ஒன்றரை வயது குழந்தை கருங்கல் வீசி கொடூர கொலை: பெரியப்பா கைது

2021-07-12@ 01:51:47

நெமிலி: ராணிப்பேட்டை மாவட்டம், ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (26), செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி கனிமொழி(21). இவர்களுக்கு கபிலேஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தது. தற்போது கனிமொழி மீண்டும் கர்ப்பமாக உள்ளார். இதனால், பிரசவத்திற்காக ஆறுமுகம் மனைவி கனிமொழி, மகன் கபிலேஷை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் ஆலப்பாக்கம் அடுத்த சிறுவளையம் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார். அங்கு கனிமொழியின் அக்கா, தங்கை, கணவர், குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு அனைவரும் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில் குழந்தை கபிலேஷ் தலையில் கருங்கல் வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தான். வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் அந்த வீட்டை மட்டுமே சுற்றி வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் விசாரித்தபோது கனிமொழியின் அக்கா கணவரான கட்டிட மேஸ்திரி பிரசாந்த் (26) குழந்தை மீது கருங்கல் வீசி கொன்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘கனிமொழி சமையல் செய்யாமல் செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த அவரது அக்கா கணவர் பிரசாந்த் கண்டித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.  அப்போது கனிமொழிக்கு ஆதரவாக அவரது தாயும் சேர்ந்து பிரசாந்த்தை திட்டியுள்ளார். ஆத்திரமடைந்த பிரசாந்த், கனிமொழியை கொலை செய்ய நள்ளிரவில் கருங்கல்லை வீசியுள்ளார். இருட்டில் தவறுதலாக குழந்தை மீது கருங்கல் விழுந்து இறந்துள்ளது” என்றனர். இதையடுத்து பிரசாந்த்தை போலீசார் கைது செய்தனர்.