பிரிஸ்டல்: இங்கிலாந்து அணியுடன் பிரிஸ்டலில் நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 166 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பிரிஸ்டல் கவுன்ட்டி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. இலங்கை முன்னணி வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுக்க, அந்த அணி 20.4 ஓவரில் 87 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. 7வது வீரராகக் களமிறங்கிய தசுன் ஷனகா ஒரு முனையில் போராட, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் அடிக்கத் தவறினர். இலங்கை அணி 41.1 ஓவரில் 166 ரன்னுக்கு சுருண்டது. அவிஷ்கா 14, ஒஷதா 18, ஹசரங்கா 20, சமிகா கருணரத்னே 11, துஷ்மந்த சமீரா 16 ரன் எடுத்தனர். தசுன் ஷனகா 48 ரன்னுடன் (65 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் டாம் கரன் 4, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி தலா 2, அடில் ரஷித் 1 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி துரத்தலை தொடங்குவதற்கு முன்பாக, கனமழை கொட்டியதால் ஆட்டம் தடைபட்டது.