திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கொல்லம் அருகே சாத்தனூர் கல்லுவாதிக்கல் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (30). இவரது மனைவி ரேஷ்மா (26). இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை இருந்தது. விஷ்ணுவின் அண்ணன் ரஞ்சித். அவரது மனைவி ஆர்யா (24). விஷ்ணுவின் சகோதரி மகள் கிரீஷ்மா (23). அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜனவரி 5ம் தேதி விஷ்ணுவின் வீட்டிற்கு அருகே ரப்பர் தோட்டத்தில் பச்சிளம் குழந்தை கிடந்தது. பாரிப்பள்ளி போலீசார் குழந்தையை மீட்டு. மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பினர்.
அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.விசாரணையில் அது ரேஷ்மாவின் குழந்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ரேஷ்மாவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முகம் தெரியாத ஒரு பேஸ்புக் காதலனுக்காக குழந்தையை காட்டில் வீசியதாக கூறினார். பேஸ்புக் மூலம் அருண் என்ற வங்கியில் பணிபுரியும் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், 2வது குழந்தை இருந்தால் ஏற்று கொள்ள முடியாது என்று காதலன் கூறியதால் குழந்தையை கொல்ல தீர்மானித்ததாகவும் அவர் கூறினார். இதையடுத்து, ரேஷ்மாவின் பேஸ்புக் காதலன் யார்? என போலீசார் நடத்தினர்.
அதில் வெளியான தகவல்கள் பற்றிய விவரம் வருமாறு: ஆர்யாவின் சிம்கார்டில் இருந்து தான் பேஸ்புக்கை பயன்படுத்தி வந்துள்ளார் ரேஷ்மா. இதையடுத்து, ஆர்யாவை கடந்த 10 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு ஆஜராக போலீசார் கூறினர். ஆனால், ஆர்யாவும், விஷ்ணுவின் சகோதரி மகள் கிரிஷ்மாவும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்தனர். ரேஷ்மா தனது குழந்தையை கொன்றதில், இந்த 2 பேருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதினர். கிரிஷ்மாவின் செல்போனை பரிசோதித்தபோது அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு அமல் என்பவருடன் பேசியது தெரியவந்தது.
இதையடுத்து, அமலை கண்டுபிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. கிரிஷ்மாவும், ஆர்யாவும் சேர்ந்து ரேஷ்மாவை விளையாட்டாக ஏமாற்றுவதற்காக, அவருடன் கடந்த ஒன்றரை வருடங்களாக அருண் என்ற பெயரில் சாட்டிங் செய்து வந்துள்ளனர். விளையாட்டாக தொடங்கிய சம்பவம் இந்த அளவுக்கு விபரீதமாகும் என்று 2 பேரும் நினைத்து பார்க்கவில்லை. பிறந்த குழந்தையை ரேஷ்மா வீசி கொன்றது 2 பேருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவரங்களை கிரிஷ்மா அமலிடம் கூறியுள்ளார். போலீஸ் கைது செய்வார்கள் என்று அஞ்சிதான் கிரிஷ்மாவும், ஆர்யாவும் தற்கொலை செய்து கொண்டது தற்போது தெரியவந்து உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ரேஷ்மா மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.