூசி போடும் வேகம்

2021-07-13@ 00:26:44

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 4ம் தேதி கொரோனா 3ம் அலை தொடங்கி விட்டதாக ஐதராபாத் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், பிரபல இயற்பியலாளருமான விபின் வஸ்தவா கூறி இருப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, தடுப்பூசி செலுத்தும் வேகம் கடந்த இரு வாரங்களாக வெகுவாக சரிந்து வருவதாக ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா 2வது அலை வீரியம் குறைந்துள்ளது. தற்போது தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கு கீழ் வந்திருப்பதால், பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளது. ஆனாலும், செப்டம்பர் அல்லது அக்டோபரில் 3ம் அலை தாக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கடந்த 4ம் தேதியே கொரோனா 3வது அலை தொடங்கி விட்டதாக ஐதராபாத் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், பிரபல இயற்பியலாளருமான விபின் வஸ்தா கூறி உள்ளார்.

அவர் கூறுகையில், ‘‘கடந்த 461 நாட்களாக ஏற்பட்ட கொரோனா பலி குறித்த புள்ளி விவரங்களை கொண்டு கணித முறைப்படி கணிக்கையில், இந்தியாவில் 3வது அலை கடந்த 4ம் தேதி தொடங்கியது தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனா முதல் அலை முற்றிலும் குறைந்திருந்தது. அதன்பின் ஏப்ரல் இறுதியில் 2வது அலை உச்சத்தை அடைந்தது. அதாவது, பிப்ரவரி முதல் வாரத்திலேயே 2வது அலை தொடங்கி விட்டது. அது சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு உச்சத்தை அடைந்தது. அதே போல, பிப்ரவரி முதல் வாரத்தில் பலி எண்ணிக்கை எந்த அளவுக்கு குறைந்ததோ, அதே போன்ற நிலை தற்போது உள்ளது. பலி எண்ணிக்கை குறைந்திருப்பதை கொண்டு கணக்கிடுகையில், ஜூலை 4ம் தேதி 3ம் அலை தொடங்கியிருக்க வாய்ப்புள்ளது. எனவே இன்னும் 2 மாதத்தில் 3வது அலை உச்சத்தை எட்டலாம்’’ என்றார்.

எனவே, இப்போதிலிருந்தே மாஸ்க் அணிதல், தடுப்பூசியை வேகமாக செலுத்திக் கொள்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைபிடித்தால் மட்டுமே கொரோனா 3வது அலை தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால், ஒன்றிய அரசின் தடுப்பூசி புள்ளிவிவரங்கள் நேர்மாறாக உள்ளன.  கடந்த ஜூன் 21-27ம் தேதி வரையிலான ஒருவாரத்தில் தினசரி தடுப்பூசி போடுவோரின் சராசரி எண்ணிக்கை 61.14 லட்சமாக இருந்தது. இது, ஜூன் 28-ஜூலை 4ம் தேதி வரையிலான ஒருவாரத்தில் தினசரி எண்ணிக்கை 41.92 லட்சமாகவும், ஜூலை 5 -11ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் தினசரி எண்ணிக்கை 34.32 லட்சமாகவும் சரிந்துள்ளது. தற்போது மாநிலங்கள் கைவசம் 1.54 கோடி டோஸ் தடுப்பூசி இருப்பு இருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் கூறுகிறது. ஆனால், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள், மக்கள் தொகைக்கு ஏற்ப ஒன்றிய அரசு தடுப்பூசிகளை வழங்காததால் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றன.