நீதி கிடைக்கட்டும்

2021-07-08@ 00:24:49

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அறிவித்த பயிர் கடன் தள்ளுபடி மோசடி பற்றி ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 5-ம் தேதி, 110-வது விதியின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் 31.01.2021 வரை விவசாயிகள் பெற்ற பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக சட்டமன்றத்தில், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்மூலம், 16.43 லட்சம் விவசாயிகள் பலன் அடைவார்கள், தள்ளுபடி செய்யும் தொகையின் மதிப்பு ரூ.12,110 கோடி எனவும் அறிவித்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

ஆனால், கடன் தள்ளுபடி முறையாக நடக்கவில்லை. 136 சங்கங்களில் ரூ.203 கோடி, 229 சங்கங்களில் ரூ.108 கோடி, 155 சங்கங்களில் ரூ.11 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூ.1,350 கோடி அளவுக்கு பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி வசிக்கும் ஈரோடு மாவட்டத்தில் ரூ.1,085 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள ரூ.12,110 கோடியில், இவ்விரு மாவட்டங்களில் மட்டும் ரூ.2,435 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவே, சந்தேகத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

தற்போது இந்த மோசடி தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. ஆய்வறிக்கையை வரும் 31.07.2021-க்குள் அந்தந்த இணை பதிவாளர்கள், கூட்டுறவு துறை பதிவாளருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விசாரணை முழு வீச்சில் துவங்கியுள்ளது. விவசாயம் செய்யாமல் வெறும் நிலத்தை மட்டும் காட்டி ஆதாயம் அடைந்தவர்கள் எத்தனை பேர், கடன் தள்ளுபடி செய்யப்படுகிற தகவல் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு, கடைசி இரண்டு மாதங்களில் கடன்பெற்ற அதிமுக புள்ளிகள் எத்தனை பேர், பல சொசைட்டிகளில் பணமே இல்லாமல், கடன் கொடுத்தது எப்படி, கடன் தள்ளுபடி தொகையில் இரு மாவட்டம் மட்டும் அதிகம் பயனடைந்தது எப்படி, இதன் பின்னணியில் யார் யார் உள்ளார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் இந்த விசாரணையில் விடை கிடைக்க உள்ளது.

 யார் தவறு செய்திருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. எனவே இந்த மோசடியில் யார், யார் கம்பி எண்ணப்போகிறார்கள் என்ற தகவல் மிக விரைவில் வெளிவர உள்ளது. பயிர்கடன் தள்ளுபடி என்றால், விளைநிலத்தில் காசை கொட்டி, ஒரு பைசாகூட திருப்பி எடுக்க முடியாமல், இயற்கை பேரிடரில் சிக்கி பரிதவிக்கும் உண்மையான விவசாயிகளுக்கு போய் சேர வேண்டும். மாறாக, தில்லுமுல்லு வேலையில் இறங்கி, தில்லாலங்கடி காரியம் மூலம் அரசு கஜானாவை காலியாக்கும் நபர்களுக்கு சென்றுவிடக்கூடாது. இதனை மக்களின் ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கண்டிப்பாக செய்யும்.