விழுப்புரம்: விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் கார் மோதி தம்பதி உள்பட 4 பேர் பலியாகினர். சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் ஜெயபாலன் (39). இவர் நேற்று காலை சென்னை விமான நிலையத்துக்கு சென்று துபாயில் இருந்து வந்த சின்னசேலம் பகுதியை சேர்ந்த தனது அக்கா, அவரது மகளை அழைத்து கொண்டு காரில் ஆத்தூர் சென்று கொண்டிருந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் வந்தபோது, திடீரென சாலையை கடக்க முயன்ற சின்னதச்சூரை சேர்ந்த செல்வம் (56) மீது கார் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சர்வீஸ் சாலையில் ஓடியது. அப்போது, விக்கிரவாண்டி கக்கன் நகரை சேர்ந்த தயாளன் (62), அவரது மனைவி சந்திரா(58) ஆகியோர், பைக்கில் நின்றிருந்த மணிகண்டன்(33) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தனர்.
தாறுமாறாக வந்த கார் இவர்கள் 3 பேர் மீதும் மோதிவிட்டு, சாலையோரம் வயல்வெளி பள்ளத்தில் இறங்கியது. இதில் செல்வம், தயாளன், சந்திரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார். ஜெயபாலன் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது அக்கா, அக்கா மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.