3 பேரை கொன்றதாக பிடித்து அடைப்பு மரக்கூண்டிலிருந்து சங்கர் யானை 4 மாதத்துக்கு பின் விடுவிப்பு

2021-07-05@ 02:16:22

கூடலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா, மழவன் சேரம்பாடி பகுதியில் உள்ள கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டத்தில் தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேரை கொன்ற காட்டு யானை சங்கர், கடந்த பிப்ரவரி 12ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. அதன்பின், முதுமலை புலிகள் காப்பகம் அபயம் யானைகள் முகாமில் உள்ள மரக் கூண்டில் அடைக்கப்பட்டது. இந்த யானையின் பராமரிப்பிற்காக விக்ரம் என்ற பாகன், உதவியாளர் சோமன் ஆகியோர் நியமிக்கப்பட்டு முகாம் சூழலுக்கு யானை கூண்டில் வைத்து பழக்கப்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த யானை பாகனின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நெருங்கி பழக துவங்கி உள்ளது. இதையடுத்து, யானையை மரக்கூண்டில் இருந்து வெளியே கொண்டு வந்து மற்ற யானைகளுடன் சேர்த்து பழக்கப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

4 மாதங்களுக்குப் பின் சங்கர் யானை நேற்று காலை 10 மணியளவில் மரக் கூண்டிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. முன்னதாக, யானைக்கு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல், இணை இயக்குனர் தர் ஆகியோர் யானைக்கு கரும்பு வழங்கினர். பின்னர், எந்தவித பிரச்னையும் இன்றி பாகன்களுடன் கூண்டில் இருந்து அமைதியாக யானை வெளியே வந்தது. யானைக்கு மீண்டும் பழங்கள் வழங்கி வனத்துறையினர் வரவேற்றனர். பாதுகாப்பிற்காக நான்கு புறமும் கும்கி யானைகள் நிற்க வைக்கப்பட்டன.

சுமார் ஒரு வருடமாக சேரம்பாடி பகுதி மக்களை அச்சுறுத்தியும், மனித உயிர்களை பலி வாங்கியும் வந்த இந்த யானை கூண்டில் இருந்து மிக சாதுவாக வெளியே வந்தது பார்ப்பவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 4 மாதத்திற்கு பின் கூண்டிலிருந்து வெளியே வந்துள்ள இந்த யானையை, முகாம் யானைகளுடன் சேர்த்து வளர்க்கவும்,  கும்கிகள் மூலம் பயிற்சி அளித்து முகாம் சூழலுக்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.